தளபதி அவர்கள் காரில் இருந்து இறங்கும் போதே, “என்ன ஆச்சி?” என்று கேட்டார். கொறடா அண்ணன் சக்கரபாணி,”கேட்டிருக்கோம் அண்ணா. தயங்கறார். ஆனா சரியா வரும்னு நினைக்கிறேன்” என்றார்.
காலையிலேயே சட்டமன்ற திமுக அலுவலகத்திற்கும் சபாநாயகர் அறைக்குமாக பரபரப்பாக சென்று வந்துக் கொண்டிருந்தார் அண்ணன் கொறடா. இது நேற்று (31.03.2015) நடந்த நிகழ்வு.
தளபதி அவர்கள் உடன் வந்த முன்னாள் அமைச்சர் அண்ணன் ஏ.வ.வேலு இப்போது சபாநாயகர் அறை நோக்கி சென்றார். என்ன நடக்கிறது எனத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம் சிலர்.
அரசின் நிதிநிலை அறிக்கை மீது தளபதி அவர்களது உரை அன்று.
புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த எங்களை தளபதி நோக்கினார். “நான் இன்று உரையாற்றும் நேரத்தை, சற்று முன்னரே வழங்கக் சபாநாயகரிடம் கேட்க சொல்லியிருக்கிறேன்.”
“நேற்று நம்முடைய வாணியம்பாடி நகர் செயலாளர் சிவாஜிகணேசன் விபத்தில் இறந்து விட்டார் அல்லவா. அவரது இறுதி ஊர்வலம் மாலை 04.00 மணிக்கு. சட்டமன்றத்தில் உரையாற்றி விட்டு அதற்குள் சென்று விட வேண்டும். அதற்காகத் தான் சபாநாயகரிடம் கேட்கச் சொன்னேன்”.
“சிவாஜிகணேசன் மூன்று, நான்கு முறை நகர செயலாளர். ஒரு முறை நகர் மன்றத் தலைவர். கடுமையான உழைப்பாளி. தனக்கு என்று ஒரு மரியாதை பெற்றவர்” என்று அவர் குறித்த நினைவுகளில் மூழ்கினார் தளபதி.
“கொள்கை முரசு நாகூர் அனிபா, வாணியம்பாடி இடைத்தேர்தலில் ஒரு முறை கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டார். அப்போது அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. உடனே அவரை லாரி மீது உட்கார வைத்து, அவர் பாடிய பாடல்களை ஒலிபரப்பி சமாளித்தவர் சிவாஜிகணேசன்”
“தற்போது நடைபெற்ற கழகத் தேர்தலின் போது, சிவாஜிகணேசனை அழைத்து சில ஆலோசனைகளை சொன்னேன். முதலில் வருத்தப்பட்டு பேசி விட்டார். பிறகு அவரே அழைத்து, நீங்கள் சொன்னது தான் கழக வளர்ச்சிக்கு சரி என்று ஒப்புக் கொண்டார்” என அவரது புகழ்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார்.
தொண்டன் புகழ் பாடும் தலைவர்.
இதற்குள் அண்ணன் ஏ.வ.வேலு திரும்பினார். “கொடுக்கலாம்னு நினைக்கிறார். ஆனா மற்ற கட்சிக்காரங்க ஒத்துக்குவாங்களான்னு யோசிக்கிறார்” என்றார். டி.ஆர்.பி ராஜாவோ, ”வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை” என்றார்.
“நாளை சென்று விசாரித்துக் கொள்ளலாம்” என ஒருவர் கருத்து தெரிவிக்க, மறுத்தார் தளபதி. “எவ்வளவு நேரமானாலும், இறுதிச் சடங்கு முடிந்தாலும் அவர்கள் வீட்டுக்கு சென்று வந்து விட வேண்டும். அது தான் நாம் அவருக்கு அளிக்கும் மரியாதை” என்றார்.
நிலைமையை வாணியம்பாடியில் இருந்த அண்ணன் துரைமுருகனிடம் எடுத்து சொன்னார் ஏ.வ.வேலு. சிவாஜிகணேசனது இரண்டு மகன்களும், எத்தனை மணிக்கு தளபதி வந்தாலும், பிறகு தான் இறுதி ஊர்வலம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் அவை கூடியது. தே.மு.தி.க உறுப்பினர்கள் மீதான தண்டனையை குறைக்க வேண்டும் என தளபதி கோரினார்கள். அனைத்து எதிர்கட்சிகளும் குரல் கொடுத்தார்கள். அரசு ஏற்கவில்லை. கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.
கழக அலுவலகத்தில் அமர்ந்து தேநீர் அருந்தினோம். “நீங்க சாப்பிட்டு விட்டு வாங்க. நான் முன்னே செல்கிறேன். எப்படியாவது பேசிவிட்டு, வாணியம்பாடி செல்ல வேண்டும்” என கிளம்பி அவைக்கு சென்றார் தளபதி.
நிதிநிலை மீது உரையாற்றுவது மிக முக்கியமானது. அது மக்களுக்கானப் பணி. சிவாஜிகணேசனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவது அவசியமானது. இது கழகத் தோழர்களுக்கு கொடுக்கும் மரியாதை. இரண்டையும் செய்துவிட வேண்டும் என்ற அவரது தவிப்பு புரிந்தது.
முதலில் செ.கு.தமிழரசன் பேசினார். பிறகு ஒரு அதிமுக உறுப்பினர் பேசினார். அடுத்து மற்ற எதிர்கட்சியினர் பேசி, தளபதி அவர்கள் பேச வேண்டும். ஒரு வழியாக சபாநாயகர் பேச அனுமதித்தார். முன்னதாக பேச அனுமதித்த சபாநாயகருக்கு நன்றி தெரிவித்து, தனது உரையை துவங்கினார் தளபதி.
ஆணித் தரமான வாதங்கள். ஒவ்வொரு வரிக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்களும் எழுந்து, இடைமறித்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் தளபதியின் கேள்வியில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தடுமாறிப் போனார். அருமையான வாதம். மக்கள் பணி முடித்தார்.
கிளம்பினார் வாணியம்பாடிக்கு, தொண்டன் சிவாஜிக்கு மரியாதை செலுத்த. தலைவன் வருகைக்காக அங்கே எல்லோரும் காத்திருந்தார்கள், சிவாஜியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக