பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
எஸ்.சிவசுப்ரமணியன் தி.மு.க சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர். துணைவியார் : இராஜேஸ்வரி. மகன்கள் : எஸ்.எஸ்.சிவசங்கர் ( நான் ) எஸ்.எஸ்...
-
இணையத் தோழர்களை சந்திக்க பெரியார் திடலில் காத்திருந்த நேரத்தில், சகோதரர் பிரின்ஸ் அவர்கள், திரு.ஒரிசா பாலு அவர்களை அறிமுகப...
வியாழன், 28 பிப்ரவரி, 2013
ஹைதராபாத் அனுபவங்கள்....
டாக்டர்.காமராஜ் என்றவுடன் தமிழர் என நினைத்து, தமிழில் பேசினால், தெலுங்கில் பேசுகிறார், ஆந்திராக்காரர். பெருந்தலைவர் காமராஜர் மீதான அன்பால் வைக்கப்பட்ட பெயராம்.
அறைக்கு உணவு எடுத்து வரும் உணவக நபர், நாங்கள் தமிழில் பேசுவதைக் கேட்டு நின்றார். என்ன என்று கேட்டால், காரைக்குடிக்காரராம், கணேசன். பத்து வருடமாக இங்கு வேலை செய்கிறாராம்.
மருத்துவமனை அறையை சுத்தம் செய்யும் துப்புரவுப் பெண் தெலுங்கர், அவர் வேறொரு பெண்மணியை அழைத்து வந்து, மாட்லாடு என சொல்ல, வந்தப் பெண், நீங்கள் தமிழா எனக் கேட்டார். அவர் யார் எனக் கேட்டால் தமிழர். நாற்பது வருடங்களுக்கு முன்பு திருச்சியிலிருந்து இங்கு குடியேறியவர். இவர் தமிழில் பேசுவதைக் கண்டு தெலுங்கு பெண்மணிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
எனது தந்தையாருக்கு அறுவை சிகிச்சை செய்தவர் டாக்டர்.பிரவீன், ஆந்திரர். இவர் எப்போதும் என் தந்தையிடம் விவாதிக்கும் சப்ஜெக்ட் - ஈழம். பிரபாகரன், யாழ்பாணம், முள்ளிவாய்க்கால் என விரல் நுனியில் அனைத்து விவரங்களும் அத்துபடி.
பக்கத்து அறையில் இருக்கும் ஆந்திர எம்.எல்.ஏவின் பாதுகாவலரான காவல்துறை நண்பர், கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் என சரத்குமார் வரை அலசி ஆராய்கிறார்.
அண்ணன் ராசா அவர்கள், அப்பாவை சந்தித்த புகைப்படம் நாளிதழில் வெளியானதைப் பார்த்து, மருத்துவமனைக்கு தேடி வந்தார் வழக்கறிஞர் கோவிந்தசாமி. பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள டி.களத்தூரை சேர்ந்தவர். ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டவர். ஆந்திரர்களின் குணநலன்கள குறித்து பேச்சு வந்த போது, இங்கு வாழும் தமிழர்களிடம் நல்லுறவே பாராட்டுகின்றனர் என சிலாகித்தார்.
" சென்னை ஷாப்பிங் மால்" என பெயர் தாங்கிய பிரம்மாண்ட வணிக வளாகம். எங்கு நோக்கினும் தமிழ் நடிகர்களின் முகம் தாங்கிய போஸ்டர்கள்.
இப்படியாக தமிழர்கள் பெருமளவில் ஹைதராபாத்தில் வாழ்வதும், தெலுங்கு மக்கள் தமிழகம் குறித்து கொண்டுள்ள ஆர்வம் குறித்தும் ஹைதராபாத்தை சேர்ந்த தெலுங்கு நண்பரோடு விவாதித்தபோது சொன்னார்," என்ன இருந்தாலும், நாங்கள் ஒரு காலத்தில் மதராஸ் பிரசிடென்சியை சேர்ந்தவர்கள் தானே" .
" சென்னை தானே தலைநகராக இருந்தது. மொழியும் பெரியப் பிரச்சினை இல்லை. ஏறக்குறைய பல வார்த்தைகள் ஒத்துப் போகும். திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள், இப்படி பல காரணங்கள் " என்றார் அந்த நண்பர்.
# சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக