பிரபலமான இடுகைகள்

சனி, 25 ஏப்ரல், 2015

ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்த "மனிதன்" !

இது அண்ணன் திருச்சி சிவா அவர்களின் வாழ்நாள் சாதனை. திருநங்கைகள் வாழ்வில் ஓர் பொன்னாள். திமுக-வின் சமூகநீதிப் போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்.

      

பாராளுமன்றத்தில் அரசு கொண்டு வரும் மசோதாக்கள் தான் சட்டமாக வடிக்கப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு பொதுப் பிரச்சினைக்காக மசோதா கொண்டு வரும் வாய்ப்பும் பாராளுமன்றத்தில் உள்ளது.

ஆனால் இது போன்று தனி நபர் தீர்மானம் 1970-ல் ஒரு முறை நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அதற்கு பிறகு 45 ஆண்டுகள் கழித்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்து அனைவர்ஆதரவோடும் நிறைவேற்றியது அண்ணன் சிவா அவர்கள் சாதனை.

அதிலும் அவர் யாருக்காக இந்த முயற்சியை எடுத்துக் கொண்டார் என்பது தான் முக்கியமானது. திருநங்கைகளுக்காக என்பது தான் வரலாறு. தமிழகத்தில் இன்றும் திருநங்கைகளுக்கு பெரிய அளவில் மரியாதை கொடுப்பதில்லை.

ஆனால் வடமாநிலங்களில் திருநங்கைகள் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தமாட்டார்கள். குழந்தை பிறந்த உடன் திருநங்கைகள் ஆசீர்வதிக்க வேண்டும் என்பது இன்றும் மரபாகவே இருக்கிறது. ஆனால் அவர்களுக்காக அந்த வடபுலத்தில் இருந்து குரல் வரவில்லை.

தமிழகத்திலிருந்து கழகக் குரல் தான் ஒலித்திருக்கிறது. அதற்கு காரணம் உண்டு. சமூகநீதி தான் இதற்கு அடிப்படை. சமூகத்தில் யார் எல்லாம் புறக்கணிக்கப் படுகிறார்களோ, அவர்களுக்காக குரல் எழுப்பியவை திராவிட இயக்கங்கள் தான்.

மதரீதியாக, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை திராவிட இயக்கம். மகளிருக்கு சம உரிமை கேட்டதும் திராவிட இயக்கம் தான், தந்தை பெரியார் தான்.

அந்த அடிப்படையில் தான் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக விளங்கிய மூன்றாம் பாலினத்தனருக்கு முதன் முதலில் அங்கீகாரம் வழங்கினார் தலைவர் கலைஞர்.

குடும்ப அட்டைகள் கூட வழங்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு, முதன்முதலில் வழங்கியது தலைவர் கலைஞர் ஆட்சியில் தான். 15.04.2008 அன்று ‘தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்’ தொடங்கப்பட்டது.

அடையாள அட்டைகள், தொகுப்பு வீடுகள், வீட்டுமனைப் பட்டாக்கள், காப்பீடு திட்ட மருத்துவ அட்டைகள் என அனைத்து விதமான உதவிகளும் தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் வழங்கப்பட்டன. அது வரை இந்த அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் தான் வாழ்ந்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த தனி நபர் மசோதாவை திராவிட இயக்கத்தின் பிரதிநிதியாக நின்று அண்ணன் சிவா அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவரது உணர்வை வணங்குகிறேன். அவரது பணியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

இனி அவர்களுக்கு “சம உரிமை” கிடைப்பதற்கான சட்டப்பூர்வமானப் பணிகள் துவங்கிவிடும்.

# இந்திய திருநங்கையர்களின் கலங்கரை விளக்கு அண்ணன் சிவா வாழ்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக