பிரபலமான இடுகைகள்

திங்கள், 31 டிசம்பர், 2012

மக்கள் சந்திப்பு - 3 ; பென்னகோணம் ஊராட்சி.

மழைத் தூறலுக்கிடையே ஊருக்குள் நுழைந்தோம். ஆனாலும் மக்கள் கூட்டம், குறிப்பாக பெண்கள் திரண்டிருந்தனர்.



கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் குன்னம் இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் VGM. வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி உரையாற்றினார். 





பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். பெற்றுக் கொண்டு, அதில் முக்கியமான சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளேன்.

விடைபெறும் போது, நெருங்கிவந்த பெண்கள் தனிப்பட்ட முறையில், ஒரு கோரிக்கை வைத்தனர். பொதுசுகாதார வளாகம் அமைத்து தரக் கோரினர்.

ஆளுங்கட்சியினர் மக்களை நெருங்காத காரணத்தால் தான், மக்கள் அனைத்து கோரிக்கைகளையும், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் வைப்பதாக கருதுகிறேன்.

பெண்கள் திரண்டு வந்ததும், சிறு பிள்ளைகள் அளித்த வரவேற்பும், தேர்தல் வந்துவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.


சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 5


வகுப்புகளையும் பாடங்களையும் பற்றி சொல்வதற்கு இடையில் IIM –ன் கட்டிட வடிவமைப்பு குறித்து சொல்லியே ஆக வேண்டும்.

பெங்களூருக்கு மத்தியில், நூறு ஏக்கர் சோலைவனமாக திகழ்கிறது இந்த வளாகம். எந்தப் பக்கம் திரும்பினாலும் உயர்ந்து வளர்ந்த மரங்களும், செடிகளும், கொடிகளும் என பசுமை வனம்.

நேர்த்தியான புல்வெளியும், வெட்டிவிடப்பட்ட செடிகளும், சீராக பாய்ச்சப்படுகின்ற நீரும் என பராமரிக்கப்படுகின்றது இயற்கை. ஆட்கள் பணியாற்றியபடியே இருக்கிறார்கள்.



IIM-ன் கட்டிடங்கள், கட்டிடக் கலையின் உச்சம் என்று சொல்லலாம்.

எங்கு நோக்கினும் கருங்கல் பாறைகளாலான சுவர்களும், வர்ணம் பூசப்படாத கான்கிரீட் சுவர்களும், அதில் பசுங்கொடிகள் படர்ந்த அழகுமாக மிளிர்கிறது.

நீண்ட நீண்ட நடைபாதைகளே அந்த கட்டிட வடிவமைப்பின் சிறப்பம்சம். ஒவ்வொரு நடைபாதையும் ஒரு பர்லாங்க் தொலைவு இருக்கும். நடைபாதையுடைய மேற்கூறையின் (roof) உயரம் தான் பிரமிக்கவைத்தது.

ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் கூறை என்ன உயரமோ, அந்த உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது நடைபாதையின் கூறை. கூறையும் முழுவதுமாக மூடப்பட்டதாக அமைக்கப்படவில்லை.


சில இடங்களில் மூடப்பட்டும், சில இடங்களில் திறந்த வெளியாகவும், சில இடங்களில் சிறுசிறு திறப்புமாக, சில இடங்களில் கொடிகள் படர்ந்ததாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது கூறை.

இப்படி கொடி போல் படர்ந்திருக்கிற நடைபாதையின் இருபுறமும், வகுப்பறைகளும், அலுவலக அறைகளும், நூலகமும், அங்காடியும், வங்கியுமாக சீரான இடைவெளியில் கிளைத்திருக்கின்றன.


கட்டிடக் கலை பயில்கிற மாணவர்கள் இந்த வளாகத்திற்கு வந்து, தங்களது இறுதியாண்டிற்கான ஆய்வறிக்கைகளை தயார் செய்கிற அளவிற்கு, சிறப்பான வடிவமைப்பு.

எந்த சூழலிலும் இயற்கையான ஒளியும், காற்றும் நிறைந்திருக்கின்ற கட்டிட வடிவமைப்பு.

அந்த நடைபாதையில் நடந்துக் கொண்டிருந்தோம் ச.ம.உ கணேஷ் மற்றும் சேகர் உடன் நானும். பயிற்சி இடம் Central Pergola என போடப்பட்டிருக்கிறதே, என்ன அர்த்தம் என்ற விவாதம் வந்தது.


சற்று விவாதத்திற்கு பிறகு விடை காணப்பட்டது. மூன்று பேரும் பொறியியல் படித்தவர்கள் தான். இருப்பினும் சரியான விடையை சொன்னவர் கணேஷ்.

அவர்கள் இருவரும் இயந்திரவியல் படித்தவர்கள், நானோ மின்னியல் மற்றும் மின்ண்ணுவியல். அந்த வார்த்தையோ கட்டிடப் பொறியியல் தொடர்புடையது. கொடிகள் படர்ந்த தொங்கும் தோட்டம் போன்ற மேற்கூறை என்பதே அதன் அர்த்தம்.

இந்த இயற்கை சூழலில் படிக்கின்ற மாணவர்கள், கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்...

( தொடரும்... )

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 4


இந்திய சுகாதரம் குறித்தான வகுப்பில் வெளிப்பட்ட தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சியூட்டக் கூடியனவாக இருந்தன. காரணம் இந்திய சுகாதர நிலை மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிக பின் தங்கிய நிலை.

ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை.

5 வயது குழந்தைகளின் எடைகுறைவு, பிறந்த குழந்தைகள் எடை குறைவு போன்றவற்றை ஒப்பிட்டால், ஆப்பிரிக்க தேசங்களை விட மிக மோசமான நிலைமை.

உயிர் வாழும் காலம், குழந்தைகள் இறப்பு என எடுத்துக் கொண்டால் பங்களாதேசத்தை விட பின் தங்கிய நிலை.

போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை, போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலை, நிதி ஒதுக்கீடு குறைவு போன்ற காரணங்களால் தான் இந்த் நிலை.

12-ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில், வகுக்கப்பட்ட படி UNIVERSAL HEALTH COVERAGE , 2022-ல் எட்டப்பட வேண்டும். அதன்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அட்டை வழங்கப்பட்டு அதன் மூலம் அனைவருக்கும் சுகாதார வசதிகள் சென்றடைய வேண்டும்.

இந்த திட்டத்தை செயலாக்குவதன் மூலமும், அதிக நிதி ஒதுக்குவதன் மூலமும், கட்டணங்களை நீக்குவதன் மூலமும், இலவச மருந்துகள் வழங்குவதன் மூலமும் இந்தியாவின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்,

இந்த வகுப்பை எடுத்தவர் பேராசிரியர் ஏ.கே.சிவக்குமார். இந்திய அரசின் National Advisory Council-ல் உறுப்பினராக இருப்பவர். எனவே இவரது கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.



அடுத்த வகுப்பு ‘ POLITICAL MARKETING” .

ஒரு அரசியல்வாதியாக நம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியதற்கான வழிமுறைகள்.

MBA வகுப்பில் இருந்த உணர்வு. மார்கெட்டிங்கின் தத்துவங்களை விளக்கி வகுப்பை எடுத்தார் பேராசிரியர் மிதிலேஷ்வர் ஜா, இவர் பெங்களூரு IIM-ல் பணிபுரிபவர்.

கேரளா “ God’s Own Country “ என்ற மார்க்கெட்டிங் யுத்தியை கையாண்டு சுற்றுலாவில் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருப்பதை அழகாக எடுத்துரைத்தார்.

இது போல் ஒவ்வொருவரும் BRAND ஆக வேண்டும். அதனை தக்க வைக்க அடையாளம், உண்மைத்தன்மை, நேர்மை, உறுதித்தன்மை போன்றவைகளை காத்திட வேண்டும்.

மகாத்மா காந்தி என்றால் “புனிதம்”மும், டாடா நிறுவனம் என்றால் “ நம்பிக்கை”யும், நினைவுக்கு வருவது போல அரசியலில் நிலைத்திருக்க விரும்புபவர்கள் தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை பாதுகாத்திட வேண்டும்.

இப்படியாக சுவையான வகுப்பாக இது அமைந்தது.

( தொடரும்... )


வெள்ளி, 28 டிசம்பர், 2012

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 3

மாறி வரும் இந்திய சூழலும், சட்டமன்ற உறுப்பினர்களும் என்ற தலைப்பில் IIMB-ல் பணிபுரியும் பேராசிரியர் ராஜிவ் கௌடாவின் உரை புதிய தகவல்களை தந்தது.

இந்த வகுப்பில் கிடைத்த தகவல்கள் நேரடியாக பயன்படாது என்றாலும், இந்தியாவில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களையும், ஏற்படப்போகும் மாற்றங்களையும் விளக்குவதாக இருந்தது.

உலக பொருளாதாரத்தை கணக்கில் கொண்டால், நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியா, ஜப்பானை முந்திக் கொண்டு 2040-ல் மூன்றாம் இடத்திற்கு செல்லும்.

அதே நேரத்தில், தற்போது இந்தியாவில் 5 கோடியாக இருக்கிற நடுத்தர வர்க்கம்,  2025ல் 58 கோடியாக உயரும். இந்தியாவில் வாழ்வோரில் ஒவ்வொரு மூன்றாவது நபரும் ஏழையாக இருப்பார்கள்.

இந்திய GDP-ல் 1950-51ல் விவசாயத்தின் பங்கு 57%, 2008-2009ஆம் ஆண்டு 18% ஆக குறைந்திறது. தொழிற்துறை 14% லிருந்து 26% ஆக உயர்ந்திருக்கிறது. சேவை பிரிவு 29% லிருந்து 56% ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தப் புள்ளி விபரம் விவசாயத்தின் அவல நிலையை உணர்த்துகிறது. அதுவும் “ விவசாயிகள் வேறு தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மன்மோகன்சிங்கின் காமெடி தத்துவம் வெளிப்பட்டிருக்கிற வேளையில்.

·         நகரமயமாதலின் விளைவுகள்
·         குறையும் நெண் குழந்தைகள் விகிதம்
·         மாநிலங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு
·         கிராம- நகர ஏற்றத்தாழ்வு
·         அரசியலில் பெண்கள்
·         கொள்கைகளின் வீழ்ச்சியும் கூட்டணி அரசியலின் ஏற்றமும்
·         நக்சலிசம்
·         அரசியல் சார்பான ஊடகங்கள்
·         கலவரங்களுக்கு ஊடக வெளிச்சம்
·         சமீபத்திய குடிமக்கள் எழுச்சி
இதை போன்று மக்கள் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்திகள் விவாதிக்கப்பட்டன.

·         சட்டமன்ற செயல்பாடு ( அதிகாரிகளின் ஆதிக்கம் தாண்டி செயல்பட வேண்டும் )
·         தொகுதியின் தலைமை நிர்வாகி ( CEO ) ( வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்)
·         தலைமை பிரச்சினை தீர்வாளர் ( மக்களுக்காக அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன்ங்கள், காவல்துறை, கல்விக்கூட சேர்க்கை... )
·         அரசியல் செயல்பாடு ( எதிர்கட்சிகளை எதிர் கொள்ளுதல், ஆதரவுதளத்தை வலுப்படுத்துதல் )
என சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளை தற்போது ஊடகமும், தொண்டு நிறுவனங்களும் உற்று நோக்க ஆரம்பித்துள்ளன. மும்பையில் ஒரு தொண்டு நிறுவனம் எம்.பி, எம்.எல்.ஏ, மாநகராட்சி உறுப்பினர்களுக்கு மதிப்பெண் அளித்து வருகிறது.

ஆக தொழில்நுட்பங்களை கையாண்டு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்.

( தொடரும்... )

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 2

வகுப்பின் துவக்கமாக, பயிற்சிக்கு புதிதாக வந்திருந்த ச.ம.உ-க்களுக்கு, பயிற்சி பட்டறையின் நோக்கம் மற்றும் PRS –ன் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.


பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 32 ச.ம.உ-க்கள் வந்திருந்தனர். புதுச்சேரியிலிருந்து 11 பேர் வந்திருந்தனர், பாண்டி மினி சட்டசபை போல் இருந்தது.

அடுத்ததாக ச.ம.உ-க்களின் பொறுப்பு மற்றும் செயற்பாடு குறித்த வகுப்பு. இது நாங்கள் கடந்த பயிற்சியிலேயே கேட்ட பாடம் தான், இருந்தாலும் சில புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

வகுப்பெடுத்தவர் PRS நிறுவனத்தின் இயக்குநர் திரு.மதுக்கர். உலக வங்கியில் பணிபுரிந்து, உலக பொருளாதார அமைப்பால், 2008-ஆம் ஆண்டுக்கன Young Global Leader ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

“ பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், மக்கள் நினைப்பது, அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்பது தான். ஆனால் அரசியலமைப்புப்படி சட்டமன்ற உறுப்பினரின் கடமை, இயற்றப் படுகிற சட்டங்களை விவாதிப்பது தான்.

தற்போதைய அரசியல் சூழலில், எந்த மாநில சட்டமன்றத்திலும் விவாதங்கள் இல்லாமலே, ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கேற்ப சட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன.

பதவி உயர்வில், ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பு பாராளுமன்ற மக்களவையில் மூன்றரை மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இது போன்ற வாய்ப்பு சட்டமன்றத்தில் மறுக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் சிறப்பான முறையில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கு பிரதமர் வாழ்த்துக் கடிதம் எழுதுகிறார் என்ற தகவலை சொன்னபோது, நானே சிரித்துக் கொண்டேன்.

தமிழக சட்டப்பேரவையில், எங்களுக்கு பேசவே வாய்ப்பு தரப்படுவதில்லை, மீறி பேச முயன்றால் தூக்கி வெளியேற்றப்படுவதை எங்கே சொல்லி அழ...

இதை போன்ற விவாதங்களில் பங்கேற்பது குறித்தான வழிமுறைகள் ஆராயப்பட்டன. அவ்வப்போது அனுப்பும் ஆய்வறிக்கைகளை பயன்படுத்திக் கொள்ள கூறினர்.

( தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் குறித்த ஆய்வறிக்கைகளை, கடந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அனுப்பி வருகின்றனர். )

விவசாயக் கடன் தள்ளுபடி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவற்றின் நோக்கம், அதன் பயன்பாடு, தேவையானவர்களை சென்றடைந்த்தா போன்ற விவாதங்கள் நட்த்தப்பட வேண்டும்.

ஆனால் நமது சட்டமன்றங்களில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. விவாதங்களுக்கான தயாரிப்புகளுக்கான நேரம் இல்லை, சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றினாலும் பாராட்டு இல்லை என்ற நிலை தான் நிலவுகிறது.

* சட்டமன்றம் செயல்பட்டாலும், நம் திறனுக்கேற்ப பங்களித்திருக்கிறோமா ?

* எவ்வாறு சிறந்த தலைவர்கள் விவாதத்தை ஏற்படுத்தினார்கள் ?

* நமது கருத்துகளை பதிவு செய்ய வேறு தளம் இருக்கிறதா ?

போன்ற கேள்விகளோடு வகுப்பு முடிவுக்கு வந்தது.

கிடைக்கின்ற வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்தி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பிரகாசிப்பது என மற்ற உறுப்பினர்களின் கருத்துகள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது.






( தொடரும்...)

புதன், 26 டிசம்பர், 2012

சட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 1


ஓசூர் போக்குவரத்து நெரிசலை கடந்து, மெல்ல மெல்ல முன்னேறி பெங்களூரில் எங்கள் கார் நுழைந்தது. மறுநாள்(19.12.2012) துவங்க இருந்த India Policy Workshop for MLAs-ல் பங்கேற்பதற்காக.

காலை அதிமுக அரசின் தொடர் மின்வெட்டை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு கிளம்பியதால், காரிலேயே பயணம்.

Google maps-ல் தேடி தேடி IIM Bangalore-அய் அடைந்தோம். Management  Development Centre-ல் அறை என்றார்கள். அங்கே சென்றால், பயிற்சியை  வழங்கும் PRS Legislative Research-ன் அனில் நாயர் காத்திருந்தார்.

மணி இரவு 11.30. எங்களை வரவேற்று, அறை ஒதுக்கி, காலை உணவு நேரத்திற்கு வர சொல்லி அறைக்கு அனுப்பினார்.

இது தான் PRSன் அர்ப்பணிப்பு உணர்வு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பயிற்சி பெற வேண்டும், சிறப்பாக செயல்பட வேண்டும் என தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

மிதமான குளிர். அருமையாக இருந்தது. ஒதுக்கப்பட்ட அறை சிறப்பாக இருந்தது. அரசு கல்லூரியில் இந்த அளவிற்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது Executive Program வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அறை.

மாணவர்கள் என நினைத்திட வேண்டாம். ONGC, BHEL , ICICI போன்ற நிறுவங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு அந்தExecutive  Program. குறுகிய காலப் பயிற்சி.




அறை மூன்று நட்சத்திர அறை அளவுக்கு இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. வெளி குளிர் உள்ளே தாக்காத அளவிற்கு கதகதப்பாக இருந்தது.

காலை எழுந்து சன்னல் திரையை விலக்கி பார்த்தால், காட்டுக்குள் இருப்பது போன்ற ஓர் உணர்வு. சுற்றிலும் மரங்கள், செடிகள், கொடிகள், புல்வெளிகள். காட்டுப் பறவைகளின் இனிய குரல்கள்.

இனிமையாக புலர்ந்தது காலைப் பொழுது. காலைப் பணிகள் முடிந்து, சாப்பிட சென்றோம். பஃபே முறையில் உணவு. கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற உப்பிட்டு, அது தாங்க நம்ம ஊர் உப்புமா.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், உணவிற்கு வர ஆரம்பித்தனர்.

நானும் கும்மிடிப்பூண்டி ச.ம.உ சி.ஹெச்.சேகரும ஏற்கனவே ஹைதராபாத் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் என்பதால், ஏற்கனவே பயிற்சிக்கு வந்தவர்கள் அடையாளம் கண்டு புன்னகைத்தனர்.

மூன்று பயிற்சிகளிலும் கலந்து கொண்ட சம்பத் சிங் வந்திருந்தார். இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. இப்போது ஆறாவது முறை MLA.

உள்(காவல்) துறை அமைச்சர் ஆக இருந்து, இருபதுக்கும் மேற்பட்ட  துறைகளை கையாண்ட அமைச்சர். அவர் பயிற்சிக்கு தொடர்ந்து வருவது,  பயிற்சியின் அவசியத்தை என உணர்த்தியது.

காலை 9.00 மணிக்கு வகுப்பு துவங்கியது...
( தொடரும்... )



செவ்வாய், 25 டிசம்பர், 2012

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம் 2

தொடர் சாலை மறியல் போராட்டம் இரண்டாம் நாளின் போது இன்னும் தீவிரமாகியது. காவல் துறை என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தது. வன்னியர் சங்கத்தினர் இன்னும் உத்வேகத்தோடு களமிறங்கினர்.

காவல்துறை சாலையில் போடப்பட்ட மரங்களை மெல்ல அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய முயன்று கொண்டிருந்தது. ஆனாலும் தடைகள் நீடித்தன.

காவல்துறையின் தலைவர் முதல்வர். முதல்வர் எம்.ஜி.ஆரோ அமெரிக்க மருத்துவ மனையில். ஆட்சி நிர்வாகம் கிட்டத்தட்ட முடங்கியிருந்த நேரம் அது.

முதல்வர் என்று அறிவிக்கப்படாமல், பண்ருட்டி ராமச்சந்திரன் பொறுப்பு முதல்வராக செயல்பட்டதாக பத்திரிக்கைகள் சொல்லிவந்தன. பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு வன்னியர் என்பதால், போராட்டத்திற்கு மறைமுக ஆதரவு கொடுத்ததாக அ.தி.மு.கவிலேயே முனுமுனுப்பு.

பலரின் தியாகத்தால் போராட்டம் எழுச்சியடைந்தது. உயிர்களை பறிகொடுத்து, பலவிதமான அடக்குமுறைகளுக்கும் இன்னல்களுக்கும் இடையே வெற்றிகரமாக நடந்த்து போராட்டம்.

சில குழுக்கள் தலைமறைவாக பல கிராமங்களுக்கும் சென்று போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மறுநாளும் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. சாலைகளில் பேருந்துகளை காவல்துறையினரின அணிவகுப்புடன் நடத்தினர்.

இதனை தடுத்தே தீர வேண்டும் என்று பல கிராமங்களில் முடிவெடுத்தனர். அதற்கு ஒரே வழி சாலையோரம் இருக்கும் மரங்களை வெட்டுவது. சாலைகளை சேதப்படுத்துவது.

காவல்துறையின் நடவடிக்கைகளை பார்த்து, அடுத்த கட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் இருந்த பாலங்கள் குறிவைக்கப்பட்டன. சாலைகளின் இணைப்பு நரம்புகள் பாலங்கள் தான்.

பாலங்கள் இல்லையென்றால் புதியப்பாலங்கள் அமைக்க நாட்கள் ஆகும். அதுவரை போக்குவரத்து சீராக நாளாகும் என்பதை கணித்து குறிவைக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் இருந்த பாலங்கள் அடையாளம் காணப்பட்டு, தகர்க்கப்பட்டன.

போராட்டம் தீவிரமாகியது. போலிசார் இதனை எதிர்பாக்கவில்லை. கலகக்காரர்கள் என்று அறிவித்து கண்டதும் சுட உத்தரவிட்டனர். கோலியனூர் கூட்டு ரோட்டில் முதல் துப்பாக்கி சூடு.

துப்பாக்கி சூடு குறித்து கவலை கொள்ளாமல், போராட்டக்குழுவினர் சாலையில் இறங்கி போராடினர். துப்பாக்கி சூடு விக்கிரவாண்டி, பண்ருட்டி என விரிவடைந்தது.

கிராமங்களுக்கு போலிசார் சென்று வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்த சம்பவங்கள் ஆரம்பித்தன். ஆண்கள் வீட்டில் இருக்க இயலாத நிலை. பல கிராமங்கள் போலிசாரால் சூறையாடப்பட்டன.

உயிர் பலி 21-ஐ எட்டியது....

இந்த சம்பவங்கள் அத்தனையும் நடைபெற்ற போது அ.தி.மு.க ஆட்சி...

( தொடரும்...)