பிரபலமான இடுகைகள்

வியாழன், 16 மே, 2013

அரசியலில் உழைக்கும் வர்க்கமான, மீடியாக்களின் பார்வையில் அவுட் ஆப் ஃபோகஸில் இருக்கும்



அரசியலில் உழைக்கும் வர்க்கமான, மீடியாக்களின் பார்வையில் அவுட் ஆப் ஃபோகஸில் இருக்கும், ஆனால் கட்சிகளின் ரத்த நாளங்களாக விளங்கும் வட்ட செயலாளர்கள் குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொண்டமைக்கு விஜய் டிவிக்கு பாராட்டுக்கள். 12.05.2013 அன்று ஒளிபரப்பானது.

ஆனால் எதிர்தரப்பில் அமர்த்தப்பட்டவர்கள் தான் வேறு வகையறா. அய்.டியில் பணிபுரியும் அவர்கள் பார்வை வேறாகத் தான் இருக்கும், அவர்களையும் குறை சொல்ல முடியாது.

கோட்-சூட் போட்டிருக்க வேண்டும், லேப்டாப் தெரிந்திருக்க வேண்டும், சீனாவை போன்று, அமெரிக்காவை போன்று என்ற அவர்களது எதிர்பார்ப்புகளை எம்.எல்.ஏக்களே பூர்த்தி செய்ய முடியாது. இதை எம்.பிக்களிடம் எதிர்பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.

வட்ட செயலாளர்கள் போல் களத்தில் அவர்களுக்கு இணையாக பணியாற்றும் வேறொரு பிரிவை அழைத்திருக்கலாம். பங்கேற்ற இணைய நண்பர்கள் அண்ணன் ஜெயின் கூபி, சிவானந்த அரசன், பாபு சாந்தி, நவநீதகிருஷ்ணன் மற்றும் நமக்கு அறிமுகமில்லாத சிலர் ( முருகானந்தம், நகராட்சி தலைவர்) சிறப்பாக பேசினார்கள்.

சிறப்பு விருந்தினராக பேசிய எழுத்தாளர் இமையம் மிக யதார்த்தமாக பேசினார், வலுவான வாதம். ஆழி செந்தில்நாதன் சொன்ன கருத்து , "அரசியல் வர்க்கம்" என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.

மிக்ஸிக்கு போராடிய அய்.டி பணியாளரின் அறிவார்ந்த வாதமும், லைசன்ஸ் இல்லாத நபரை போலீஸிலிருந்து விடுவிக்கும் செல்வாக்கான வட்டத்தின் பேச்சும், கட்டப்பஞ்சாயத்தை லைவாக நடித்துக் காட்டிய இன்னொரு வட்டத்தின் பாடி லாங்க்வேஜும் ரசிக்கப்பட வேண்டியவை.

# கோபிக்கு வேர்த்து களைக்கும் அளவுக்கு செம ஹாட் ( காய்ச்சல்) 


கண்கள் ஒத்துழைக்காமலே ஒளிரும் கல்விமணி, கலைமணி



“மார்க்கு எவ்வளவும்மா ? “
“வரலாறுல 200 சார். மாநிலத்தில இரண்டாமிடம்.”
“மத்த பாடத்தில எல்லாம் ? “
“காமர்ஸ் 200, எக்கனாமிக்ஸ் 198, அக்கவுண்டன்சி 186, தமிழ் 185, ஆங்கிலம் 179, மொத்தம் 1148 சார் “

பெயர் கலைமணி, குடும்பத்தின் கண்மணி, கண்கள் ஒத்துழைக்காமலே ஒளிரும் கல்விமணி, 90% பார்வை குறைப்பாட்டோடு இன்று சாதனைமணி.
அரியலூர் மாவட்டத்தின் உள்ளடங்கிய பரணம் கிராமத்தை சேர்ந்தவர். உள்ளூர் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார்.

புத்தகத்தை கண்ணின் மிகஅருகே வைத்து படிக்க வேண்டிய சூழலில், படிப்பே சுமையானது. பத்து வருடத்திற்கு முன்பே தந்தையை இழந்த சூழலில் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார் கலைமணி.

பாட்டி சரஸ்வதிக்கு பெருமிதம் “ இங்க படிக்க கஷ்டப்பட்டுச்சி, பெரம்பலூர் ஸ்கூல்ல சேர்த்தோம். அவிங்க புள்ளைங்க மாதிரியே பார்த்துக்கிட்டாங்க. இப்போ மாநிலத்தில இரண்டாமிடமாம். அதுவும் இதுமாதிரி பசங்கள்ள முதலிடமாம்”.

அது பெரம்பலூரில் உள்ள அன்னை ஈவாமேரி ஹாக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. அங்கிருக்கும் பயிற்றுனர்களே அன்னையராக திகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பாடங்களை கேசட்டில் பதிந்து கொடுத்ததை கேட்டு இந்தத் தேர்ச்சி.

ஹெலன் ஜெயராணி, ஹேமா ஆரோக்கிய மேரி, ஜெயா மேரி, பெல்சி என நான்கு ஆசிரியத் தாய்களையும் நன்றி பாராட்டுகிறார். தேர்விலும் கலைமணி சொல்வதை கேட்டு எழுதிய ஆசிரியர் அப்போதே பாராட்டியிருக்கிறார், “ நீ சாதிக்கப் போகிறாய்”.

இன்று சென்று பாராட்டி வந்தேன் மண்ணின் பெருமைக்குரிய மகளை. மேலே படிப்பது எதுவரை முடியுமோ, அதுவரை படிக்க வலியுறுத்தி, உதவிட நாங்களிருக்கிறோம் என்று தைரியமளித்து வந்தேன்.

# கலைமணி நீ எங்கள் பொன்மணி !



திங்கள், 6 மே, 2013

இப்போ பரிதி தளபதியின் "பெட் பாய்...



அன்பு சகோதரர் வி.பி.ஆர் இளம்பரிதி திருமணம். மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.



திருமணத்தை நடத்தி வைப்பதற்காகவே காலை சென்னையிலிருந்து விமானத்தில் வந்து, நடத்தி வைத்து, மீண்டும் விமானத்தை பிடித்தார் தளபதி அவர்கள். இது பரிதி திருமணத்திற்கு தளபதி அவர்கள் கொடுத்த முக்கியத்துவம்.
இளம்பரிதிக்கு பல அடையாளங்கள் உண்டு. கழகத்தின் சிறந்த சொற்பொழிவாளர். சட்டக் கல்லூரி மாணவர்களை கழகத்தில் இணைக்கின்றவர். அவர் வார்த்தையில் சொன்னால், முகநூலில் சாக்லெட் பாய்களை உற்சாகப்படுத்துகின்றவர்.

உயர்நீதி மன்ற வழக்கறிஞர். இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து, அமெரிக்காவின் ஒகையா மாநிலத்திற்கு இளம் அரசியல் தலைவர்களாக சிலரை தேர்ந்தெடுத்து அழைப்பார்கள், அதில் தென்னிந்தியாவிலிருந்து கடந்த வருடம் சென்று வந்த பெருமைக்குரியவர்.

நான் அவரை "போஸ்டர் பாய்" என்று அழைப்பது வழக்கம். கழகத்தின் முக்கிய நிகழ்வுகளின் போது சென்னை நகரின் சுவர்களை அலங்கரிப்பது இவரும் கவிகணேசனும் சேர்ந்து அடிக்கும் மெகா போஸ்டர்களாகத் தான் இருக்கும். அதிலும் அதன் வாசகங்கள் தனி முத்திரையோடு இருக்கும்.

இதை தாண்டி அவரது தந்தையார் வி.பி.ராசனின் பணி. கழகத்தில் இளைஞரணி அமைக்கப்பட்ட போது, விருதுநகர் மாவட்டத்தின் முதல் அமைப்பாளர். ராசபாளையம் தொகுதியில் 89, 96 தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்.

கழகத்தின் முதல்தர பேச்சாளர். திருமணத்தில் வாழ்த்தி பேசும் போது தளபதி அவர்கள் குறிப்பிட்டார் " வி.பி.ராசன் பேச ஆரம்பிக்கும் போது மெதுவாகத்தான் ஆரம்பிப்பார். பத்து நிமிடம் தாண்டினால் சூடு பிடிக்கும். அதில் வீரம் இருக்கும், விவேகம் இருக்கும் ".

திருமண மேடையில் தளபதி அவர்களது இருக்கைக்கு அருகே மணமக்கள் இருக்கை. பரிதி அதில் அமர தயங்க, தளபதி அவர்கள் வற்புறுத்த, நெகிழ்ந்த பரிதி கண்களில் கண்ணீர் மழை. அதை குறிப்பிட்ட தளபதி " இப்போ உட்கார், தேர்தலில் வாய்ப்பு வரும் போது நில் என்று சொன்னேன் " என சொல்ல கைத்தட்டலில் அதிர்ந்தது திருமணக் கூடம்.

கழகத் தோழர்களின் முற்றுகையால் ராசபாளையம் நேற்றிலிருந்தே திணற ஆரம்பித்தது. இன்று தளபதி வருகையில் மக்கள் வெள்ளம். முகநூல் நண்பர்களின் அன்பு முற்றுகையில் மணமகன் திணறினார். அண்ணன் வி.பி.ராசன் அவர்களின் நன்றியுரை நெகிழ்ச்சியில் வந்திருந்தோர் திணறினர்.

மணமகனை வாழ்த்த மேடையில் ஏறினோம். அண்ணன் வி.பி.ராசன் இழுத்து மணமகன் பரிதி அருகே நிறுத்தி "கிட்ட நில்லுங்கைய்யா, உங்க போஸ்டர் பாய் அய்யா" என்றார். கூட்ட நெரிசலால் பதில் சொல்ல முடியவில்லை.
( புகைப்படம்- கீரை.தமிழ்ராஜா)

# அய்யா இப்போ பரிதி தளபதியின் "பெட் பாய்", கழகத் தோழர்களின் "ஹிட் பாய்"...

லூர்துசாமி சார்'களால் தான் ஊர்களின் முன்னேற்றம்...



" விர்ர்ர்ர்ர்ர்" என்று விசில் சத்தம் கேட்டால் பள்ளி வளாகமே அட்டென்ஷனுக்கு வரும். மாணவர்கள் மட்டும் அல்ல, ஆசிரியர்களும் தான். பி.டி என்றால் அப்படி டெரர்.

அது ஆண்டிமடம் அருகில் உள்ள வரதராஜன்பேட்டையில் இருக்கும் தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி. கண்டிப்புக்கு பேர் போன பள்ளி. அந்தப் பள்ளிக்கே கண்டிப்பானவர் பி.டி மாஸ்டர் என் அன்பிற்குரிய ஆசிரியர் லூர்துசாமி சார்.

சிங்கம் போல சிலிர்ப்பான நடை. கம்பீரமான பார்வை. கணீரென்ற குரல். எதற்கும் அஞ்சாத நெஞ்சம். பள்ளியில் மட்டுமல்ல, ஊரிலும் அப்படிதான். பொதுப் பிரச்சினையில் முதல் குரல் அவருடையதாகத் தான் இருக்கும். தீர்வும் அவரால் தான் இருக்கும்.

முழுதும் கிறித்துவப் பெருமக்களால் நிறைந்த ஊர். பங்குத் தந்தைகள் தான் ஊரின் காட்ஃபாதர். ஆனால் அவர்களையும் "என்ன ஃபாதர் ?" என்ற கெடுபிடியான தோரணையில் தான் பேசுவார்.

ஊருக்கு வருகிற அமைச்சரோ, அதிகாரியோ ஊர் நலன் குறித்த முதல் கோரிக்கை இவருடையதாக இருக்கும். வேலை நடக்காவிட்டால், முதல் கேள்வியும் இவருடையதாகத் தான் இருக்கும்.

பள்ளியில் அவருடைய மாணவனாக இருந்த போதும் சரி, அந்தப் பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக ஆன பிறகும் சரி, அந்தப் பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்ற போதும் சரி அதே அன்பான அழைப்பு தான் " என்ன சங்கரு ".
ஊரில் முதியோர் இல்லம் அமைவதற்கும், கல்லறைத் தோட்டம் அமைவதற்கும், எங்களை முடுக்கி, முன் நின்று செய்தவர் அவர் தான். 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்ச்சை புதுப்பித்தலில், மார்பிள் தளம் அமைத்த பெருமை அவருக்கே என பங்கு தந்தைகளின் பாராட்டு. பதவிகள் இல்லாமலே பணியாற்றியவர்.

ஒன்பது ஆண்டுகளாக விசில் சத்தம் கேட்கவில்லை பணி ஓய்வின் காரணமாக. ஆனால் அந்த கம்பீரக்குரல் ஓங்கி ஒலித்து வந்தது. இனி அந்தக் கம்பீரக் குரலும் கேட்காது.

போன வாரத்தில் என் மொபைலில் இருந்த அவரது தவறிய அழைப்பை, இனி திரும்ப அழைக்க முடியாது. அதை மனதில் இருந்தும் டெலிட் செய்ய முடியாது.

# லூர்துசாமி சார்'களால் தான் ஊர்களின் முன்னேற்றம்...

வியாழன், 2 மே, 2013

மத்திய அரசு - பலி துவங்கியிருக்கிறது....



நாடாளுமன்ற சபாநாயகர் மீராக்குமாரி, சாக்கோவை நீக்க முடியாது என எதிர்கட்சி எம்.பிக்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். நிராகரித்தாலும் கோரிக்கையின் வீரியம் அப்படியே இருக்கிறது.

பாராளுமன்றக் கூட்டு குழுவின் அறிக்கை திட்டமிட்டு "லீக்" செய்யப்பட்டதும், பிரதமரை அழைத்து விசாரிக்கத் தேவையில்லை என்று அறிக்கை தயாரித்திருப்பதும், நேரில் வரத் தயாராக இருந்தும் ஆ.ராசா அவர்களை அழைத்து விசாரிக்க மறுப்பதும் என சாக்கோவின் நடவடிக்கை எதிர்கட்சி உறுப்பினர்களை வெகுண்டெழ செய்துள்ளது.

                                           



சாக்கோவுக்கு எதிராக மனு அளித்துள்ள கட்சிகள் அரசியல் ரீதியாக ஓரணியில் நிற்க முடியாதவர்கள். ஆனால் சாக்கோவின் மூலமான காங்கிரஸின் செயல்பாடு இவர்களை ஒரு நிலைப்பாட்டில் செயல்பட வைத்துள்ளது.

பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், அய்க்கிய ஜனதாதளம், திமுக, அதிமுக, பிஜூஜனதாதளம், திரிணமுல் காங்கிரஸ் என எதிரும் புதிருமான கட்சிகள் ஒன்றாய் சேர்ந்து சாக்கோவுக்கு எதிராக மனு கொடுத்தனர்.

எந்த அட்டர்னி ஜெனரல் வாகனவதியின் சாட்சியத்தை ஜெபிசியின் அறிக்கைக்கு அடிப்படையாக சாக்கோ கொண்டிருக்கிறாரோ, அந்த வாகனவதி நிலக்கரி பிரச்சினையில் காங்கிரசால் பலிக்கொடுக்கப் பட்டிருக்கிறார் தற்போது.

சாக்கோவோ, மீராக்குமாரியோ, வாகனவதியோ எல்லாம் மத்திய அரசின், காங்கிரஸின் கைப்பாவைகளே, காங்கிரஸின் குரலை ஒலிப்பவர்களே. இவர்களே தான் பலியாடுகளும்...

# பலி துவங்கியிருக்கிறது....

விஜய் டி.வியின் நானா நீயா - அரசியல் குறித்து மாணவ்ர்கள்...




கடந்த டிசம்பரில், நான் பங்கேற்ற அந்த விஜய் டி.வியின் நானா நீயா நிகழ்ச்சி குறித்த ஒரு சுவையான செய்தி....

" நமது அரசியல்வாதிகளை பற்றி உங்கள் கருத்து என்ன ? ", இது கோபிநாத்தின் கேள்வி.

மாணவர்களின் பதில்கள் அணிவகுக்க ஆரம்பித்தன....

* திருடர்கள்
* நடிகர்கள்
* சந்தர்ப்பவாதிகள்
* கொள்ளைக்காரர்கள்
* துரோகிகள்
* அயோக்கியர்கள்
* நாட்டை விற்பவர்கள்

இப்படி இதே அர்த்தத்தில், முப்பது மாணவர்களும் வெவ்வேறு வார்த்தைகளில் புகழ் மாலை சூட்டினார்கள். ஒருவர் கூட தவறியும் நல்ல வார்த்தை சொல்லிவிடவில்லை.

எதிர் வரிசையில் நான் புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தேன். நிகழ்ச்சியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார், என கோபிநாத் முன்னரே சொல்லியிருந்தார்.

இருந்தாலும், பேண்ட் மற்றும் கட்டம் போட்ட சட்டையில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை, அவர்கள் அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை என நிகழ்ச்சி முடிவில் இரண்டு மாணவர்கள் சொன்ன போது அறிந்தேன்.

பிறகு சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, அரசியல் மூலம் விளைந்த சில நன்மைகளையும் ஒப்புக் கொண்டார்கள் .

எப்படியாகினும், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் என்றால் இன்றைய இளைய தலைமுறை மனதில் இருக்கும் வெறுப்பின் வெளிப்பாடாகவே இதை உணர்ந்தேன். அடுத்து நடந்தது தான் முரண்சுவை.

மாணவர்களை பார்த்து, அரசியலுக்கு வர விருப்பமுள்ளவர்கள் கை உயர்த்துங்கள் என்று கோபிநாத் கேட்டவுடன், பாதி பேர் கை தூக்கியது தான் ஹைலைட்.

(இதை ஒளிப்பரப்பில் எடிட் செய்து விட்டார்கள். )


# நாடளவு கஷ்டத்துல, நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோலேயில்ல, அது தான் அரசியல் மச்சான் 

புதன், 1 மே, 2013

நியாயங்களும் மாறத் தான் செய்கின்றன....



நடைப்பயிற்சி, வியர்வை வரும் அளவு வேகமாக...

ஒரு மணி நேர பயண கெடு முடியும் தருவாய். வெயில் தாழ்ந்திருந்தாலும் இன்னும் வெக்கை குறையவில்லை.

லேசாக இருள் சூழ ஆரம்பித்திருந்தது. தெரு விளக்குகள் மின்ன துவங்கியிருந்தன. சின்ன கடைகள் நிரம்பிய தெரு. யார் கண்ணிலும் படாமல் சற்று ஒதுங்கி நடந்தேன்.

அகலமான சாலை, கடைகள் இல்லாத பிரதேசம், நடமாட்டமும் அவ்வளவு கிடையாது. அடித்துக் கொண்டிருந்த மொபைலை தவிர்த்து நடந்துக் கொண்டிருக்கிறேன்.

பின்னாலிருந்து தொடர்ந்து ஹாரன் சத்தம். ஏதோ பைக் ஹாரன் சத்தம். சாலையில் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஏன் இப்படி ஹாரன் என்று கோபம் வந்தது.

இடதுபுறம் ஒதுங்கவும் இடம் இல்லை, வலதுபுறம் சாலையில் சிறு பள்ளம். பைக் சற்று பிரேக் அடித்து வரலாம். இருப்பினும் வேகமாக நடந்து வழிவிட்டேன். 

கடந்த பைக் பார்த்து இன்னும் கோபம் வந்தது, நான்கு பேர் பயணம் செய்தனர். ஒரு ஆண், இரண்டு பெண்கள், ஒரு சிறுவன். 

ஒரு பெண்னின் கையில் கைக்குழந்தை...

கோபம் வடிந்தது, நான் இன்னும் சற்று முன்னர் ஒதுங்கி, வழி விட்டிருக்கலாம் என்று தோன்றியது.

# நியாயங்களும் மாறத் தான் செய்கின்றன....