பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
எஸ்.சிவசுப்ரமணியன் தி.மு.க சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர். துணைவியார் : இராஜேஸ்வரி. மகன்கள் : எஸ்.எஸ்.சிவசங்கர் ( நான் ) எஸ்.எஸ்...
-
இணையத் தோழர்களை சந்திக்க பெரியார் திடலில் காத்திருந்த நேரத்தில், சகோதரர் பிரின்ஸ் அவர்கள், திரு.ஒரிசா பாலு அவர்களை அறிமுகப...
சனி, 2 பிப்ரவரி, 2013
தமிழீழ அத்தியாயத்தில் புதிய பக்கங்கள்! - ஆ. இராசா
"எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நாடு; எது வரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்"
என்ற பாவாணரின் வரிகளை நினைவூட்டும் வகையில் மொழியும் இனமும் இங்கும் ஈழத்திலும் ஒடுக்கப்படும்போதெல்லாம் எதிர்த்து நிற்கும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இருந்து வருகிறது. ஈழத்தில் தந்தை செல்வா அவர்கள் காலத்தில் தொடங்கிய அறப் போராட்டம் முதல் அண்மைக் காலத்து ஆயுதப்போராட்டம் வரை, தி.மு. கழகம் அளித்து வரும் ஆதரவும், பங்களிப்பும் தாய்த் தமிழ்நாட்டின் மொழி இன வரலாற்றில் அழிக்க முடியாத பதிவுகளாகும். ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், அணி மாற்றம் இவைகளைக் கடந்து ஈழத் தமிழர் நலனில் வேறு எவருக்கும் - எந்த இயக்கத்திற்கும் இல்லாத உயிர்ப்புடனும், உண்மையுடனும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தலைவர் கலைஞர் அவர்களையும், கழகத்தையும் "பூச்சுகள் இல்லாத புரிதல்" உள்ளவர்கள் போற்றவே செய்வர். ஈழத்தமிழர் படுகொலைகளைத் தடுத்து நிறுத்திட, தனித்த இறையாண்மையுடன் கூடிய தனி ஈழம் தான் தீர்வு என்பதை நோக்கமாகக் கொண்டு, 13-5-1985 அன்று தலைவர் கலைஞர் அவர்களால் முன் மொழியப்பட்ட"டெசோ" (Tamil Eelam Supporters' Organisation- TESO)- நடத்திய பல அமர்வுகள் மற்றும் அதன் தீர்மானங்கள் ஈழத்தில் நடந்தேறிய கொடுமைகளையும், இந்திய அரசின் பாராமுகத்தையும் அன்றைய தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் போலிப்பூடக நிலையையும் பதிவு செய்துள்ளன.
அதே ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்ற போராளிக் குழுக்களின் தலைவர்களான சிறீ சபாரத்தினம், பத்மநாபா, மற்றும் பாலகுமார் ஆகியோர் ஒருமித்து கை உயர்த்தி முழக்கமிட்ட திம்பு பேச்சு வார்த்தையில் முன் வைக்கப்பட்ட தனித் தேசிய இனம் மற்றும் தாயகத்தை அங்கீகரித்தல்; முழு சுய நிர்ணய உரிமை - மற்றும்முழு குடி உரிமை ஆகியவற்றை ஆதரித்து அன்றைய "டெசோ" தமிழக எல்லை கடந்து இந்திய அரசியலில் விதைத்த விதைகளும், விளைச்சல்களும் களம் மாறிப் போனதா களவாடப்பட்டதா வேற்று விசைகளால் கபளீகரம் செய்யப்பட்டதா என்பதை ஆராய வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை.
1983இல் நடைபெற்ற ஈழப் படுகொலைகளைக் கண்டித்து 24 மணி நேரத்தில் தமிழகத்தை மலைக்க வைத்த - அகில இந்தியாவை உற்று நோக்கிடச் செய்த - சர்வ தேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மாபெரும் பேரணியை தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 27-7-1983 அன்று நடத்திக் காட்டியது வெறும் அரசியல் நிகழ்வல்ல; தானும் ஆடி தசையையும் ஆட்டுவித்த இன உணர்வின் எழுச்சி வடிவமாகும். அதனால் தான் 4-5-1986இல் "இதோ இந்திய இனங்கள் ஒன்றுபடுகின்றன, இலங்கையில் அழியும் மனித இனம் காக்க" என்று பிரகடனப்படுத்தி, "டெசோ" மாநாட்டினை அன்று தலைவர் கலைஞர் மதுரையில் கூட்டினார்.
அன்றைய ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி. ராமராவ், பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய், அகாலிதளக் கட்சியின் ராமுவாலியா, காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் அப்துல் ரஷீத், தெலுங்கு தேசக் கட்சியின் உபேந்திரா உள்ளிட்ட தேசிய இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட அம்மாநாடு, திருபழ.நெடுமாறனின் வரவேற்புரையோடு தொடங்கியது என்பது இன்றைய நிகழ்வுகளின் போக்கில் "வரலாற்று முரணா" அல்லது "வாழ்க்கை முரணா" என்பதை "செற்றமும் உவகையும் செய்யாது காக்கும் ஞமன்கோல்" ஆய்வாளர்களுக்கே விட்டு விடலாம். ஏனெனில் "இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை, கலந்து கொள்ள விடாமல், தடுப்பதற்கான முயற்சிகளில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும், காங்கிரசைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானதாகும்" என்றும், "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு அகில இந்திய வடிவம் கொடுக்கவும், இந்தியா முழுதும் உள்ள அனைவரின் ஆதரவைத் திரட்டவும், இது வெறும் தமிழர் பிரச்சினை அல்ல; இந்தியாவின் தேசிய பிரச்சினை என்று எடுத்துக் காட்டவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது" என்று முழங்கியவர் நெடுமாறன்.
உட்பகையின்றி 1984இல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக் கள் சேர்ந்து உருவாக்கிய ஈழத் தேசிய விடுதலை முன்னணி (Eelam National Liberation Front) அமைந்தவுடன், பிரபாகரனும், சபாரத்தினமும், பத்மநாபாவும், பாலகுமாரும் இணைந்த கைகளாய் எழுந்த நேரத்தில் அப்போதைய எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசை ஈழத் தமிழர் பிரச்சினையில் "துரோகம் செய்வதாக" கண்டித்தும், தி.மு.க.வின் செயல்பாட்டை முற்றிலும் ஆதரித்தும் அறிக்கை வெளியிட்டவர் நெடுமாறன்.
1987 ஜுலையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்திய அமைதிப்படை உடனடியாக இலங்கை சென்ற போது, தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அப்போதும் இந்த ஒப்பந்தத்தையே தவறு என்று தர்க்க ரீதியாகவும், போராளிகளின் நிலைமையிலும் நின்று எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அமிர்தலிங்கம், பத்மநாபா படுகொலையின் தாக்கமும், அதையொட்டி தி.மு.கழகத்தின் மீது நாளேடுகளும், அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தொடுத்த பொய்த் தாக்குதல்களும் 1989ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் அரசை இரண்டாண்டுகளில் கலைத்ததில் வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ராஜீவ்காந்தி படுகொலை, அதன் காரணமாக தமிழக மக்கள் ஈழத் தமிழர் பிரச்சினையில் எடுத்த எதிர்மறை நிலை, பின்னிட்ட விடுதலைப் புலிகளின் மீதான தடை, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நேர்ந்த அரசியல் பின்னடைவு ஆகியவை "டெசோ""வின் பணிகளுக்கு இயற்கையான தடையாகவோ அல்லது அவசியமற்ற கிடப்பாகவோ அமைந்து போனது சரித்திரத்தின் சோக நிகழ்வுகள். அப்போதுங்கூட, "புலிகள் இயக்கத்தைத் தடை செய்து விட்டு, யாருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்" என்ற நியாயமான கேள்வியை (முரசொலி - 15-5-1992) எழுப்பியவர் தலைவர் கலைஞர்.
"மொழியையும், நாட்டையும் ஆளாமல் துஞ்சுவது இல்லை" என்ற பெருஞ்சித்திரனாரின் வரிகளுக்கு இலக்கணமாக மொழியின் மீதும், இனத்தின் மீதும் தனது பற்றை எப்போதும் தளர்த்திக் கொள்ளாத ஒரே தலைவராக கலைஞரும், தன் ஆளுமையை விட்டுக் கொடுக்காத ஒரே இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகமும் இருந்து வந்திருக்கிறது என்பது நிதர்சனம். சட்ட நெருக்கடி வரும்போது "புலிகளோடு எனக்கு எப்போதும் தொடர்பு இருந்ததில்லை" என்று அறிக்கை (14-10-1993) தந்த திரு.வைகோவைப் போன்றவர்களின் அரசியல் நெறி ஆரவாரம் சார்ந்ததா அறம் சார்ந்ததா என்பதையும் எதிர்கால ஆய்வாளர்களுக்கே விட்டு விடலாம்.
இவைகளையெல்லாம் இங்கே நினைவு கூரக் காரணம், 1986 "டெசோ" மாநாட்டில் ஈழப் பிரச்சினை, அகில இந்திய வடிவம் பெற்று விட்டதாகக் கணித்த நெடுமாறன் போன்றவர்கள் பல்வேறு நாடுகளில் புலிகள் இயக்கத்தை தடை செய்ய காரணமான ஜெயலலிதா அரசின் போக்கு - 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு பிந்தைய சர்வதேச அரசியல் சூழ்நிலை - அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசின் அரசியல் தந்திரத்தால் விளைந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போர் ஆகியவற்றை ஏன் கணக்கிலே எடுத்துக் கொள்ளவில்லை என்பது "மில்லியன் டாலர்" கேள்வி. இங்கே தான் "டெசோ" வின் பணி மீண்டும் தேவைப்பட்டது.
1986ஆம் ஆண்டு அகில இந்திய வடிவம் பெற்ற ஈழப் பிரச்சினைக்கு "டெசோ" அமைப்பு அவசியப்பட்டதைப் போலவே, 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட குழு, இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமானப் போரினை உறுதி செய்து அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த போது, ஈழப் பிரச்சினை அகில இந்திய வடிவத்திலிருந்து "சர்வதேச வடிவத்திற்கு" விரிவுபடுத்தப்பட்டது என்பதை அரசியல் தற்குறிகள் கூட ஒப்புக் கொள்வர். ஆனாலும் தமிழகத்தின் மேதாவிகள் சிலரும், மேதாவிலாசம் படைத்த பத்திரிகைகளும், அன்றைய முதல் அமைச்சர் கலைஞரையும், தி.மு.க. வையும் காயப்படுத்தியதற்கு வக்கிரமும், வர்ணமும் தான் காரணம். என்றாலும் இவர்களின் விமர்சனங்களை உதாசீனப்படுத்தி விட்டு, ஈழப் பிரச்சினையின் சர்வ தேச வடிவத்தை எதிர்கொள்ள 30-4-2012இல் "டெசோ" மீண்டும் எழுப்பப் பட வேண்டியது நிகழ்வுகளின் நிர்ப்பந்தம் ஆகியது.
12-8-2012 அன்று "டெசோ" நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு அளித்த அறிக்கையை ஆய்வு செய்து இயற்றிய தீர்மானங்களில் "இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்"" என்பது தலையாய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாகும். இது தவிர, "ஈழத் தமிழர்களிடம் ஐ.நா. மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; இப்பிரச்சினை தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப் படுத்தவேண்டும்" என்றும் வலியுறுத்தப்பட்டது.
"டெசோ" தொடங்கப்பட்ட போதும், வாழ்வுரிமை மாநாடு நடத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், தமிழ்நாட்டின் அரசியல் தட்ப வெட்ப நிலை எப்படி இருந்தது என்பதை கணக்கில் கொண்டால், அறிஞர் அண்ணாவின் "இனமும் எதிரியும்" என்ற சொற்றொடருக்கு விளக்கம் கிடைக்கும். "தடைக் கற்கள் உண்டெனினும் தடந்தோள்கள் உண்டு" என்ற பாவேந்தரின் பாடலை நெஞ்சத்தில் தாங்கி நிற்கும் தலைவர் கலைஞர், இந்த அரசியல் தட்ப வெட்பத் தடைகளை எப்படி எதிர் கொண்டார் என்பது தமிழ் தேசியவாதிகள் அறிந்திருக்க வேண்டிய அரசியல் பாடம்.
12-8-2012 அன்று நடைபெற வேண்டிய மாநாட்டிற்கு, சூலை 29 மற்றும் ஆகஸ்ட் 2ஆம் தேதிகளில் காவல் துறை அனுமதி வேண்டி கடிதம் கொடுக்கப் பட்ட நிலையில், 10-8-2012 நள்ளிரவு 2 மணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை மூலம் அரசு அறிவித்தது எவ்வளவு பெரிய இன சூழ்ச்சியும் வஞ்சகமும் என்பதை உணர்ச்சியோடு வெளிப்படுத்த வேண்டிய கடமை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது விழுந்தது. அதிகாலை 6 மணிக்கு பேராசிரியர் உள்ளிட்ட "டெசோ" உறுப்பினர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, அவசர ஆலோசனை நடத்தி நீதி மன்ற மேல் முறையீடு செய்து திட்டமிட்ட அதே இடத்திலேயே மாநாட்டை நடத்திட பெற்ற ஆணை இன எதிரிகளின் மீதும், அவர்களுக்குத் துணை நின்றவர்களின் மீதும் கொடுக்கப்பட்ட சாட்டையடி ஆகும்.
ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்ற உள் துறை அமைச்சகத்தின் "அச்சுப் பிழை அறிவுரை" அடுத்த சில மணி நேரங்களிலேயே அவசர அவசரமாக விலக்கிக் கொள்ளப்பட்டு மத்திய அரசின் மனநிலையில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்த தலைவர் கலைஞர் அவர்களால் மட்டுமே முடியும் என்பதையும் அப்போதுதான் தமிழ்நாடறிந்தது. சிங்களப் பேரின வாத இலங்கை அரசு செய்து முடித்த இனப் படுகொலையை உலகறியச் செய்யவும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்து மீட்டுருவாக்கம் செய்திடவும் சர்வதேச வடிவம் ஒன்றை ஏற்படுத்துவது ஒன்றே சாத்தியமான வழி என்பதை உலகுக்கு உணர்த்தியது தான் "2012 டெசோ மாநாடு".
இலங்கை சீனாவோடும், பாகிஸ்தானோடும் கொண்டிருக்கும் சுமூக உறவு, அமெரிக்க அரசுடன் ஏற்கனவே இலங்கை செய்து கொண்ட ராணுவ உடன் படிக்கை ஆகியவற்றை மறந்து விட்டு ஈழப் பிரச்சினையை அணுகுவது பன்னாட்டு அரசியல் பிழையாக முடியக் கூடும் என்பது உள்ளூர் குண்டுச் சட்டி குதிரையோட்டிகளுக்கும் தெரிந்தது தான். தேசிய இனங்களின் பிரிந்து போகிற உரிமையை தங்களுக்குள் பிரயோகித்துக் கொள்ளும் விசித்திரமான சித்தாந்தத்தை பொதுவுடைமையாளர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொண்டிருந்ததை இம்மாநாடு தோலுரித்துக் காட்டியது. முதலாளித்துவ நாடுகள் கூட ஈழத் தமிழர்களுக்கு கண்ணீர் சிந்த முன் வந்த போதும், கம்யூனிச நாடுகள் இலங்கை அரசின் இன வாதத்திற்கு கட்டியம் கூறியது மார்க்சையும் ஏங்கல்சையும் மறு வாசிப்பு செய்யக் கூட அல்ல, மறுதலிக்கும் பரிதாபத்திற்குரிய வரலாற்றுச் சறுக்கலாகும். ஈழப் பிரச்சினை அகில இந்திய வடிவம் பெற்ற போது தோள் கொடுத்த அரசியல் தலைவர்கள், ஆதரித்த பத்திரிகைகள், சர்வ தேச வடிவம் பெற்று இன்னமும் தீர்வு எட்டப்படாத நிலையில் தங்களின் நிலைப் பாட்டினை மாற்றிக் கொண்டு "பிழைப்பு" கருதி தி.மு.க. மீது குற்றம் சொல்வதும், "அழைப்பு" கருதி அரசியல் செய்வதும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் "சந்திப் பிழை அல்ல; சந்ததிப் பிழை".
பன்னாட்டு அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், இந்திய அரசியல் கட்சித்தலைவர்கள், அயலகத் தமிழ் தலைவர்கள் உள்ளிட்டோரின் ஆழமான பங்களிப்பு டெசோ மாநாட்டில் 12-8-2012 அன்று முன் வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானங்களை விவாதித்து வடித்தெடுத்தன. முடங்கிக் கிடந்த உலகத் தமிழர்களை எழுந்து உட்கார வைத்த அந்தத் தீர்மானங்களை நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்திலும், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் வழங்கிட 30-10-2012 அன்று கூடிய "டெசோ" கூட்டம் முடிவெடுத்து, அதன்படி கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வழங்கினார்கள். அதேவாரத்தில் 7-11-2012 அன்று லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரிட்டானிய தமிழர் பேரவையும் இணைந்து இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த பன்னாட்டுக் குழு ஒன்றை ஐ.நா. மன்றம் அமைக்க வேண்டுமென்று இயற்றிய தீர்மானம் டெசோவின் நோக்கத்தை நிறைவேற்றும் தொடக்க ஒளிக் கீற்றாக அமைந்தது. இந்த ஒளிக் கீற்றை உலகெங்கும் விரித்து ஜீவஜோதியாய் மாற்றிடும் முயற்சியாக "டெசோ" தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தளபதி மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் டெல்லி சென்று ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளின் துhதர்களையும், இந்தியக் குடியரசு தலைவரையும் சந்தித்து டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை வழங்கி உரிய நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தி வந்துள்ளனர். இப்பயணத்தின் நோக்கம் வரும் மார்ச் திங்களில் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை அரசு கண்டிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான சர்வதேச சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் தெறித்த முதல் ஒளிக் கீற்று டெல்லி யிலும் பற்றிப் பரவி சர்வதேச ஒளி வெள்ளமாகி இலங்கைத் தமிழர்களின் இருண்ட வாழ்க்கையை வெளிச்சப்படுத்தி டெசோ வெல்லும் என்பது தான் காலம் சொல்லப் போகும் சரித்திரம். அந்தச் சரித்திரத்திற்கான சரியான நகர்வையே டெசோ டெல்லியிலும் செய்து திரும்பியிருக்கிறது. வாழ்த்தி வரவேற்போம்!
அன்புடன்
ஆ. இராசா, எம்.பி.,
கொள்கைப் பரப்புச் செயலாளர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக