நீதிமன்றம் பக்கம் தலை வைக்கமாட்டேன் என வாய்தா வாங்குவோருக்கு மத்தியில், நீதிமன்றத்தில் தினம் ஆஜாராகி வழக்கை சந்திப்பதோடு மாத்திரமல்லாமல், நாடாளுமன்றக் கூட்டு குழுவில் ஆஜராக தயார் என தானாக முன்வரும் அண்ணன் ஆ.ராசாவை போன்றோரும் இருக்கிறார்கள்.
இவரை குத்திக் கிழிக்க தான் சத்தியவான்கள் துடிப்பார்கள், வாய்தா ராணியை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள்.
அண்ணன் ஆ.ராசா அவர்களது கடிதம்.***********
மதிப்பிற்குரிய பாராளுமன்ற சபாநாயகர் அவர்களுக்கு!
1998 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட 2 G அலைக்கற்றை கொள்கை, அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நான் ஆஜராக வேண்டும் என்று அதில் இடம் பெற்றுள்ள சில உறுப்பினர்கள் கோரி வருவதாக அறிகின்றேன்.
2007ம் ஆண்டு மே 17 முதல் 2010 ம் ஆண்டு நவம்பர் 14 வரை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக நான் இருந்த போது 2008ம் ஆண்டில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கப்பட்டன.
அலைக்கற்றை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எனது தரப்பு விளக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்காமல் 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அந்த 122 அலைக்கற்றை உரிமங்களையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது. அதை மறு சீராய்வு செய்யக்கோரி நான் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக மத்திய தொலை தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அட்டர்னி ஜெனரல் போன்றோர் ஆஜராகி வருகின்றனர். ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்கள் குழுவிடம் அளிக்கும் விளக்கம் உண்மைக்கு புறம்பாகவும் குற்றத்தை வேறொறுவர் மீது சுமத்தும் வகையில் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்தியின் மூலம் அறிகின்றேன்.
இந்த விவகாரத்தில் தவறாகவும், முழுமையான ஆதாரங்கள் இல்லாமலும் பாராளுமன்ற கூட்டுக்குழு வழிநடத்தக்கூடாது. அதனால் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நானே நேரில் ஆஜராகி தொலைதொடர்பு கொள்கை, தொலைதொடர்பு உரிமங்கள் வழங்குவதில் அரசு கடைபிடித்த கோட்பாடு, இதில் யாருக்கெல்லாம் உரிமையும் பங்கும் உண்டு என்பதை விளக்குவதே சரியாக இருக்கும்.
அலைக்கற்றை தொடர்பான தீர்ப்பில் இந்திய ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட அரிய இயற்கை வளமான அலைக்கற்றை பண பலம் கொண்ட சிலராலும் அரசு நடைமுறையை மாற்றும் சக்தி படைத்தவர்களாலும் அனுபவிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் ஆலைக்கற்றை முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ நீதிமன்றத்தில் எனது பதவிக்காலத்தில் ராணுவம் பகிர்ந்து கொண்ட அல்லது அது பயன்படுத்தி வந்த அலைக்கற்றை வழங்கப்படவில்லை என சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
எனது பதவிக்காலத்தில் பயன் படுத்தாமல் இருந்த அலைக்கற்றையை கண்டறியவும் அவற்றை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை ஒருக்கிணைக்கும் பணியையும் மத்திய தொலைத்தொடர்பு துறை மேற் கொண்டது.
ஆனால் எனக்கு முன்பு அமைச்சராக இருந்தவர்கள் அலைக்கற்றையை பயன்படுத்தாமல் இருந்ததால் தான் அரசுக்கு உண்மையான வருமான இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத்தலைவர் மூலம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் ஏலம் நடத்தி அலைக்கற்றையை ஒதுக்குவது அரசின் நோக்கம் அல்ல , நாட்டின் தொலைத்தொடர்பு வளர்ச்சியை அதிகரிக்க நிறுவனங்களின் வருவாய் அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள் விளக்கினர்.
மேற்க்கண்டவாறு 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிலவும் பல முரண்பாடுகளை பாராளுமன்ற கூட்டுக்குழுவிடன் என்னால் விளக்க முடியும். இதன் மூலம் மறைக்கப்படும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். சி பி ஐ நீதிமன்றத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சட்ட விரோதமாக அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு தான் விசாரிக்கப்படுகின்றது இப்போது.
அந்த விசாரணை பாதிக்காத வண்ணம் அலைக்கற்றை கொள்கை அதை அமல்படுத்திய நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதனால் என்னை விசாரனைக்கு அழைக்கும் படி பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு உத்தரவு இட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆ. ராசா
( மொழி பெயர்ப்பு - அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக