பிரபலமான இடுகைகள்

திங்கள், 18 நவம்பர், 2013

செங்குட்டுவனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நன்றி !

செங்குட்டுவன் டெய்லராக வாழ்க்கையை துவங்கியவர். கம்யூனிஸ்ட் கட்சியால் ஈர்க்கப்பட்டு, இணைந்து பணியாற்றினார். அப்படியே சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

1996-ல் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். வெற்றி அளித்த மக்களுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார். முழு நேரமும் பொதுப் பணி தான்.

அது காரைக்குறிச்சி ஊராட்சி, தா.பழூர் ஒன்றியம், அரியலூர் மாவட்டம். அவரது அயராதப் பணியால் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெறுகிறார்.

ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர்கள் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும், மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று முனைந்தால் அவ்வளவு தான். வேறு வேலையே பார்க்க முடியாது.

இப்படிப் பணிகளிலேயே காலத்தை கழித்தவர் குடும்பத்தார் வற்புறுத்தலால் திருமணம் செய்யும் போது வயது 44. இடையில் தி.மு.கவில் இணைந்து பணிகளை தொடர்ந்தார்.

2006 தேர்தலிலும் வெற்றி பெற்றார். முன்னிலும் தீவிரமாக பணியாற்றினார். 2011 தேர்தல் வந்தது. மூன்று முறை இவரே வெற்றி பெற்று வந்ததால் போட்டி வேறு விதமாக வந்தது, பொறாமையோடு.

அந்த ஊராட்சியில் இரண்டு குக்கிராமங்கள். இவரது கிராமத்தில் இன்னும் இருவர் போட்டியிட்டு ஓட்டுகளை பிரிக்க, அடுத்த கிராமத்தில் ஒருவர் மட்டும் போட்டியிட்டு மொத்த ஓட்டுகளையும் பெற்று வெற்றியடைந்தார். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் தான்.

மன உளைச்சலில் கிராமத்து வீட்டை விட்டு வயலில் வந்து தங்கினார். வயலை ஒட்டி செல்கின்ற சாலையில் மதனத்தூர்- நீலத்தநல்லூர் இடையே கொள்ளிடம் ஆற்றில், கழக ஆட்சிக் காலத்தில் உயர்மட்ட பாலம் அமைந்தது. கும்பகோணம்-ஜெயங்கொண்டம் நேரடியாக இணைந்து சாலை பிஸியானது.

முழு நேரமும் பொதுப்பணியில் கழித்த செங்குட்டுவன், இப்போது தான் குடும்பம் பக்கம் திரும்பினார். தோல்விக்கு பிறகு எதையாவது சாதிக்கும் எண்ணம். டெய்லராக இருந்த போது வாங்கிப் போட்ட நிலத்தை விற்றார், பாலம் வந்ததால் நிலத்தின் விலை உயர்ந்து இருந்தது. 


அந்தப் பணத்தைக் கொண்டு குடியிருந்த வயலில் ஒரு திருமண மண்டபத்தை கட்டினார். குடும்பத்தினருக்கு நிம்மதி. பொதுப் பணியும் தொடர்கிறார்.

15.11.2013 அன்று காலை ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமையில் மண்டபத்தை திறந்து வைத்தேன். அப்போது இப்படி பேச ஆரம்பித்தேன்....

# செங்குட்டுவனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நன்றி !

பொறியும், பொரியுமாய் வாழ்ந்த காலம்.....

கார்த்திகை மாதம் வந்தாலே எங்க செட் ரெடியாயிடுவோம். 

பனைமரம், பனைமரமா கெளம்பிடுவோம். அது பள்ளிக் கூடம் படிக்கும் போது. பனம்பூவ கலெக்ட் செய்வோம். 

ரெகுலரா டிரெஸ் தைக்கிற டெயிலர்கிட்ட போய் உட்கார்ந்து அவர தாஜா பண்ணி பைய தைப்போம். நீள் செவ்வகம் அளவில் பை இருக்கும். நாலஞ்சு பை.

கலெக்ட் செய்த பனம்பூவ கரிமூட்டம் போடுவோம். கரிமூட்டம்னா தரையில் சின்னதா குழி தோண்டி அதுல பனம்பூவ அடுக்குவோம். அதோட மரக்குச்சிய போட்டு, மேல தழைய போட்டு மூடுவோம்.

இப்போ மரக்குச்சிய பத்த வைப்போம். அத எரியவும் விடக்கூடாது, அணையவும் விடக் கூடாது. லேசா நெருப்பு கனிஞ்சுகிட்டே இருக்கற கண்டிஷன்ல வைக்கணும்.

பூரா பனம்பூவும் கரியாக விட்டு எடுக்கணும், முழுசும் எரிய விட்டுடக் கூடாது. அத தூள் தூளா உடச்சிக்கனும். இதோட தவிட்ட சேர்க்கணும். அப்புறம் உப்ப கலக்கணும்.

இது மூன்றும் சேர்ந்த இந்தக் கலவைய அந்த பையில் போடணும். மரக்கிளையிலேர்ந்து ஆங்கில "V" வடிவில இருக்கற கவைய ஒடச்சி எடுக்கணும்.

கவை நடுவுல இருக்கற இடைவெளில இந்தப் பையை வைக்கணும். கவைக்கு மேல ரெண்டு முழம் அளவுல சணல் கயிற்ற கட்டணும், அத பிடிச்சி சுழற்றுற அளவுக்கு.

இப்போ பை மேல, அடுப்புல இருந்து ஒரு நெருப்பு துண்ட எடுத்து வைக்கணும். கொஞ்சம், கொஞ்சமா அந்த துணிப்பை கனியும். அப்போ கயிற்ற பிடிச்சி ஊஞ்சல் ஆட்டுற மாதிரி ஆட்டணும். ஆட்ட ஆட்ட தான் நெருப்பு கனியும்.

இப்போ பையிலிருந்து மத்தாப்பூ பொறி மாதிரி வரும். அப்படியே பையை சுற்றிகிட்டே, தலைக்கு மேல தூக்கி வட்டமா சுத்தணும். இப்போ நம்ம சுத்தி பொறியா பறக்கும், ஒரு சங்குசக்கரத்த தலைக்கு மேல சுத்தற மாதிரி.


                            நீலா நீலவண்ணன்'s photo.

அந்தப் பொறிக்கு காரணம் பனம்பூ, அது உடனே எரிந்திடாம கனிய தவிடு, படபடன்னு சவுண்ட வர உப்பு.

இது "கார்த்திய பொறி". அந்த வயசுக்கு பெரிய புராஜக்ட். 


அன்னைக்கு வீட்டுலயும் அரிசி பொரியும், வெல்லமும் போட்டு "வெல்லப் பொரி" கிண்டுவாங்க, சாப்பிடுவதற்கு.


# பொறியும், பொரியுமாய் வாழ்ந்த காலம்.....

சனி, 16 நவம்பர், 2013

சார் வந்த வழிய மறக்கலாமா ?

அவர் நெடுஞ்சாலைத் துறையின் துணை கண்காணிப்பு பொறியாளர். மூன்று மாவட்டங்களுக்கு சேர்த்து ஒரு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் இருக்கும். அந்த அளவிற்கு உயர் பதவி.

எனது தொகுதியின் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். 35 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் இருந்து பொறியியல் படித்த முதல் மனிதர். உயர் பதவியில் இருந்தாலும் டவுன் டூ எர்த்.

அவர் தந்தை கழகத்தில், அந்த கிராமத்திற்கு முன்னோடி. தேர்தல்களில் மும்முரமாக பணியாற்றக் கூடியவர். இவரும் தேர்தல் என்றால், விடுப்பு போட்டு விட்டு வந்து எனக்கு பணியாற்றியவர்.

சமீபத்தில் ஒரு நாள் அழைத்தார். “சார், நேரில் பார்க்கணும், சொந்த ஊர்ல வீடு கட்டியிருக்கேன். அழைப்பு கொடுக்கணும்”. நேரில் வந்தார். அழைப்பை பார்த்தால் இன்ப அதிர்ச்சி.

“தந்தை பெரியார் இல்லம்”
திறப்பு விழா. எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் எளிமையாக இருந்தது. பெயரை பார்த்த மகிழ்ச்சியில் “மூன்று சுயமரியாதை திருமணங்கள் இருக்கின்றன, இருந்தாலும் வந்து விடுகிறேன்” என்று உறுதியளித்தேன்.

இன்று காலை அழைத்தார், “சார், திருமணத்திற்கு போகும் முன் வந்து ரிப்பன் கட் பண்னிட்டு போயிடுங்க. காத்திருக்கிறோம்” என்றார். என்ன தான் பெரியார் பெயர் வைத்திருந்தாலும் சம்பிரதாய பூஜைகள் நடந்திருக்கும் என்று எண்ணி சென்றேன்.

கருப்புச் சட்டை தோழர்கள் வந்திருந்தார்கள். வீட்டின் முகப்பில் ரிப்பன் கட்டி வெட்ட சொன்னார்கள். வெட்டி, உள்ளே சென்றோம். ஆச்சரியம், எந்த பூஜையும் இல்லை. ஒரே ஒரு படம் மாத்திரமே இருந்தது. திறக்க சொன்னார்கள், “பெரியார் படம்”.


                                     


விடை பெறும் போது சொன்னேன், “நீங்கள் கழகக் குடுமபம் என்று மட்டுமே அறிவேன். வீட்டின் பெயர் பார்த்து மகிழ்ந்தேன். ஆனால் அய்யாவிடம் இவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதை இப்போது தான் உணர்ந்தேன். நன்றி. நன்றிக்கு காரணம், வேலைக்கு போய் சம்பாதித்தவுடன் பலர் ஆத்திகர்கள் ஆகிவிடுகிறார்கள். மாறாமைக்கு நன்றி ”

அவர் பதில் “சார் வந்த வழிய மறக்கலாமா ? நான் இன்னைக்கு படிச்சு ஆளாயிருக்கேன்னா அய்யா பெரியார் தானே காரணம். அந்த நன்றி தான் சார்”
# கண்ணுக்கு தெரியாத நன்றியாளர்கள் !


'துரும்பு' சட்டசபை தீர்மானத்தை அசைத்து பார்த்தது....

11.11.2013 அன்று சட்டப்பேரவை நிலைக்குழுவான பொது நிறுவனங்கள் குழு அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை ஆய்வு செய்தது. குழு உறுப்பினர்கள் என்ற வகையில் டி.ஆர்.பி.ராஜா அவர்களும் நானும் கலந்து கொண்டோம்.

அடுத்து அரியலூர் அரசு மருத்துவமனையிலும், அரியலூர் பேருந்து நிலையத்தையும் ஆய்வு செய்தது குழு. ஆய்வு முடிந்து உணவு முடிந்தது. மாவட்ட ஆட்சியகரத்தில் நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தோம்.

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவசரமாக வந்தார். “சட்டப்பேரவை செயலகத்திலிருந்து அவசர தகவல், நாளை மாலை சட்டபேரவை அவசர கூட்டம். தெரிவிக்க சொன்னார்கள்”

குழு தலைவர் பி.ஜி.நாராயணன் (அதிமுக) அவர்களிடம் விடைபெறலாம் என்று சென்றோம். அவர் அதற்குள் பறந்திருந்தார். மற்ற இரு அதிமுக எம்.எல்.ஏ-க்களும் கிளம்பும் ஆயத்தத்தில். அப்போதே பரபரப்பாகிவிட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் செல்லில் பேசினார்,“சென்னை செல்ல டிரெயினில் எமர்ஜென்சி கோட்டா வாங்கி தரவா ?”.

அடுத்து சட்டபேரவை துணை செயலாளர் கூட்டம் குறித்து தகவல் சொன்னார். நான் அவரிடம் ஒரு சந்தேகம் கேட்டேன்,”இந்தக் கூட்டத் தொடர் முழுதும் திமுக உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்பட்டோமே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியுமா ?”.

அவர் பதட்டமாகிவிட்டார். "சட்டப்பேரவை செயலாளரிடம் கேட்டு சொல்கிறேன்" என்றார், பிறகு ”வரலாம்” என்று பதில் சொன்னார்.

திமுக கூட்டத்தில் கலந்து கொள்வதில் அரசின் ஆர்வம் அளவு கடந்து இருப்பது தெரிந்தது. (மறுநாள் சபாநாயகர் திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள தனியாக ஒரு ஆணை பிறப்பித்தது தெரிய வந்தது)

12.11.2013 காலை. அறிவாலயம், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம். அவசர சட்டப்பேரவைக் கூட்டத்தில் என்ன வகை தீர்மானம் வரும், அதன் மீது கழக நிலைப்பாடு என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்து தலைவர் கலைஞர் பேட்டி கொடுத்தார். “இலங்கையில் வாடுகிற தமிழர்களுக்கு கைகொடுக்கும் வகையில் வருகிற தீர்மானத்தை ஆதரிப்பதை நாங்கள் எங்களுடைய கடமையாகக் கருதுகிறோம்” "இந்தியாவிலிருந்து இலங்கை காமன்வெல்த் மாநாட்டிற்கு ஒரு "துரும்பு" கூடச் செல்லக் கூடாது என்பது தான் எங்களுடைய திட்டவட்டமான கருத்து".

ஒரு பத்திரிக்கையாள நண்பர் சொன்னார்,”சட்டப்பேரவை அவசரக் கூட்டத்தின் நோக்கத்தையே, இவரோடு “துரும்பு” தூள் தூளாக்கிடுச்சி சார்.  திமுக ஸ்லிப்பாகும், சிக்க வைக்கலாம்னு நெனச்சி தான் கூட்டமே. இப்படி பண்ணிட்டாரே”

மாலை 6 மணி சட்டப்பேரவை கூடியது. 6 மணி முதல் 7.40 வரை என்ன நடந்தது என்பது நக்கீரன் நவ 16-19 இதழில்.....

வியாழன், 14 நவம்பர், 2013

சிங்கம் 1 & சிங்கம் 2

மழைவிட்டு லேசான தூறல்...

தேவி காம்ப்ளக்ஸில் சினிமா விட்டு காரை எடுத்தேன். பின்புற சாலை வழியாக வாலாஜா சாலையை நோக்கி செல்ல தூறல் தொடர்ந்தது.

சப்வே தாண்டி வாலாஜாசாலையில் இடதுபுறம் திரும்புகையில், சாலையில் நின்ற மழைநீரால் ஒரு பிரேக் அடித்து நகர்த்தினேன். 

கார் சற்று அசங்கி திரும்பியது.

இடது புறம் நின்று கொண்டிருந்த டிராபிக் போலீஸ் ரோட்டிற்கு வந்தார், கையிலிருந்த சிகப்பு விளக்கைக் காட்டி நிறுத்தினார். காரை நிறுத்தினேன்.

பார்த்த ஒரு நிமிடம் தயங்கினார். கார் உள்ளே இருந்த மனைவி, மகன்களை பார்த்தார். 


" ஊதுங்க" என்றார். அவரை நோக்கி ஊதினேன். தலையாட்டி "போங்க" என்றார்.

மகன் சொன்னார்,"கார் தள்ளாடியதை பார்த்து, நீங்க தள்ளாடுறீங்களோன்னு சந்தேகப்பட்டிருக்கிறார்". 


சிரித்துக் கொண்டே வண்டியை நகர்த்தினேன்.

****************************

மற்றொரு நாள்....
கடற்கரை சாலை. நேப்பியர் பாலம் தாண்டி சாலை குறுக்கே இருப்புத்தடுப்பு. வேகத்தைக் குறைக்கும் போது, கை நீட்டினார் டிராபிக். காரை நிறுத்தினேன். தள்ளாடியவர் காரை பிடித்து நின்றார். காரின் உள் குடும்பத்தினர்.

"எங்கே இந்த நேரத்தில் ?"
"செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிட்டு வர்றோம்"
"டிக்கெட் காட்டுங்க"
காட்டினேன்.
"டிரைவிங் லைசென்ஸ் இருக்கா ?"
காட்டினேன்.
"சரி. செலவுக்கு ஏதாவது குடுத்துட்டு போங்க"
காரின் முன்புற கண்ணாடியை ஒட்டி இருந்த பாஸை காட்டினேன்.
"அது என்ன ?"
"எம்.எல்.ஏ பாஸ்"
"எம்.எல்.ஏங்களா ?"
"ஆமாம்"
"வணக்கம் அய்யா"
"வணக்கம்"
"அய்யாவுக்கு தெரியாததில்ல. பாத்து ஏதாவது செய்யுங்க"
பதில் சொல்லாமல் காரை நகர்த்தினேன்.

"ஏம்பா, ஏன் பணம் கேக்குறாரு ? இது தப்பில்லையா ? கம்ப்ளெயின் பண்ணலாமில்ல" -மகன்
" பாவம்பா "

# சிங்கம் 1 &  சிங்கம் 2 



                                  

நீ தொட்டா ரன்னு, பவுலருக்கு பன்னு

இன்று சச்சின் குறித்து கவிதை எழுத பத்திரிக்கையாளர் கருணாகரன் சார் கேட்டிருந்தாரு....

எல்லோரும் சீரியஸா எழுதிகிட்டு இருந்தாங்க...

நான் நம்ம டி.ஆர துணைக்கு கூப்பிட்டேன், வந்து வுழுந்துது கவித...

“சல்யூட் சச்சின்னு

நீ தொட்டா ரன்னு
பவுலருக்கு பன்னு

நீ அடிப்ப நின்னு
இந்தியா வின்னு

நீ மெஷின் கன்னு
எதிரணி கனவுல மண்ணு”

“ஹா... ஹா... சிக்ஸர்... பவுண்ட்ரி அடிச்சு வெளுத்துட்டீங்க “- கருணாகரன் சார் கமெண்ட்.

# ஏ டண்டணக்க, டணக்கனக்க.....


(சச்சின் இன்று தனது கடைசி டெஸ்டை ஆடி ஓய்வு பெறுகிறார் )

                             

புதன், 13 நவம்பர், 2013

1980-2000-ம் என்றால் சுஜாதா ரசிகர்களாக தான் இருப்பார்கள்...

 ஒரு தலைமுறைக்கு கல்கி, சாண்டில்யன் எழுத்து பாதிப்பு இருக்கும். தீவிர வாசகர்கள் என்றால் புதுமைபித்தன், ஜெயகாந்தன் வாசனை இருக்கும். திராவிட இயக்க உணர்வாளர்கள் தாண்டி கலைஞரின் வசன வீச்சு உண்டு. 1980-2000-ம் என்றால் சுஜாதா ரசிகர்களாக தான் இருப்பார்கள்.

அப்போது வந்த எழுத்தாளர்களுக்கும் அவர் பாதிப்பு உண்டு. படிப்போருக்கும் அந்த சாயல் எழுத்துக்கள் பிடித்துப் போனது. சுஜாதாவை படித்தவர்களுக்கு எழுதும் ஆர்வம் இயற்கையாக வரும்.

நான் எழுதும் எழுத்துகளின் மூலம் கலைஞரும் சுஜாதாவுமே. காலத்திற்கு ஏற்றார் போல் புதுப்பித்துக் கொள்ளக் கூடியவர்கள் இருவருமே. சுஜாதாவின் சாயல் இவரிடம் இருந்ததால் இவர் எழுத்தும் பிடித்துப் போனது.

இவர் சுஜாதா ரசிகரா என்பது தெரியாது. ஆனால் அவர் பாதிப்பு உண்டு. அவரை போலவே எல்லா துறைகளையும் கையாளக் கூடியவர். முகநூலுக்கு வந்த பிறகே அறிமுகம்.

ஒரு காலத்தில் இணையம் வெளிநாட்டில் இருப்போருக்கே வாய்த்ததாக இருந்த போது இவர் என்ட்ரி ஆகிவிட்டார். காரணம் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்ததால். ஆனால் வெளிநாட்டில் பணிபுரிந்த பலர் அங்கு மலிவாக கிடைத்த மற்ற விஷயங்களில் மூழ்கிவிட, இவர் இதில் ஆழம் பார்த்தார்.

திராவிட உணர்வாளர்கள் குறைவாக இணையத்தில் புழங்கிய நேரத்தில் இவர் அதில் தீயா வேல பார்த்தவரு. கொள்கை வேலையை பார்த்ததால் இவர் பொது அரங்கிற்கு வரவில்லை. முயற்சி எடுத்திருந்தால் தமிழ் சமூகத்திற்கு சுவாரஸ்யமான வெகுஜன எழுத்தாளர் கிடைத்திருப்பார்.

அந்த அளவிற்கு அவர் எழுத்தில் வெரைட்டி இருக்கும். அவர் blog படித்தவர்களுக்கு தெரியும். ஆனாலும் கழகத்திற்கு கொள்கை வாள் கிடைத்திருக்கிறார். அவரிடம் பேசினால் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கும்.

முகநூலில் இறங்கிய பிறகு தான் இவர் அறிமுகம். 2010-11-களில் 2ஜி பிரச்சினையின் அடியும் தெரியாமல், நுனியும் தெரியாமல் பலர் அவதூறு பிரச்சாரத்தில் இருந்த நேரம். நான் அண்ணன் ராசாவின் உடன் இருப்பவன், வாதிடுவது இயற்கை.

ஆனால் இவரை போன்ற வெகு சிலரே இந்தப் பிரச்சினையில் துணிவாக வாதிட்டவர்கள். அப்போது தான் இவரை கவனித்தேன். நேரில் சந்தித்த போது தான் தெரிந்தது, அந்த பிரச்சினை துவங்கிய நாள் ஒன்றிலிருந்து அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். 2ஜி-யில் தவறு நடக்கவில்ல, பழி வாங்குகிறார்கள் என்பதில் ஆதாரப் பூர்வமாக வாதிட்டார்.

பதவியில் இருப்பதால் அந்த உணர்வு இல்லை, நாளை பதவிக்கு வர வேண்டும் என்றும் அந்த உணர்வு இல்லை, இன்னும் சொல்லப் போனால் நேரடி அரசியலிலேயே இல்லை. தன்னை போன்றோர் ஆளானதற்கு திராவிட இயக்கமே காரணம் என்ற நன்றி உணர்வு தான் காரணம்.

நன்றி உணர்வு, இந்த காலத்தில் அரிதான ஒன்று. அந்த உணர்விற்காகவே உங்களை, உங்கள் பிறந்தநாளில் வாழ்த்தும் கடமை எனக்கு இருக்கிறது, அண்ணன் தொல்காப்பியன் என்கிற அபி அப்பா அவர்களே !

# திராவிடக் (கொஞ்சம் ஒல்லியான)  காளை வாழ்க !