பிரபலமான இடுகைகள்

மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஆகஸ்ட், 2017

அதிகாரம் படுத்தும் பாடு !

அதிகாரம் படுத்தும் பாடு...

குஜராத் என்பது பாரதிய ஜனதாவின் கோட்டை என்பது அறிந்த உண்மையாகி விட்டது. ஐந்தாவது முறையாக அங்கே பா.ஜ.க ஆட்சி தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது.

அதில் தற்போதைய இந்தியப் பிரதம மந்திரி மோடி மூன்று முறை முதல்வராக இருந்தவர். அப்போது தான் குஜராத் பா.ஜ.கவின் கோட்டையாக்கப் பட்டது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமித் ஷா.

மோடி - அமித்ஷா ஜோடி அங்கே காட்டிய வேகத்தை தேசிய அரசியலிலும் காட்ட விரும்பினார்கள். மெல்ல மோடி டெல்லியை நோக்கி நகர்ந்தார். அங்கே தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டவுடன், அமித்ஷாவையும் தேசிய அரசியலுக்கு இழுத்துக் கொண்டார்.

தங்கள் மேஜிக்கை தேசிய அரசியலிலும் வெற்றிப் பெற வைத்தார்கள். உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றியை தக்க வைத்தது. இப்போது இந்த ஜோடி தான் இந்திய அரசியலின் அதிக அதிகாரம் பொருந்திய நபர்கள்.

அந்த அதிகாரத்தின் மூலமாக இன்னும் பல வெற்றிகளை மறைமுகமாகவும் குவித்தார்கள். கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றியது. ஆனால், 13 இடங்கள் பிடித்த பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது, மத்திய அரசின் அதிகார பலத்தால்.

மணிப்பூரிலும் காங்கிரஸ் 28 இடங்களோடு முன்னால் இருந்தது. 21 எம்.எல்.ஏக்களோடு இருந்த பா.ஜ.க மோடியின் அதிகார பலத்தால், அமித்ஷாவின் இயக்கத்தில் ஆட்சியை பிடித்தது.

போன வாரத்தில் பிகாரில் நடந்தது நினைவுப்படுத்த வேண்டியதில்லை. ஓர் இரவில் ஆட்சி மாற்றம், பி.ஜே.பி கையில் லகான். அதிக இடங்கள் கொண்ட லாலு, குறைவான எம்.எல்.ஏக்களோடு இருந்த நிதிஷ்குமாரை முதல்வராக்கினார். அந்த நிதிஷை இழுத்து, பா.ஜ.க ஆதரவு கொடுத்து, முதல்வராக்கியது. பா.ஜ.கவிற்கு துணை முதல்வர். இனி அதிகாரம் பா.ஜ.கவிடம் தான், நிதிஷ்குமரால் அசைய முடியாது.

இந்த தொடர் கைப்பற்றல்கள், அதிகாரப் பசி கொண்ட மிருகமாக மாற்றி விட்டது பாரதிய ஜனதா கட்சியை,  அந்த ஜோடியை. இன்னும், இன்னும் வேட்டையாட வேண்டுமென ரத்தவெறி வந்து விட்டது. இந்த நேரத்தில் தான் அடுத்த தேர்தல் அறிவிப்பு.

பாராளுமன்றத்தின் ஓர் அவையான ராஜ்யசபாவுக்கான தேர்தல் குஜராத் மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடமும் வெற்றி பெற வாய்ப்பு.

ஆனால் பா.ஜ.க மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மூன்றாவது வேட்பாளர் வெற்றிக்கு எதிர்கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அதற்கான ஆட்டம் ஆரம்பித்தது.

முதலில் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தள்ளி வைத்த இடைவெளியில் காங்கிரஸை பலவீனப்படுத்தும் வேலைகள் நடந்தன. காங்கிரஸ் ஏற்கனவே எழ முடியாத நிலை தான் குஜராத்தில் .

மோடியால் பா.ஜ.கவிலிருந்து விரட்டப்பட்ட தலைவர் சங்கர் சிங் வகேலா. தனி செல்வாக்கு மிகுந்த நபர். வெளியில் வந்தவர் காங்கிரஸில் இணைந்தார். ஆனாலும் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.

அவரை இப்போது காங்கிரஸிலிருந்து வெளியே இழுத்தார்கள். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் குறி வைக்கப்பட்டனர். ஆறு பேர் காங்கிரஸிலிருந்து வெளியேறினர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அமித்ஷா வலையை வீச ஆரம்பித்தார். இருக்கும் எம்.எல்.ஏக்களை காப்பாற்றிக் கொள்ள, எல்லோரையும் கர்நாடகாவிற்கு விமானம் ஏற்றினார்கள். ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டார்கள்.

அடுத்த அதிகார அம்பு வீசப்பட்டது. "இந்த ராஜ்யசபா தேர்தலில் 'நோட்டா'வுக்கு ஓட்டு போடலாம்", என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எம்.எல்.ஏக்கள் ஓட்டுப் போடும் தேர்தலில் 'நோட்டா' தேவை இல்லை. ஆனால் அதிகாரம் திணித்தது.

அடுத்து என்ன செய்யலாம் என்று மிருகம் பார்த்தது. கர்நாடகாவில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் எம்.எல்.ஏக்கள், கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் பாதுகாப்பில் உள்ளனர். சிவகுமார் கழுத்தை குறி வைத்துள்ளது மிருகம்.

எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் பணம் நடமாடுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்ததாம். உடனே ரெய்டு நடந்தது. 10 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியிடப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது, அதே எம்.எல்.ஏக்கள் " எங்களுக்கு பா.ஜ.க தரப்பில் கோடி கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசினார்கள்" என வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். அது வருமான வரித்துறை கண்ணில் படவில்லை.

கூவத்தூரில் தமிழக சட்டசபையை ஏலம் விட்டதை நாடே பார்த்தது. பத்திரிக்கைகள் எழுதின. ஊடகங்கள் 'லைவ்' காட்டின. ஒரு ச.ம.உறுப்பினரே பணம் கொடுக்கப்பட்டதை சொல்லி, அது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியது. இதுவும் வருமான வரித்துறை கண்ணில் படவில்லை. இதை இன்று சுட்டிக்காட்டி தமிழக எதிர்கட்சித் தலைவர் தளபதி அவர்கள் கண்டித்தும் உரைக்கவில்லை மத்திய அரசுக்கு.

அந்த ஒற்றை ராஜ்யசபா இடத்தை கைப்பற்ற தேர்தல் தேதி மாற்றம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு வலைவீச்சு, நோட்டா ஓட்டு, வருமான வரித்துறை ரெய்டு என  அத்தனை அதிகாரத்தையும் பிரயோகித்துப் பார்க்கிறார்கள்.

அந்த இடத்தில் போட்டியிடுகிறவர் சோனியா அவர்களின் செயலாளர் அகமது பட்டேல். அவர் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர் தான். புதிதாக பதவிக்கு வந்து தலைவலி கொடுக்கப் போகிறவர் அல்ல.

ஆனாலும் அந்த இடத்தை கைப்பற்ற இவ்வளவு பிராயத்தனங்கள்.

காரணம், அதிகார வெறி.

இதுவும் நல்லது தான். வெறி முற்றினால் எல்லோரையும் தாக்கும், உடன் இருப்பவர்களையும். அப்போது ஓர் முடிவு வரும். இது  இயற்கை நியதி.

இந்தத் தேர்தலில் குறி தப்பாமால் வெற்றி பெறலாம். எதிர்கட்சிகள் வீழ்த்தப்படலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாத எதிரி உருவாவான். தொடர் வெற்றியில் ஓர் சின்ன சறுக்கல் கூட , அதலபாதாளத்தில் தள்ளும்.

# சின்ன அம்பு கூட வேட்டை வெறி  மிருகத்தை வீழ்த்தும் !



வெள்ளி, 23 ஜூன், 2017

கொச்சி மெட்ரோவும், பாகுபலியும்

கடந்த சில நாட்களாக மலையாள நண்பர்கள் இந்தத் தலைப்பில் பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.  எதேச்சையாக இரண்டு நாட்களுக்கு முன்பாக பாகுபலி-2 திரைப்படம் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதனால் இந்தத் தலைப்பு கொஞ்சம் கேரளாவை எட்டிப் பார்க்க வைத்தது. யூடியூபில் காட்சிகள் விரிந்தன.

கொச்சியில் மெட்ரோ ரயில் துவக்க விழா ஜூன் 17ம் தேதி நடைபெற்றது. மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் திட்டத்தை துவக்கி வைத்தார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை பிரதமர் துவக்கி வைப்பது மரபு. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதற்கு முன்பாக நடந்த சில நிகழ்வுகள் தான் சர்ச்சையாகி இருக்கின்றன.

பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால், யார் யார் கலந்து கொள்ள வேண்டுமென்ற பட்டியலை, 14 பெயர்களோடு, மாநில அரசு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறது. அதில் சில பெயர்களை நீக்கி பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. உள்ளுர் சட்டமன்ற உறுப்பினர், மேயர் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. பணி நடக்கும் போது, உள்ளூர் பிரச்சினையை தீர்க்கக் கூடியவர்கள் அவர்கள் தான்.

இதை விட இன்னும் சில பெயர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையானது. கொச்சி மெட்ரோ திட்டத்தை 2012ல் துவக்கி வைத்தவர் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங். அப்போது கேரளாவில் காங்கிரஸ் ஆளுங்கட்சி. அப்போது முதல்வர் உம்மன் சாண்டி, அவர் பெயரும் நீக்கப்பட்டிருந்தது. இப்போது காங்கிரஸ் எதிர்கட்சி. இப்போது எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. அவர் பெயரையும் நீக்கியிருந்தது பிரதமர் அலுவலகம். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்தை துவங்கியதே காங்கிரஸாக இருந்தாலும், இந்த எதிர்ப்பை அரசியல் நடவடிக்கை என கருத இடம் உண்டு.

இன்னொரு பெயர் நீக்கப்பட்டது தான் ஒட்டு மொத்த கொந்தளிப்புக்கு காரணமாக இருந்தது. அந்த பெயர் "சிரீதரன்". அவருக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு.  அது " மெட்ரோ மேன்". டெல்லி மெட்ரோ திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, குறிப்பிட்ட செலவை விடக் குறைவாக முடித்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றவர். அப்போது பத்திரிக்கைகள் அவருக்கு இந்த சிறப்புப் பெயரை வழங்கினார்கள்.

1990ல் அவர் ரயில்வே துறையில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் பணி சிறப்பை உணர்ந்து, புகழ்பெற்ற "கொங்கண் ரயில்வே" திட்டத்திற்கு அவரை ஒப்பந்த அடிப்படையில் தலைவர் ஆக்கியது. அதற்கு பிறகு தான் டெல்லி மெட்ரோ. அதன் பின் எங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்றாலும் இவர் தான் பொறுப்பு. கொச்சி மெட்ரோவும் இவர் கைவண்ணமே. இப்போது இவருக்கு வயது 85. ஆனாலும் இவர் தேவை தொடர்கிறது.

கொச்சினில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவது மிகுந்த சிரமமானப் பணியாக இருந்தது. நில அமைப்பு, குறுகிய சாலைகள், தட்பவெப்பம் என பல இடர்பாடுகள் இருந்தாலும், இவரால் தான் திட்டம் நிறைவேறியது. இதனால் இவர் பெயர் இல்லை என்பது கொந்தளிக்க வைத்தது. இன்னொன்று, இவர் மண்ணின் மைந்தன். ஆமாம், இவர் கேரளாவை சேர்ந்தவர். எரியும் மாட்டுக்கறியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றியதாகியது.

மக்கள் எதிர்குரல் வலுத்தது. முகநூலும், ட்விட்டரும் அனல் தகித்தன. முதல்வர் பினராயி விஜயன், மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். ஏற்கனவே "பிரதமர் மோடி, கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர் வெங்கையா, முதல்வர் பினராயி விஜயன் " ஆகியோருக்கு மட்டுமே மேடையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எதிர்ப்பிற்கு பிறகு, இறங்கி வந்தது மத்திய அரசு.

திறப்பு விழா நாள் வந்தது. மோடியும் வந்தார். மென் நீலநிற பைஜாமா அணிந்து ஒய்யாரமாக வந்தார். திரும்பிய பக்கமெல்லாம் ரம்மியமாக கையசைத்தார். புதிய மெட்ரோ நிலையத்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை நறுக்க நின்றார். வெங்கையாவும், பினராயியும் சிரீதரனை முன்னே அழைத்தார்கள். திரும்பிப் பார்த்து விட்டு ரிப்பனை நறுக்கினார் மோடி. முடித்து சம்பிரதாயமாக முதல்வருக்கும், சிரீதரனுக்கும் கை கொடுத்தார். புதிய மெட்ரோவில் ஏறினார்கள். 17 நிமிடப் பயணம். தன் பக்கம் திரும்பிய மோடியை முதல்வர் பினராயி சட்டை செய்யவில்லை. அமைதி நிலவியது ரயிலில். பிரதமர் அலுவலகமே வீடியோ வெளியிட்டுள்ளது. அடக்கமாக அமர்ந்திருந்தார் சிரீதரன்.

பாகுபலி-2 திரைப்படத்தில் எதிர்பாராத திருப்பமாக, மன்னராக பொறுப்பேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமரேந்திர பாகுபலியை ஒதுக்கி விட்டு, பல்வாள்தேவன் பொறுப்பேற்பார் என ராஜமாதா சிவகாமி அறிவித்துவிடுவார். யாருக்கும் அதில் விருப்பம் இருக்காது. மக்கள் மனம் கவர்ந்தவர் பாகுபலி தான். ஆனால் அறிவித்தவர் ராஜமாதாவாயிற்றே.

அரசனாக பதவியேற்பார் பல்வாள்தேவன். அவர் தந்தை கைத்தட்ட மெல்ல கரவொலி எழும்பி அடங்கும். மன்னனாக எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி சேனாதிபதியாக பதவியேற்க வருவான். அப்போதே வாழ்த்துக்குரல் எழ ஆரம்பிக்கும். "அமரேந்திர பாகுபலி என்னும் நான்" என சொன்னவுடன் அரங்கே அதிரும்.

மெட்ரோ விழாவில் மோடி மலையாளத்தில் தன் உரையை துவங்கினார், லேசான கரவொலி. அதன் பின் கொச்சி மெட்ரோவின் அருமை பெருமைகளை அடுக்கினார். அரங்கத்தில் அசைவில்லை. ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்து அமர்ந்தார். கையொலித்தார்கள் மக்கள்.

கொச்சி மெட்ரோ திட்டத்தின் நிர்வாக இயக்குநர் எலியாஸ் நன்றி கூற வந்தார். ஒவ்வொருவராக விளித்து நன்றி கூறினார். பிரதமருக்கு நன்றி கூறினார், கைத்தட்டல் எழுந்தமர்ந்தது. அடுத்து "சிரீதரன்" என்று உச்சரித்தார் எலியாஸ். எழுந்த கரவொலி அடங்கவில்லை. காத்திருந்து கரவொலி அடங்கிய பிறகு பேச்சை தொடந்தார் எலியாஸ். கேமராவை பிரதமர் பக்கம் திருப்பவில்லை.

அமரேந்திர பாகுபலி உறுதிமொழி எடுத்து முடித்த உடன் மக்கள் கரவொலி எழுப்புவார்கள், வீரர்கள் வேல்களை தரையில் தட்டுவார்கள், யானைகள் பிளிரும்,  தரை மெல்ல அதிரும், பொருட்கள் உருளும், மன்னனின் கொற்றக் கொடை சரியும்.

கொச்சி மேடையில் அது எதுவும் நடக்கவில்லை. ஆனால் கரவொலியிலேயே தட்டிக் காட்டிவிட்டார்கள் சேட்டன்களும், சேச்சிகளும்.

மெட்ரோவில் ரிலீஸான "பாகுபலி".

# மக்கள் தட்டத்தட்ட மகுடமும் சரியும்  !

திங்கள், 29 மே, 2017

ஹு ஆர் யூ பிரைம் மினிஸ்டர்

"ரெண்டு பரோட்டா, ஒரு ஃபீப் ப்ரை". தமிழில் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆயிரம் ஆனாலும் அவர்கள் திராவிட மொழிக் குடும்பம் தானே. சிறு கடை தான். உள்புறம் சின்ன பெஞ்ச், சின்ன மேசைகள் வரிசையாக. குண்டு பல்ப் மஞ்சளாக ஒளி உமிழ்ந்துக் கொண்டிருந்தது. அது 2002. கிட்டத்தட்ட புரிந்திருக்கும். ஆமாம் "கடவுளின் தேசம்" கேரளா தான்.

அது தொழிற்முனைவராக இருந்த காலம்.  கேரளாவில்  ஜேசிபி வாடகைக்கு ஓடிக் கொண்டிருந்தது. அதனால் அடிக்கடி கேரளா சென்று வரும் வாய்ப்பு. போகும் போதெல்லாம் கேரள உணவை சுவைக்க கிடைக்கும் வாய்ப்பை விடுவதில்லை. காலையில் கிடைக்கும் ஆப்பம் - கொண்டக்கடலை, குழாப்புட்டு - நேந்திரம் வாழைப்பழம் எனத் துவங்கி, மதியம் மீன் பொளிச்சது, மீன் வறுத்தது என எதையும் விடவில்லை.

இப்படி இருந்தாலும் மாட்டுக்கறி "ஃபீப்" சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்த போது விடவில்லை. காரணம் கமல், அவர் வசனம்.  "வானத்தில பறக்கிற விமானத்தையும், கடல்ல மிதக்கிற கப்பலையும் தவிர ஊர்வன, பறப்பன, மிதப்பன எல்லாம் சாப்பிடுவேன்". அப்போ தான் கணக்கு பார்த்தேன், நாம எதெல்லாம் சாப்பிடிருக்கோம். விடுபட்டதில் முக்கியமானது மாட்டுக்கறி.

அந்த மாட்டுக்கறி சாப்பிடும் வாய்ப்பை தான் அடூரில் பெற்றேன். பரோட்டா கேரளாவில் தான் சாப்பிட வேண்டும். பொன் முறுவலா, அடடா. அதற்கு, மாட்டுக்கறி அத்தனை பிரமாதமானத் துணை. அப்போது முதன்முறை சாப்பிட்டவன், அதற்கு பிறகு கேரளா செல்லும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் விடுவதில்லை. வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு சுவையில் ஃபீப் கிடைத்திடும்.

பிறகு அரியலூரில் ஒரு நாள் செந்துறை பைபாஸ் அருகில் ஃபீப் பிரியாணி பார்த்தேன், விடவில்லை. ரயில்வே கேட் அருகேயும் கிடைத்தது. அரியலூருக்கான சுவையோடு கிடைத்தது. கேரள சுவை இல்லாவிட்டாலும், இது ஒரு சுவை தான். சென்னையில் ஃபீப் கிடைக்கிறது.  கிடைத்தாலும், கேரள சுவைக்கு ஈடாகாது. ஃபீப் கிட்டத்தட்ட கேரளாவின் தேசிய உணவு .

இன்னொரு பக்கம் ஃபீப் என்பது தமிழகத்தில் பரவலாகக் கிடைக்காத உணவு என்று ஒருத் தோற்றம். ஆனால் நகரங்களிலும், கிராமங்களிலும் ஆங்காங்கே கிடைக்கிறது.  இப்போது ஃபீப் பிரியாணி புகழ்பெற்ற உணவாகி விட்டது.  அது ஏதோ இஸ்லாமியர்களும், ஒடுக்கப்பட்டோரும் நாடுகிற உணவு என ஊடகங்கள் கட்டமைக்க முயலுகின்றன. அது தவறு, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவாகி விட்டது மாட்டுக்கறி.

என் துணைவியார் அசைவம் சாப்பிடுகிறவர் தான்.  ஆனால், திருமணத்திற்கு முன், வாரம் மூன்று நாட்கள் விரதம் இருந்தவர். என்னால் அவரது விரதங்கள் கைவிட்டுப்  போயின. ஆயினும் மாட்டுக்கறி என்றால் வாய்ப்பே இல்லை என்று சொல்லக் கூடியவர் . அவருக்கு தெரியாமல் தான் கேரள சுவை ஃபீப். பிறகு அவரிடத்தில் சொல்லி விட்டேன்.

மருத்துவர் என்பதால், ஒரு பயிற்சிக்காக துணைவியார் கொச்சின் செல்ல வேண்டி வந்தது. அவருக்கு துணை என்ற பெயரில்  உடன் மகன்களோடு நானும் பயணித்தேன். தங்கும் அறை ஒரு மூன்று நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை உணவு, அறை வாடகையில் சேர்ந்தது. பஃபே சிஸ்டம். ஆப்பம் கிடைத்தது. காலையிலேயே அசைவமும் இருந்தது. இரண்டு பாத்திரங்கள் இருந்தன.

ஒன்று சிக்கன் ஸ்டூ. இன்னொன்று ஃபீப் மசாலா. துணைவியாரும் மகன்களும் ஆப்பமும் சிக்கனும் சாப்பிட, நான் ஆப்பமும் ஃபீபும் சாப்பிட்டேன். மூன்று நட்சத்திர விடுதியில் கிடைத்ததால் அவர் ஒன்றும் எதிர்ப்பு சொல்லவில்லை. "எப்படி இருக்கிறது?" என்றுக் கேட்டார். "செம ஃடேஸ்ட்" என்றேன். "சரி. எஞ்சாய் பண்ணுங்க" என்று சொன்னார்.

# ஹோம் மினிஸ்டரே அனுமதித்த பிறகு, நீ யார் மேன் ப்ரைம் மினிஸ்டர் ?



வியாழன், 26 ஜனவரி, 2017

கொடியரசு தின வாழ்த்து

இரண்டு வருடத்திற்கு முன்னால அப்படி சொல்லி இருந்தா, நானே விழுந்து புரண்டு சிரிச்சிருப்பேன்.  இப்போ நண்டு, சிண்டு வரைக்கும் அத சர்வசாதாரணமா சொல்ல ஆரம்பிச்சிடுச்சிங்க. எல்லாம் இந்த மனுசனால வந்தது தான். வந்தப்ப பயங்கர டெரர்றா தான் இருந்தாரு. ஆனா அப்படியே பயங்கர காமெடியா ஆவாருன்னு  நினைக்கல.

இதுக்கு, அந்த காலத்தில நாம தான் முக்கிய கோரிக்கையா அத வச்சிருந்தோம். பின்னாடி நாட்டு நிலமைய நினைச்சி கைவிட்டோம். நாமளாவது சனநாயக வழி. இயக்கம் கட்டி, ஆயுதம் ஏந்தி போராடினவங்க உண்டு. அதில் உயிரிழப்பும் உண்டு. இப்படில்லாம் போராடி அரச பயங்கரவாதத்ல அந்த இயக்கம் அழிஞ்சே போச்சி. இப்படில்லாம் வரலாறு இருக்கறதனால, இனி வழியே இல்லன்னு மூடின சேப்டர் அது. பொசுக்குன்னு ஒப்பன் பண்ணிட்டாரு அண்ணன்.

கடந்த மாசம் நண்பர்கள் சிலரோட சந்திப்பு. அப்போ சர்வசாதாரணமா அவங்க அந்த சப்ஜெக்ட கையாண்டாங்க. கொஞ்சம் அட்வான்ஸா சிந்திக்கிற குரூப் தான். இருந்தாலும், இது ஓவர் திங்கிங்ஆ இருக்கேன்னு தோணுச்சி அப்போ.  ஆனா இப்போ சரியா தான் யோசிக்கிட்டு இருக்காங்கன்னு ஆயிடிச்சி. எல்லாம் அண்ணன நம்பி தான் யோசிருக்காங்க.

அண்ணன் அந்தத் திட்டத்த அறிவிச்சதுல முதல் பொறி விழுந்துருக்கு. ஆனா சரியா வெளியில தெரியல.  ரெண்டு, மூணு இடத்துல இந்தப் பேச்சு கிளம்பியிருக்கு. இங்க அப்போ கிளம்பல. இப்போ கிளம்பிடுச்சி. நண்டு ஒன்னு வாட்ஸ் அப் வீடியோல பேசுனப்ப இத சொல்லிச்சி. நான் பெருசா நெனைக்கல. ஆனா இன்னைக்கு முகநூல்ல பலரும் கதற்றத பார்த்தா பொறி வலுவாயிருக்குன்னு தெரியுது.

என்னாடா சப்ஜெக்ட்ட சொல்லாம இழுக்கறேன்னு பார்க்கறீங்களா? அவங்க சர்வசாதாரணமா சொன்னாலும், எனக்கு அத சொல்ல தயக்கமா தான் இருக்குது.

ம். அதே தான். தனி நாடு.

முன்னாடி அந்த நண்பர்கள் சொன்னப்ப நானே சிரிச்சேன். அப்ப தான் அவங்க சொன்னாங்க, நாங்கக் கூட இத நாங்களா நினைக்கல. எல்லாப் புகழும் அண்ணனுக்கு தான். அண்ணன் வேற யாரு, நம்ம மோடி அண்ணன் தான். அண்ணன் அவரு கட்சியில எல்லாரையும் காலி பண்ணி கைப்பிடிக்குள் வந்தது அவங்க கட்சிப் பிரச்சினை.

ஆனா அதே டேஸ்ட்ல இந்தியாவையும் கைக்குள்ள கொண்டு வரணும்னு பார்த்தாரு. குஜராத்த டைட்டா வச்சிருந்தது போல இந்தியாவையும். அது ஒரு மொழி பேசற, ஒரு கலாச்சாரம் கொண்ட மாநிலம். அத வச்சிருக்கறது வேற கதை. ஆனா இந்தியா பல மொழி, பல கலாச்சாரம் கொண்ட நாடு. இது மொத்தமா கைக்குள்ள வர்றது சிரமம்னு அண்ணனுக்கு புரிஞ்சுது.

அப்புறம் அவங்க வழிகாட்டி குரூப்போட ஏக இந்தியாவ நிர்மாணிக்க முடிவெடுத்தாரு. அப்பத் தான் இந்தி, சமஸ்கிருதம், பொதுச்சட்டம், பொதுக்கல்வின்னு ஆரம்பிச்சாரு. அப்பவே நம்ம நண்பர்கள் தனி நாடு கோரிக்கைக்கு அண்ணன் உயிர் குடுத்துடுவாருன்னு முடிவெடுத்துருக்காங்க.  பேசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

அப்போ பாத்து தான் அண்ணன் ஒரு சிக்ஸர் அடிச்சாரு. பந்து ஸ்டேடியத்துக்கு வெளியில போயிடுச்சி. ஆமாம், "செல்லாக்காசு" திட்டம் தான். மேற்கு வங்காளம் கிளம்புச்சி.  அது ஏதோ மம்தாவுக்கு மட்டும் பிரச்சினைன்னு நினைச்சாங்க. வங்காளம் தமிழ்நாடு மாதிரி தான், தனி சிந்தனை.  மொத்த இந்தியாவின் நிலைப்பாட்டில் இருந்து வித்தியாச சிந்தனை. அதனால அங்க கம்யூனிஸ்ட் கோலோச்சறது.  இப்போ மம்தா.

வடகிழக்கு மாநிலங்கள் பூரா ஒட்டிக்கிட்டு தான் இருக்கு. அதன் போக்கே வேற. காஷ்மீர் கதை தான் தெரிஞ்சது. கேரளா "செல்லாக்காசு" பிரச்சினையில  750 கி.மீ மனிதசங்கிலி நின்னு போராடி இருக்காங்க. இப்புடி ஆளுக்கொரு பக்கம் இழுக்கற நிலை.

அப்போ தான் நம்ம மேல உழுந்துது அடி.  காவேரி தீர்ப்ப ஒத்துக்க முடியாதுன்னு அண்ணன் கம்பெனி சொல்ல, லேசா.  அடுத்து அண்ணன் பொதுக்கல்வி, நீட் பொதுத் தேர்வு, பொங்கலுக்கு விடுமுற இல்லன்னு போட்டுத் தாக்க பொறி நெருப்பாச்சி. ஜல்லிக்கட்டு காள குறுக்க நெடுக்க ஓட, நெருப்பு காட்டுத் தீயாயிடிச்சி. மெரினா புரட்சியப்ப எதிரொலிக்க ஆரம்பிச்சுது. இளைஞர்கள் கோஷமாவே போட்டுட்டாங்க.

இப்போ கூட எந்த அரசியல் கட்சியும் "தனி நாடு" கோரிக்கையை பேசல, பேசவும் மாட்டாங்க. ஆனா இளைஞர்கள்கிட்ட இருந்து கேஷுவலா கிளம்பிடுச்சி.

அனல் பறக்கும் ஸ்டேடஸ்கள் தெறிச்சிது.

'நீ அனுமதி தரலன்னா, எங்க நாட்டுல ஜல்லிக்கட்டு நடத்திக்கிறோம்'

'கிரிக்கெட்டில் வென்ற அண்டை நாடான இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்'

'அண்ணா அப்போவே தமிழ்'நாடு'ன்னு தொலைநோக்கோடு தான் பேர் வச்சிருக்காரு'

இதெல்லாம் டிரெண்டிங்ல எழுதுனதுன்னு விட்டுட்டேன்.

ஒருத்தர் சீரியஸாவே எழுதி இருந்தாரு. "வல்லரசா இருந்தது ரஷ்யா. கிட்ட நெருங்கவே முடியாது. கார்ப்பசேவ் வந்தாரு. பிரிச்சி உட்டுட்டாரு. இந்தியாவின் கார்ப்பசேவ் 'மோடி' வாழ்க ! ".

டிவி விவாதத்துல அய்யநாதன் அழுத்தி சொல்றாரு. " இந்திய ஒன்றியத்தின் அங்கமான தமிழ்நாடு ". USA, USSR போல USI (United States of India)ன்னு ஃபீல் கொடுக்கிறாரு.

பாஸ், என்ன தான் நடக்குதுன்னு குழப்பமாயிடிச்சி.

இன்னைக்கு ஃபேஸ்புக் வந்தா நிறைய கருப்புக் கொடி ஃபுரொபைல் பிக்சர். அப்படியே போன வருசம் இந்த அளவுக்கு 'இந்திய' தேசியக் கொடி இருந்துது. இன்னொரு பக்கம் நாட்டுப்பற்ற வலியுறுத்தி, நாடு ஒண்ணா இருக்கனும்னு வலியுறுத்தி வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் கோஷம்.

வலியுறுத்தல எல்லாம் அண்ணன் மான்கிபாத்க்கு தான் ரீடைரக்ட் பண்ணனும். ஏன்னா அவர் தான் மனசு வைக்கணும். எல்லோரையும் மதிச்சி நடக்கனும், உரிமைய பறிக்கக்காம இருக்கணும். இத காங்கிரசுக்கும் CC போடணும்.

சரி, இந்தியா வாழ்க. அண்ணன் மோடிக்கு கொடியரசு தின வாழ்த்துக்கள். அடுத்த வருசமும் சொல்றது உங்கக் கைல தான் இருக்கு.

# பாத்து மனசு வைங்க அண்ணன் மோடி !