தொலைக்காட்சியில் கார்டூன் சேனல் ஓடிக் கொண்டிருந்தது. சின்ன மகன் ரசித்துக் கொண்டிருந்தார். அவரது பேவரிட். பவர் ரேஞ்சர்ஸ் நிகழ்ச்சி.
நான் அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தேன். முகநூலையும், வாட்ஸ் அப் குரூப்களையும் அலசி ஆராயும் முயற்சி தான்.
அறையில் இருந்து திரும்பி வந்த மூத்த மகன் டிவியை பார்த்தார். டென்ஷன் ஆனார். அவர் பார்த்துக் கொண்டிருந்த T20 கிரிக்கெட் மாட்ச் மாற்றப்பட்டிருந்தது.
மும்பை இந்தியன் வகையறா அவர். மும்பை இந்தியன் அணியினர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கேம் நெருக்கடியாகப் போய் கொண்டிருந்தது.
இவரே ஸ்டேடியத்தில் இருப்பது போல பதற்றத்தில் இருந்தார். அப்போது ஓவர் இடைவேளை. அதற்கு அவர் அறைக்குள் போய் வருவதற்குள், ரிமோட்டை கைப்பற்றி இருந்தார் சின்னவர்.
அடுத்த ஓவர் ஆரம்பித்திருக்கும் என்ற ஆர்வம் இவருக்கு. "சேனல் மாத்துடா", பெரியவர். "கொஞ்சம் இருடா" சின்னவர். "ரன் ரேட் பாக்கனும்டா"
வாக்குவாதம் வளர ரிமோட்டை கைப்பற்றும் முயற்சியில் அதிரடியாக இறங்கினார் பெரியவர்.
அப்போது தான் சின்னவர் தனது பிரத்யேகமான பன்ச் டயலாக்கை அவிழ்த்து விட்டார். "How dare you to touch the remote?".
இது அவருக்கே சொந்தமான டயலாக். அடிக்கடி எங்கள் மேல் பிரயோகப் படுத்தப்படும், எந்த சூழ்நிலைக்கும் பொருந்தும் வகையில்.
இப்போது சரியாக எண்ட்ரி கொடுத்தார் இணையர். "என்னப்பா பிரச்சினை?" என்றவர் பார்த்த வினாடியில் புரிந்துக் கொண்டார் சூழ்நிலையை. உடனடி தீர்ப்பு கொடுத்தார்.
"அனேகன் படம் வைப்பா ". செம தீர்ப்பு. மொபைலை புறந்தள்ளி நிமிர்ந்தேன். ஆதரித்தேன் தீர்ப்பை. அண்ணன், தம்பி இருவரும் தடுமாறினர் ஒரு நிமிடம்.
சுதாரித்த தம்பி அம்மாவை பார்த்து, "How dare you to tell this" என்று ஆரம்பித்தார்.
நான் இடைமறித்தேன், "இருப்பா ". அவர் என்னை முந்தினார், "How dare you to " என்பதற்குள் நான் முந்தினேன், "இந்தப் படத்தை எத்தன தடவப்பா ஓட்டுவ. நூறு தடவ ஓடிருக்கும் போல"
டயலாக்கை சொன்னேன். வந்த பதிலில் மிரண்டு போனேன். "ஆமாம் அதையே தான் சொல்லுவேன். இப்ப ஒரு வார்த்தை, அப்ப ஒரு வார்த்தை இல்ல, எப்பவும் ஒன்னு தான்". படிக்கிறது நாலாம் வகுப்பு.
"இரு, இரு ஸ்டேடசா போடறன்", மிரட்டினேன். "அய்யய்யோ, என்ன போடப் போறீங்க ?", என்று துருவினார் இணையர். "பேஸ்புக்கில் காண்க" என்றேன்.
சின்னவர் மேலும், கீழுமாக ஒரு பார்வை பார்த்தார்.
இப்போ ஸ்டேடஸ் போட்டாச்சி. அங்க டயலாக் தயாரா இருக்கும்.
# "How dare you to post this status?"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக