பிரபலமான இடுகைகள்

புதன், 1 ஏப்ரல், 2015

முகத்தில் மேக்கப் பவுடரை பூசினார்

வழக்கம் போல தொலைக்காட்சி விவாதம் என்ற முறையில் போனேன். அது தான் முதல் முறை, அந்த தொலைக்காட்சிக்கு போவது. ஏற்கனவே சிலமுறை அவர்கள் அழைத்த போதிலும், பங்கேற்கின்ற சந்தர்ப்பம் அமையவில்லை.

அந்த சேனல் பரபரப்பாகி இருந்தாலும், பல நேரங்களில் நான் பங்கேற்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் அழைத்த போது, வாய்க்கவில்லை.

          Displaying IMG_1169.JPG

இதற்கிடையில் தந்தி தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, ஜீ டிவி என பங்கேற்று வந்தேன். அது ஏனோ அந்த இரண்டு தொலைக்காட்சிகளிலும் தள்ளிப் போனது.

அவை சன் தொலைக்காட்சி, புதியத் தலைமுறைத் தொலைக்காட்சி.

அதில் புதியத் தலைமுறை தொலைக்காட்சிக்கு முதல் முறையாக சென்றேன். வழக்கம் போல, டிராபிக் தொந்தரவுகள் நீங்கி ஸ்டுடியோ சென்றடைந்தேன். நேரம் விரைந்துக் கொண்டிருந்தது.

வரவேற்றவர் அவசரமாக உள்ளே அழைத்து சென்றார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரன் காத்திருந்தார். மற்ற சிறப்பு அழைப்பாளர்களும் காத்திருந்தார்கள். அழைத்து சென்றவர் என சட்டையை பார்த்தார், அரங்கின் பின்புற அமைப்பை பார்த்தார்.

“அண்ணா, நீங்க சட்டைய மாத்தனும்” என்றார். நான், “ஏன்” என்றேன்.

“அரங்கின் பின்புறம் நீலநிறம், உங்க சட்டை இளம் வாடா மல்லிக் கல்ர். இது மேட்ச் ஆகாது. வழக்கமா அரசியல்வாதியா வெள்ளை சட்டைல வருவீங்கன்னு எதிர்பார்த்தோம். வேற சட்டை மாத்தனும்’ என்றார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

வேறு சட்டைகளை எடுத்துக் கொடுத்தார். போட்டுப் பார்த்தேன். வயிறு இடித்தது. இன்னும் சில, கையே நுழையவில்லை. “காலேஜ் பசங்க போடற சட்டைய கொடுத்தா, நான் என்ன பண்றது. இப்ப போய் திடீர்னு இளைக்க முடியுமா?”என்றேன் நான்.

“சரி அண்ணா. வேற வழி இல்ல. உங்க சட்டையே போட்டுக்குங்க. லைட்டிங் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்.” என்றார் ஒருங்கிணைப்பாளர். “சரி” என்று என் சட்டையை மீண்டும் போட்டுக் கொண்டு நகர்ந்தேன்.

இப்போது ஒருவர், கையில் எதையோ எடுத்துக் கொண்டு வந்தார். என் முகத்தில் ஒத்தினார். அது, மேக்கப் ஸ்பாஞ்ச். பிசுபிசு என்றது. தொட்டால் ஒட்டியது. அது செயற்கையான மேக்கப். முகத்தில் மேக்கப் பவுடரை பூசினார். நான் அது வரை பழகியிராதது. நான் சாதா பவுடரே பூசாதவன். 

இது (சட்டை, மேக்கப்) எதுவும் வேறு தொலைக்காட்சியில் கிடையாது.

நிகழ்ச்சியில் உட்கார்ந்தேன். லேசாக முகம் அரித்தது, சொறிய முடியவில்லை. காரணம் “லைவ்” நிகழ்ச்சி. சமாளித்து பேசினேன். நிகழ்ச்சியை நிறைவு செய்தேன். நிகழ்ச்சி முடிந்து, முகம் கழுவி, விடுதலைப் பெற்றேன்.

அப்போது தான், பழைய நினைவு ஒன்று மனதில் வந்து போனது...

அப்போது நான் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். ஆளுங்கட்சி. ஒரு நாள் ஒரு செய்தி. ‘ இயக்குனர் தங்கர்பச்சான் உங்களை சந்திக்க விருப்பப் படுகிறார்”. அப்போது ஆண்டிமடத்தில் அவரது "பள்ளிக்கூடம்" படப்பிடிப்பு.

நான் சொன்னேன்,”நானே அவர் ரசிகன். அவர் படம் பார்த்து உருகுகிறவன். "அழகி" பட ரசிகன். நம் மண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். நானே அவரை பார்க்க வருகிறேன்”

சென்று சால்வை அணிவித்து மகிழ்ந்தேன். “இந்த திரைப்படத்தில் தலைக் காட்ட வேண்டும்” என்றார். “சரி அண்ணா. எவ்வளவு நேரம்?” என்று கேட்டேன். “ஒரு வாரம்” என்றார்.

“அண்ணா, தலைவர் கலைஞர் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவே எனக்கு நாட்கள் போதவில்லை. ஒரு வாரம் சிரமம். ஒரு நாள் வருகிறேன்” என்றேன். “சரி, அவசியம் வாருங்கள்” என்றார்.

நானும் ஒரு நாள் சென்று பங்கேற்றேன். பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்தக் காட்சி, திரைப்படத்தில் இடம்பெற்றது. பார்த்தவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர், நானும் தான். இப்போதும் “பள்ளிக்கூடம்” தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானால், சென்சேஷன் தான்.

இப்போது முகநூலில் தொடரும் எழுத்தைப் பார்த்து, "அடுத்து திரைப்படத் துறையா?" என்று கேட்கிறார்கள் சில நண்பர்கள்.

மேக்கப் ஒத்துவரவில்லை தான். சூப்பர் ஸ்டார் சொல்ற மாதிரி....

# ஆனால் காலம் என்ன கையில் வைத்திருக்கிறதோ ?

            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக