பிரபலமான இடுகைகள்

சசிகலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சசிகலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஐ சப்போர்ட் சசிகலா

ஐ சப்போர்ட் சின்னம்மா சசிகலா.

சின்னம்மா அவர்களின் அளப்பறிய திறமை காரணமாகத் தான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.

ராஜாஜி, காமராஜர், அண்ணா அமர்ந்த முதல்வர் நாற்காலிக்கு 'இன்ச்' அளவிற்கு நெருங்கி நிற்கிறார் என்றால் அது அவரது உழைப்பு மற்றும் திறமை. படிப்படியாகத் தான் முன்னேறி இருக்கிறார். இதை எல்லோரும் மறைக்கிறார்கள்.

கணவர் அரசுப் பணியில் இருக்கிறார் என்று சும்மா இருந்துவிடாமல், வெளிநாடு சென்று வீடியோ தொழில் குறித்து கற்றறிந்தார். அப்போது யாருமே அதற்காக மெனக்கடாத காலம். இந்தத் தொழில் பிற்காலத்தில் சிறக்கும் என உணர்ந்தது தான் அவரது திறன். அந்த அடிப்படையில் தான் பிற்காலத்தில் ஜெயலலிதா இந்த உயரத்தை அடைந்திடுவார் என கணித்து அவர் நட்பை தேடிப் பிடித்தார். இது அவரது 'கணிப்பை' உறுதி செய்கிறது.

கணவரின் அரசுப் பணியை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியரின் நட்பைப் பெற்றார். அவர் மூலம் தான் ஜெயலலிதாவை நெருங்கினார், ஒரு நிகழ்ச்சிக்காக. அத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஜெயலலிதாவை அணுகி அவருக்கு உதவிகள் புரிந்தார். அதன் மூலம் ஜெ'வின் அறிவிக்கப்படாத உதவியாளர் இடத்தைப் பிடித்தார். இது அவரது 'பழகும் பண்பை' வெளிப்படுத்துகிறது.

1991ல் ஜெயலலிதா ஆட்சியை பிடித்த உடன், தன்னை உடன்பிறவா சகோதரியாக அறிவிக்க வைத்தார். தனது அக்காள் மகன் சுதாகரனை, ஜெயலலிதாவின் 'வளர்ப்பு மகனாக'  ஆக்கினார். அவர் திருமணத்தில் இருவரும் ஒட்டியாணம் அணிந்து நடந்தக் காட்சி தான் இன்றைக்கும் அவரது முத்திரை. இது அவரது 'லாபியிங் பவரை' காட்டுகிறது.

1996 திமுக ஆட்சியில், சொத்துக்குவிப்பு வழக்கின் போது, ஜெயலலிதா வாயால் சசிகலா குரூப்பை ஒதுக்கி வைப்பதாக அறிவிக்க வைத்து, பிறகு கூடி கும்மியடித்தது வரலாறு. அப்புறமும் உடன்பிறவா சகோதரியாய் பயணித்தார். ஜெயலலிதாவாலும் தவிர்க்க இயலவில்லை. அது தான் சசியின் 'ஈர்ப்புத் திறன்'. அது கடைசி வரை வேலை செய்தது, சசியின்  'ஆளுமையை' நிலைநாட்டியது.

2001ல் மீண்டும் அதிமுக ஆட்சி. கடந்த ஆட்சிக்காலம் போல் சிக்கலில் மாட்டாமல், இந்த முறை வெளி நாடுகளில் முதலீட்டை துவங்கினார். ஒரு தீவு கையகப் படுத்தப்பட்டது. குடும்பத்தில் ஒவ்வொருவராய் அரசியலில் அறிமுகப்படுத்தினார். பிசிறடித்து, 'அக்கா ஜெ' கோபத்திற்கு ஆளானால், அடுத்தவரை இழுத்து வந்தார். தினகரனில் துவங்கி டாக்டர்.வெங்கடேஷ் வரை இழுத்து வந்தார். இது அவரது 'குடும்ப பாசத்தை' உறுதிப் படுத்துகிறது.

2006 திமுக ஆட்சி வந்தபிறகு சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் உயிர் பெற்றது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சசி தான் எனக் காரணம் காட்டி , 'சசியை' போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார் ஜெயலலிதா. சசியும் வெளியேறினார். இரண்டே மாதங்கள் தான், சசி ஜெ-வை  சமாதானப்படுத்தி கார்டன் நுழைந்தார். மெல்ல, மெல்ல அதிகாரத்தில் தன் கரம் நுழைத்து ஓங்கச் செய்தார் சசி. இது அவரது 'சூழ்ச்சித் திறனை' வெளிக் கொணர்ந்துள்ளது.

2011 தேர்தல் குறித்து அவர்களுக்கே குழப்பம். ஆனால் ஆட்சி அமைந்தது. அப்போது தான், ஆட்சி அதிகாரத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். காவல்துறையில் 'தன்னர்'களை உயர் இடத்தில் கொண்டு வந்து அமர்த்தினார். கொஞ்சம், கொஞ்சமாக ஆக்டோபஸாய் கரம் விரித்தார், தமிழ்நாட்டை வளைத்துப் பிடித்தார். இது தான் இவரது 'மேலாண்மை'யை காட்டுகிறது.

2016ல் உடல்நலம் குறைந்த ஜெயலலிதாவை முன்னிறுத்தி பனியாற்றினார். வெற்றி பெற்ற பிறகு ஆட்சியை அதிகாரத்தோடு செலுத்தினார். 75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் என சொல்லியே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை உலகிற்கே காட்டாமல் வைத்திருந்தது இவரது 'ரகசியக் காப்புத் திறனை' எடுத்துக் காட்டுகிறது.

இப்படி சசிகலாவின் " 'கணிப்புத் திறன்', 'பழகும் பண்பு', 'லாபியிங் பவர்', 'ஆளுமை', 'குடும்பப் பாசம்', 'சூழ்ச்சித் திறன்', 'மேலாண்மை', 'ரகசியக் காப்புத் திறன்' "ஆகியவை வெளிப்பட்டுள்ளது. இனி இப்படியொருவர் கிடைக்கப் போவதில்லை. இவர் மாத்திரம் வந்தால், இந்தத் திறமைகளை எல்லாம் பயன்படுத்தி, இந்தியாவை உயர் வழிக்கு கொண்டு செல்வது எளிது.

இவர் பிரதமரானால், இந்தியா 'ஏக இந்தியா' ஆக முழு நடவடிக்கைகள் துவங்கும். எதிர்கட்சிகள் முடக்கப்படும்.  காவிரி, பாலாறு, பெரியாறு 'மொத்தமாக' முடிக்கப்படும். அயல்நாடுகள் கண்ட்ரோலுக்கு கொண்டு வரப்படும்.

# ஆதலால், ஐ சப்போர்ட் சின்னம்மா சசிகலா ஃபார் பி.எம். !

வியாழன், 29 டிசம்பர், 2016

மனிதர் உணர்ந்து கொள்ள...

அண்ணன் செங்கோட்டையனை நான் நிரம்ப ரசிப்பேன். அப்போது அவர் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர். நான் ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினர். ஆமாம் 2006ம் ஆண்டு. சட்டமன்றத்தில் அண்ணன் உறுமுவார். திமுக அமைச்சர்கள் பேசுவதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தலையை மறுத்து,மறுத்து ஆட்டுவார். எழுந்தால் கடுமையாக எதிர்த்து பேசுவார்.

அப்போது வேறு சில முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளையும் கவனித்திருக்கிறேன். கேமரா நோக்குவதால், நின்று பேசும் போது பொங்குவார்கள், பேசி உட்காரும் போதே கண்டித்த அமைச்சர்களை  நோக்கி புன்முறுவல் பூப்பார்கள். ஆனால் அண்ணன் செங்கோட்டையன் அப்படி கிடையாது. பேசும் போதும் கண் பார்க்கமாட்டார், உட்கார்ந்தாலும் பார்க்கமாட்டார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அப்படி தான். திமுகவை எதிர்ப்பதென்றால் வெல்லம் சாப்பிட்ட மாதிரி. குலுக்கிவிட்ட சோடா பாட்டில் மாதிரி பொங்குவார்.

2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அண்ணன் செங்கோட்டையன் அமைச்சர். நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர். நான் கொஞ்சம் முந்திரிகாட்டு மண்ணுக்கே உரித்தான 'தொட்டால் பற்றிக் கொள்ளும் தயார் நிலையில்' இருப்பேன். அதனால் பலமுறை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவோடு, ஓ.பி.எஸ்ஸொடு, சபாநாயகரோடு மோதிக் கொண்டிருப்பேன். நான் எழுந்தாலே வெளியே அனுப்புவார்கள்.

எழாத ஒரு நாளும், நான் வம்பு செய்ததாக அண்ணன் ஓ.பி.எஸ் புகார் செய்யுமளவு நிலை. அப்படி ஒரு நாள் சபாநாயகர் அறையில் அண்ணன் செங்கோட்டையன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு. "என்ன சிவசங்கர் எப்பவும் பிரச்சினையா?" என்றுக் கேட்டார். "அண்ணா, நேத்து அவ்வளவு இல்லையே அண்ணே", என்றேன். " இல்லை சிவா. சலங்கை கட்டி ஆடறது, சலங்கை கட்டாம ஆடறதுன்னு ரெண்டு வகை இருக்கு. நேத்து கட்டாம ஆடுனிங்க. அவ்வளவு தான்"என்று சிரித்தார்.

அப்போது தான் தெரிந்தது, அவரது வெற்றி ரகசியம். கோபி தொகுதியை ரவுண்டு கட்டி, எல்லோரிடமும் அன்பாக பேசி வென்றிருக்கிறார். ஜெயலலிதா தேர்தல் சுற்றுப்பயணம் கிளம்பினால், இவர் தான் ரூட் போட்டு தருவார். அதிமுகவில் இவர் அளவிற்கு தமிழகத்தையும், அதிமுகவையும் அறிந்தவர்கள் கிடையாது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே இவரது அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தாலும், இவருக்கு சீட் கொடுக்காமல் இருக்கவில்லை. காரணம், இவரது தாக்கம் கொங்கு பெல்ட்டில் என்ன என்பதை ஜெயலலிதா நன்கு அறிந்தவர்.

சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக காட்டிய வேகத்தை தான், அமைச்சர் ஆன பிறகும் சி.வி.சண்முகம் காட்டுவார். செங்ஸ் போல் எதிர்கட்சி ச.ம.உ களிடம் பேச மாட்டார். அதே டென்ஷன் போஸ் தான் கொடுப்பார். இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதாவை பார்த்தும் பெரிதாக ரியாக்‌ஷன் இருக்காது. ஜெயலலிதா சட்டமன்றத்தில் நுழையும் போதும், ஏதாவது அறிவிப்பு வெளியிடும் போதும் அண்ணன் ஓ.பி.எஸ் வளைந்து வணங்குவது உலகப் பிரசித்தம்.

ஆனால் சி.வி.சண்முகம் அது போல் வணங்கி நான் பார்த்ததில்லை. அதேபோல கடந்த தேர்தலில், இவரை வேறொரு  தொகுதியில் ஜெயலலிதா வேண்டாவெறுப்பாக தூக்கிப் போட்டும் வென்று வந்தார். எடப்பாடி பழனிசாமியும் இவர் போல் தான். அளவோடு வளைந்தே ஜெயலலிதாவை வணங்குவார். உறுப்பினர்கள் கேள்வி கேட்டாலும் "அம்மாவின் பார்வைக்கு கொண்டு செல்கிறேன்" என்று மற்ற அமைச்சர்களை போல் வழக்கமான பல்லவியை பாடமாட்டார். தன்னிச்சையாக பதிலளிப்பார்.

ஆனால் அப்போதே அண்ணன் ஓ.பி.எஸ் பெர்ஃபார்மன்ஸ் வேறு. அவர் போன்று பணிவையும், விசுவாசத்தையும், அன்பையும், பக்தியையும், நம்பிக்கையையும் உடல்மொழியால் வேறு ஒருவரால் வெளிப்படுத்த முடியாது. எல்லோரும் பிரமிக்கக் கூடியது. அந்த நாட்களில் அதை ரசித்து நான் தனி நிலைத்தகவலே போட்டிருக்கிறேன்.

சமீப நாட்களில் தொலைக்காட்சியை பார்க்கும் போது அண்ணன் ஓ.பி.எஸ் மட்டும் தான் மாறாமல் அப்படியே இருக்கிறார்.

அண்ணன் செங்கோட்டையன் தொழுத கரங்களும், இறைஞ்சும் கண்களாய் இருக்கிறார். சி.வி.சண்முகம் வணங்கும் போது, அவர் தலை குனிந்திருந்த பாங்கும், அவர் கைகள் வணங்கி இருந்த இடமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. எடப்பாடி பழனிசாமி, 'அபிராமி, அபிராமி' என்று இருந்த பக்தி கோலம் கிறங்கடிக்கிறது. இது எல்லாம் அம்மா காலத்தில் காணாதது.

# மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல...