பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

பெயரை கேட்டால் அனைவரும் மிரள்வார்கள்...

பெயரை கேட்டால் அனைவரும் மிரள்வார்கள். பெயர்: பக்கிரி. சினிமாக்களால் பக்கிரி என்ற பெயர் அப்படி ஆகிப் போனது.

   

அதிலும் திமுக நகர செயலாளர், அதிலும் ஏழு முறை நகர செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் என்றால், மிரட்சிக்கு கேட்கவே வேண்டாம்.

அவர் பொன்.பக்கிரி. அரியலூர் நகர திமுக செயலாளர். அப்போது அரியலூர் பேருராட்சி தலைவர். அதிலும் மாவட்டத்தில் மூத்த தலைவர்.

அரசு அதிகாரிகள் இப்படி, அவரைப் பற்றி கேள்விப்பட்டு மிரண்டு போயிருப்பார்கள். ஆனால் நேரில் சந்திக்கும் போது தான், தலைகீழாக போய்விடும்.

தான் யாருக்காக சிபாரிசுக்காக போகிறாரோ, அவர்களை விட இவர் கெஞ்சிக் கேட்க ஆரம்பித்து விடுவார்.

"அய்யா, இவங்க ரொம்ப ஏழை. நீங்க தான் பார்த்து காப்பாற்றனும். அதனால தான் நேரில் வந்தேன்" என்று சொல்வதிலேயே வேலை முடிந்துவிடும்.

அப்படிப்பட்ட எளிய மனிதர், அய்யா பொன்.பக்கிரி.

பதின் வயதுகளிலேயே, கழகத்தில் இணைந்து விட்டார். திமுக எதிர்கட்சியாகக் கூட வருமா என நினைத்திடாத காலம் அது. அவரது கழகப் பணி, பதவியை கொண்டு வந்து சேர்த்தது.

1978 -ல் அரியலூர் நகர செயலாளராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். அதிலிருந்து போட்டியிட்டும், ஒருமனதாகவும் ஏழு முறை நகர செயலாளர். இது வரலாறு.

56-வது வயதில் தான் அரசியல் பதவிக்கு வந்தார். 1996ல் அரியலூர் பேரூராட்சி தலைவர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு.

அப்போது அரியலூரில் குடிநீர் பிரச்சினை. உள்ளாட்சி அமைச்சர் கோசி.மணி அவர்களை சந்தித்தோம். அவர் சட்டப்படி புதிய திட்டம் வழங்க முடியாது என்று கூறிவிட்டார்.

அய்யா பொன்.பக்கிரி தன் வழியில் போனார். உயர் அதிகாரியை சந்தித்தார். தன் பாணியில் பேசினார். 10 கோடிக்கு புதிய போர்வெல் திட்டம் வாங்கினார். அது தான் பொன்.ப.

ஜெயலலிதா முதல்வராகி, சென்னை கடற்கரையில் கண்ணகி சிலை அகற்றப் பட்ட நேரம். தமிழகம் எங்கும் கண்ணகி சிலை வைக்கப்படும் என்று தலைவர் கலைஞர் அறிவித்தார்கள்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் கண்ணகி சிலையை அன்பகத்தில் வைத்தார்கள். இரண்டாம் கண்ணகி சிலையை அரியலூரில் நிறுவ பொன்.ப என்னை தயார் படுத்தினார்.

நான் ஒப்புக் கொண்ட நாள் மாலையே, தஞ்சாவூர் சென்று சிலைக்கு ஆர்டர் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சென்று சிலை வடிவம் பெற பாடுபட்டார்.

தளபதி அவர்களை அழைத்து வந்து சிலை திறப்பு விழா நடத்தினோம். தமிழகத்தில் இரண்டாவது கண்ணகி சிலையை வைத்த பெருமையை அவர் தான் எனக்குப் பெற்றுக் கொடுத்தார்.

அது மட்டுமல்ல, அமைச்சர்களை, அரசு அதிகாரிகளை அணுகி திட்டங்களை பெறுவதற்கு அவர் தான் எனக்குப் பயிற்றுனர்.

இதைத் தாண்டி, நான் 1999_ல் மாவட்ட செயலாளர் தேர்தலில் போட்டியிட மூலக் காரணமாக இருந்தவர்கள் இருவர். என் தந்தையாருக்கே அந்த எண்ணம் ஏற்ப்படக் காரணமானவர்கள் இருவர்.

ஒருவர் மறைந்த பெரியவர் அய்யா எஸ்.இராமசாமி. இன்னொருவர் அய்யா பொன்.பக்கிரி.

இன்று மறைந்து விட்டார்.

எனது அரசியல் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரது பங்கு இருக்கிறது. என் வாழ்நாளுக்கும் மறக்காது, மறக்க முடியாது.

# அய்யா பொன்.ப புகழும், நினைவும் என்றும் நிலைத்திருக்கும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக