பிரபலமான இடுகைகள்

இயக்குனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயக்குனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

கனவு காணும் வாழ்க்கை யாவும்...

அது என்னவோ பாலுமகேந்திராவின் மரணம் பெரும் பாதிப்பை திரை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. “அது என்னவோ” என்று சொன்னதற்கு காரணம் அவர் எடுத்த படங்களின் எண்ணிக்கை மற்றும் அவைகளின் வெகுஜன வெற்றி இவற்றை கணக்கில் கொண்டே.

மாநாட்டு பணிகளில் தீவிரமாக இருந்ததால், வருத்தத்தை பகிர்ந்து கொள்ள சந்தர்பமில்லை. ஆனால் அந்த பாதிப்பு மனதில் இருந்தது. அதனால், அவரது படப் பட்டியலை பார்ப்போம் என விக்கிப்பீடியாவில் தேடினேன். அவரது மொத்த படங்களே 22 தான். அதில் தமிழ் 15 தான்.

                                   

இதில் அவரது ஆரம்ப கால படைப்புகளான “அழியாத கோலங்கள், மூடுபனி” இரண்டும் அவரது முத்திரைப் படைப்புகள். ஆனால் “மூன்றாம் பிறை” தான் அவரது அடையாளமானது. கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும் புதிய அடையாளத்தை வழங்கியது. இன்றைக்கும் அந்த “சுப்பிரமணி”யை மறக்க முடியாது.

அடுத்து வந்த “நீங்கள் கேட்டவை” அவரது பாணியிலான கமர்ஷியல் முயற்சி. இதில் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்து ரஜினியை வைத்து ஆக்சன் படம் “உன் கண்ணில் நீர் வழிந்தால்”. “கண்ணில் என்ன கார்காலம்” பாடல் இன்னும் காதுகளில் ரீங்கரிக்கிறது.

இளையராஜாவுக்கும், பாலுவுக்கும் அப்படி ஒரு உறவு. மனதை மயக்கும் பாடல்கள் தான் பாலுமகேந்திரா படங்களுக்கு. அந்த உறவு தான் பாலுவின் கடைசிப் படமான “தலைமுறைகள்” வரை தொடர்ந்திருகிறது. “வீடு” படத்தில் பாடல்களே கிடையாது. ஆனால் இசையே பாடும்.

நடுத்தர வர்க்கம் வீடு கட்ட எவ்வளவு கஷ்டப்படும் என்பதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருப்பார் “வீடு” பட்த்தில். ஒரு வீட்டை உண்மையாகவே கட்டி படம் எடுத்தார். படத்திற்கும், அர்ச்சனாவிற்கும் தேசிய விருது, பாலுவின் உழைப்பு. அதற்கு பிறகு அவர் பாணியில் சில படங்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு “சதிலீலாவதி” மூலம் காமெடி என்ட்ரி போட்டார். பிறகு சில படங்கள் வந்தன, அவ்வளவு தான், ஆனால் அவரது முத்திரைகளோடு. அதிலும் "மறுபடியும், வண்ணவண்ண பூக்கள், அது ஒரு கனாக் காலம்" உண்டு. 


எப்படி பார்த்தாலும் “அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம்” தான் அக்மார்க் பாலு முத்திரையோடு மனதில் பதிந்தவை.

                                      

ஆனால் அவற்றினை கொண்டே, 25 நூறு நாள் படைப்புகளை கொடுத்த இயக்குநர்களை தாண்டி ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார், எண்ணிக்கை, வெற்றி தோல்வியை தாண்டி நிலைத்திருக்கிறார் என்றால், அது தான் பாலுமகேந்திரா.

மெல்லிய உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் இயக்கம். வசனங்களை விட காட்சிகளே பேசி விடும் விதம். மயிலறகாய் தடவிக் கொடுக்கும் பிண்ணனி இசை. கண்ணிலேயே தங்கி விடும் ஒளிப்பதிவு. இவற்றின் உன்னதக் கலவையே பாலுவின் ரசாயனம்.

கடைசியாக அவரே களத்திற்கு வந்தார், நடிகராக “தலைமுறையில்”. நிஜ உலகில் தொப்பியையும் கண்ணாடியையும் கழட்டாமலே இருந்தவர், நிழல் உலகிற்காக அவைகளை துறந்தார். மறைவிற்கு முன் நிஜத்தோடு வெளிப்படுவோமென நினைத்தாரோ ?


                            

# கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள். ஆனால் பாலுவுடையது அழியாத கோலங்கள்...

வியாழன், 29 நவம்பர், 2012

எம் இனிய பாரதிராஜா அவர்களே

எம் இனிய பாரதிராஜா அவர்களே, 

உங்கள் பாசத்திற்குரிய ரசிகன் பேசுகிறேன்.

முதல் மரியாதை பார்த்து உங்கள் மீது அதிக மரியாதை கொண்டவன், கிராமத்தை கிராமமாக காட்டியதற்காக, நடிகர் திலகத்தின் இன்னொரு பரிமாணத்தை காட்டியதற்காக.

பல இயல்பான இயக்குனர்களை தமிழ் திரைக்கு, வாரி வழங்கிய குரு நீங்கள். வாழைக் கன்றுகளாக உங்களை ஒட்டி வளர்ந்து, நல்ல படங்களை வழங்கி உங்களுக்கு பேர் வாங்கி தந்து வருகிறார்கள்.

புராண படங்களில் சிக்கித் தவித்த தமிழ் திரையுலகை, சமூகத் தளத்திற்கு இழுத்து வந்து புரட்சிகர
சிந்தனைகளை மலரச் செய்ய, திராவிட இயக்கம் ஆற்றியது பெரும் பணி.

அதே போல பாலச்சந்தர் போன்றோரின் பராமரிப்பில் மேடை நாடகங்களின் ஜெராக்ஸ் காப்பியாக வெளிவந்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை, கிராமத்து வயல்வெளிகளில் அட்மிட் செய்து இயற்கை ஆக்சிஜன் ஏற்றியது நீங்கள் தான்.

காலச்சக்கரத்தின் ஓட்டத்தில், உங்களுக்கு வயதானது போல், உங்களுக்குள் இருக்கும் கலைஞனுக்கும் வயதாகிவிட்டது. அதனால் தான் சமீப காலமாக உங்கள் படங்கள் தடுமாற துவங்கிவிட்டன, உங்களை போல.

இளையத் தலைமுறைக்கு ஈடுகொடுத்து, உங்கள் படமும் ஓட வேண்டுமென ஆசைப்படுவது நியாயமே. ஆனால் அதற்காக மன்சூர் அலிகான் போல கிறுக்குப் பேட்டி கொடுத்தால், அந்தப் பரபரப்பில் படம் ஓடிவிடும் என நினைப்பது என்ன நியாயம் ?

அல்லி நகரத்து, ஹெல்த் இன்ஸ்பெக்டர் சின்னசாமி, புகழ் பெற்ற இயக்குனர் பாரதிராஜாவாக வந்தப் பாதையை திரும்பிப் பாருங்கள். திராவிட இயக்கம் செப்பனிட்டப் பாதையில் தான் உங்கள் திரைத் தேர் பவனி வருகிறது.

வைகோ மீது ஏதும் தனிப்பட்ட கோபம் என்றால், திராவிட இயக்கத்தின் மீது பாய்வது ஏன் ?

திராவிட இயக்கம் தான், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதே. தமிழனா மாறுங்கன்னு அறிவுரை சொல்ல வந்துட்டிங்க...
திராவிடனா இருந்து நாங்க தமிழுக்கு செய்வதை, நீங்க தமிழனா இருந்தே செய்யுங்களேன். ஒன்னும் செயலில் முடியாது உங்களால்.... வாய்ச் சொல்வீரர்.

பார்ப்பன எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துறதா சொல்றீங்க... மாலை நேரத்தில், கிளப் நண்பர்களிடத்தில், திரை உலகில் பார்ப்பன ஆதிக்கம்னு புலம்பியது யார் ? பாரதிராஜா தானே.

ஆனந்த விகடனில் பேட்டி ஹைலைட்டா வரனும், உங்கள் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திற்கு கவரேஜ் கிடைக்கனும்னு திடீர்னு பிராமண ஆதரவு அவதாரமா ?

ஏற்கனவே கலைஞர் மீது பாய்ந்ததும், பிறகு காலில் விழுந்ததும், ரஜினியை குதறியதையும் பிறகு கொஞ்சியதையும் நாடு கண்டது தானே.

நீங்கள் நல்ல இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் என்பதை நாடறியும், "கல்லுக்குள் ஈரம்" பார்த்தோமே !

அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை சிறப்பா எடுங்க. பார்த்து, நல்லாயிருந்தா பாராட்டுறோம். வேலையப் பாருங்க...

" இதுவரை தென்றலின் விரல் பிடித்து வலம் வந்த பாரதிராஜா, புயலின் கரம் பிடித்து வருகிறேன்" , அப்படின்னு கொடிப் பறக்குது படத்துக்கு நீங்கள் பேசிய முன்னோட்ட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

# இப்போ எந்தக் கைய பிடிச்சிருக்கீங்க.....?