பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

சாதிக்க வேண்டியது நிறைய இருக்குங்க...

அவருக்கும் எனக்குமாக ஆரம்பத்தில் நேரடியாக அதிக நெருக்கம் கிடையாது. ஆனால் எங்கள் இருவர் தந்தையரும், கொள்கையால் இணைந்தவர்கள். நான் அரசியலுக்கு வந்து செந்துறைக்கு அடிக்கடி செல்லும் முன் அவர் இடம் பெயர்ந்து விட்டார், பணி நிமித்தமாக.

           

சிறு வயதுகளில் பார்த்திருந்தாலும், பிறகு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இருந்தாலும் பொது நண்பர்கள் மூலமாக அவரது வளர்ச்சியை நான் ரசித்து வந்தேன், அவரும் அப்படியே என பின்னர் அறிந்தேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெயர் அறியும் பேராசிரியர்களில் ஒருவராக ஆகி விட்டிருந்தார். நான் சட்டமன்ற உறுப்பினரான பிறகு அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும் வாய்ப்பு.

அவர் பணிக்கு சென்றிருந்தாலும் அங்கேயும் கழகக் குழாம் தான். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த அண்ணன் பேராசிரியர் சபாபதிமோகன் அவர்களின் சிஷ்யர் இவர். இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு பணிக்கு சென்றதே தனிக் கதை.

அவர் தமிழில் முதுகலைப் படித்து, ஆராய்ச்சியும் முடித்து, முனைவராகி இருந்த நேரம். இடையில் ஒரு வருடம் பொழுதுபோக்காக படித்து, உடற்கல்வி ஆசிரியராகி பெற்றிருந்த பட்டத்தை, அரசு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். அதற்கு அழைப்பு வந்து அரசுப் பணியில் சேர்ந்து, காலம் ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் அவரது தந்தைக்கு மாத்திரம் மனம் கொள்ளவில்லை. “என்ன பெரிய அரசு பணி, படித்த தமிழ் துறையில் பணியாற்ற முயற்சி செய்” என மகனைப் பணித்தார். முயற்சித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் இணைந்தார்.

அவர் அண்ணன் அரங்க.பாரி.

தமிழ் மீது கொண்ட பற்றால் இவர் பெயர் பாரி, கொள்கை மீது கொண்ட பற்றால் இவரது அண்ணன் பெயர் அண்ணாதுரை. ஆசிரியரானாலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் அய்யா அரங்கசாமி.

அண்ணன் பாரி பேராசிரியர் ஆனார். அவர் எழுதிய புத்தகங்கள், “பாவேந்தரின் பாவிருந்து, எளிய முறையில் நெடுநல்வாடை, கண்ணீர் கண்ணீர், காதல் நேரம், மலை தந்த முத்து என பத்துக்கும் மேல். இருபதுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளி வர காரணமாக இருந்தார்.

மத்திய அரசால், செம்மொழி ஆய்வு மையத்தின் மூலம், “இளம் அறிஞர்கள்” என தேர்ந்தெடுக்கப்பட்ட அய்வரில் இவரும் ஒருவர். இந்திய குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்பட்டது. இதனைப் பாராட்டி, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால், ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது.

இது எங்கள் மண்ணுக்கு கிடைத்த பெருமை என்ற முறையில், அண்ணனுக்கு பாராட்டு விழா நடத்த விரும்பினேன். “இது என்ன பெரிய விஷயம், இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கிறது” என அன்பாக மறுத்து விட்டார். ஆனால் இப்போது பாராட்டு விழா நடத்தும் அளவிற்கு சாதித்து விட்டார்.

ஆமாம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் ஆக உயர்ந்திருக்கிறார். அது எவ்வளவு பெரிய சாதனை, என்பதை தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமணி நாளிதழ் நடுப்பக்கத்தில் எழுதியதை இங்கு கொடுக்கிறேன்.

“அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பதவி என்பது எப்பேர்பட்ட பெருமைக்குரியது என்பது தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். அந்த நாற்காலியை அலங்கரித்த தமிழறிஞர்கள் சிலரின் பட்டியலை தருகிறேன். நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையர், ‘யாழ்ப்பாணம்’ விபுலானந்த அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், ‘பண்டிதமணி’ கதிரேசன் செட்டியார், கா.சு.பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், வ.சுப.மாணிக்கனார், க.வெள்ளைவாரணர், லெ.ப.கரு.இராமனாதன் செட்டியார், ஆறு.அழகப்பன், முத்து.வீரப்பன் ஆகியோர் அமர்ந்த அந்தப் பெருமைக்குரிய நாற்காலி.”


“எப்போ விழா வச்சுக்கலாம்ணே” என்றேன். இப்போதும் அண்ணன் அரங்க.பாரி, “இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்குங்க” என்று தான் சிரிக்கிறார். இன்னும் சாதிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது.

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அரங்க.பாரி, சொல்லவே இனிக்கிறது தமிழ்.

# வாழிய தமிழாய், வெல்க தமிழாய், உயர்க தமிழாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக