"எங்களுக்கு பாலிடால் வாங்கிக் கொடுத்தா குடிச்சுட்டு செத்து போவோம்...."
இவ்வளவு கடுமையான எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை.
கடந்த 04.04.2013 அன்று சட்டசபையில் விதி 110ன் கீழ் ஜெயலலிதா படித்த அறிக்கையில் அறிவித்த ரூபாய் 108 கோடி மதிப்பிலான மருதையாறு நீர் தேக்கத் திட்டத்தினால் பாதிக்கப்படும் குரும்பாபாளையம் கிராமத்து மக்களின் குரல் தான் இது.
சட்டசபையில் அறிவிக்கும் போதே நினைத்தேன், இது போன்ற கோரிக்கையை தேர்தலுக்கு முன்னும், பின்னும் யாரும் வைத்ததில்லையே என.
சட்டசபை முடிந்தவுடனே, ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பேசி விசாரித்தேன். 25 ஆண்டுகள் ஒன்றிய செயலாளரான அவரே சற்று யோசித்தார், இதன் முக்கியத்துவம் குறித்து.
ஊர் மக்களிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள். பெரும்பாலும் எதிர்குரலே. மூன்று ஊர்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு.
எனவே அந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்கள் கருத்தை கேட்டு, சட்டபேரவையில் எதிரொலிப்போம் என முடிவெடுத்தேன். இன்று மூன்று கிராமங்களுக்கும் சென்றேன்.
பகல் 03.00 மணிக்கு உச்சி வெயில் நேரத்தில் சென்ற போதே, மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். அப்பாவி ஏழை மக்கள். காலையில் வயலுக்கு சென்றால், இரவு வீடு திரும்புகிறவர்கள்.
வயல் தான் இவர்களுக்கு முதலீடு, இரண்டாம் வீடு, தொழில், பொழுதுபோக்கு, வாழ்வாதாரம், உயிர்நாடி. இதையும் அரசு எடுத்துக் கொண்டால் போக்கிடமே கிடையாது.
இந்த அறிவிப்பால், இந்த கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் பறிபோகிறது. பிரமை பிடித்து போய் இருக்கிறார்கள். மூன்று நாட்களாக பல வீடுகளில் உலை வைக்கவில்லை, உண்ணும் மன நிலையில் இல்லை.
தங்கம்மாளின் கணவன் இறந்து பத்தாண்டாகிறது, மூன்று பிள்ளைகள். இரண்டு ஏக்கர் நிலம் தான், அதுவும் மேட்டாங்காடு, கருமண்பூமி.
மழை பெய்தால் விவசாயம், பருத்தியும், சோளமும். இருக்கும் இரண்டு ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட போகிறது. இவரின் குரல் தான் முதல் வரி.
# தங்கம்மாள்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்...
( தொடர்கிறது... )
பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
எஸ்.சிவசுப்ரமணியன் தி.மு.க சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர். துணைவியார் : இராஜேஸ்வரி. மகன்கள் : எஸ்.எஸ்.சிவசங்கர் ( நான் ) எஸ்.எஸ்...
-
இணையத் தோழர்களை சந்திக்க பெரியார் திடலில் காத்திருந்த நேரத்தில், சகோதரர் பிரின்ஸ் அவர்கள், திரு.ஒரிசா பாலு அவர்களை அறிமுகப...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக