பிரபலமான இடுகைகள்

வியாழன், 9 ஏப்ரல், 2015

ஒரு பிரிட்டிஷ் காலத்து பங்களா.....

ஏற்காடு மலைச் சாலை மீது வாகனங்கள் அணிவகுத்தன. ஏற்காடு மீது ஏற்கனவே ஒரு காதல் உண்டு. ஊட்டி, கொடைக்கானல் போல இன்னும் வியாபாரக் கேந்திரம் ஆகவில்லை ஏற்காடு.

  

ஊட்டி, கொடையில் இயற்கை மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது. ஏற்காடு இன்னும் இயறகை முழுதும் கெடாமல் உள்ளது. ஏற்காடு குளிர் மிதமானது, இதமானது. அந்த இரு இடங்களில் சற்றுக் கூடுதல் குளிர் தான்.


ஏற்காடு உள் நுழைந்தோம். ஏரி கடந்தோம். பேருந்து நிலையம் தாண்டினோம். 

“மாப்பிள்ள, அடுத்த மலைக்கு போறோமா?” லேசாக வடிவேலு ஸ்டைலில் வந்த கேள்விக்கு, “சும்மா வாடா, வழக்கமான இடத்தில தங்கினா எப்படி?. வந்து பாரு, அப்புறம் சொல்லு” என்றார் ராம்ஸ்.


கார் சென்று நின்றது. இறங்கி நின்றோம். 70 mm-ல் காட்சி விரிவது போல் இருந்தது. முன்புறம் செடி,கொடிகள் அடர்ந்து நிறைந்திருந்தன. அதனுள் பொதிந்திருந்தது ஒரு பிரிட்டிஷ் காலத்து பங்களா. சிலருக்கு பூத் பங்களா என்று கூட தோன்றி இருக்கலாம்.


உள்ளே நுழைந்தால் பெரிய பெரிய ஹால்கள். டார்மென்ட்ரி ஸ்டைலில் தங்கும் வசதி. ஆமாம், வரிசையாகக் கட்டில்கள். பல கட்டில்களில் இரண்டு அடுக்காக மேலும்,கீழும் இரண்டு படுக்கை வசதிகள், ரயில் பெர்த் போல.


இங்கு தங்கியதால் ஹாஸ்டலில் ஒரே ரூமில் பல பேர் தங்கிய உணர்வு வந்தது. ரிசார்ட்டிலோ, ஹோட்டலிலோ தங்கி இருந்தால் இரண்டு பேர், மூன்று பேர் என தனித்தனி அறையில் தங்கி இருந்திருப்போம். இங்கு தங்கியதால் பழைய ஹாஸ்டல் போலவே நாட்கள் கழிந்தன இனிமையாக.


கொண்டு வந்த பெட்டிகளை வைப்பதற்குள், “எல்லோரும் சீக்கிரம் வாங்க. டிபன் ரெடி. முடிஞ்சவங்க குளிச்சிட்டு வாங்க, முடியாதவங்க குளிக்காம வாங்க. ஆனா வந்திங்கன்னா, சூடா சாப்பிடலாம்”, என்றார் ராம்ஸ்.


அந்த மூன்று நாட்களும் ராம்ஸ் ஹாஸ்டல் வார்டன் போல, குடும்பத் தலைவன் போல அரற்றி, அணைத்து கொண்டு சென்றார். அவர் அழைத்த இடம் மெஸ். பிரத்தியேக சமையல். ஒரு பேக்டரி போல இயங்கிக் கொண்டு இருந்தது.


காலேஜ் நாட்கள் போலவே இருந்தது. சிலர் முகம் கழுவாமலே வந்து நின்றனர். சிலர் முகம் மட்டும் கழுவி, குளித்தது போலக் காட்டிக் கொண்டு வந்தனர். சிலர் குளித்து, முடித்து சுத்த சுகாதாரவான்களாக வந்தனர்.


போனவர்கள் கையில் தட்டு தரப்பட்டது. பஃபே. இட்லி, இரண்டு சட்னி, சாம்பார். தோசை சூடாக போடப்பட்டு தரப்பட்டது. சிக்கனும் ரெடி காலையிலேயே. அருமையான சுவை. அண்ணாமலை மாணவர்கள் சாப்பாட்டில் என்றும் தனி கவனம் என்பது உலகம் அறிந்தது. காரணம் பல்கலைக்கழக மெஸ்கள் தான். அது மீண்டும் நிரூபணமானது

வயிறு நிறைந்தது. “செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்”. குறள் சொன்னது. இங்கு வயிற்றுக்கு ஈயப்பட்ட பிறகு, கண்ணுக்கும், செவிக்கும் உணவு தயாராக வைத்திருந்தார் ராம்ஸ்.
(தொடரும்)
(அண்ணாமலை பொறியியல் மாணவர்கள், ஏற்காடு சந்திப்பு-2)
(இது 2009-ல் நடந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகான அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்களின் சந்திப்பு. வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 25-ம் ஆண்டு சந்திப்புக்கான தயாரிப்பு இது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக