பிரபலமான இடுகைகள்

வியாழன், 16 ஏப்ரல், 2015

துறுதுறுப்பான இளைஞர் மணி...

எந்தக் கூட்டமாக இருந்தாலும் பளிச் என்று தெரிவார் மணி. தெரிந்தவர்கள் என்றால் உடனே ஒரு சிரிப்பு, வணக்கம். துறுதுறுப்பான இளைஞர்.

   

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரின் நண்பர், அவரது நிழலாகவே இருப்பார். அவரது கண்களும், காதுகளுமாக செயல்படுவார்.

சகோதரர் செந்தில் அவசரத்தில் , வேலை நெருக்கடியில் யாரையாவது கவனிக்கத் தவறிவிட்டால், மணி குறிப்பால் உணர்த்துவார். செய்திகளை கொண்டு சேர்த்து விடுவார்.

சகோதரர் செந்தில் அவர்களோடு எப்போதும் ஒரு இளைஞர் பட்டாளம் இருக்கும். அதிலேயே இளையவராக மணி தான் இருப்பார் என நினைக்கிறேன்.

மணி கண்ணில் தட்டுப்பட்டால், சுற்று வட்டாரத்தில் ஐ.பி.எஸ் இருக்கிறார் என முடிவு செய்து கொள்ளலாம். இனி அப்படி கணக்கிட முடியாது. காரணம், மணி இருக்கமாட்டார்.

ஆமாம் மணி மறைந்து விட்டார். விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.

மணிகண்டன் , திண்டுக்கல் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர். மாவட்டம் முழுவதும் பிரபலம்.

சகோதரர் செந்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளராக தமிழகம் முழுதும் பயணித்தப் போது, உடன் பயணித்ததால், மாநிலம் தழுவிய தொடர்புகள்.

இணையத்தில் இயங்கியதால் , உலகம் முழுதும் பரவி இருக்கிற கழக உடன்பிறப்புகளோடு உறவு என சிறு வயதிலேயே எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்.

சகோதரர் செந்திலோடு மணியை முன்னரே பல முறை பார்த்திருந்தாலும், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் போது, நெருக்கமான பழக்கமானார்.

அதற்கு பிறகு எங்கு பார்த்தாலும் உடன் அருகே வந்து, "அண்ணா, நலமா?" என்று விசாரிக்காமல் நகர மாட்டார். இனி அந்த அன்போடு நலம் விசாரிக்க மணி இருக்கமாட்டார்.

இனி சகோதரர் செந்தில் வரும் போது கண்ணில் பட மாட்டார், தம்பி மணி.

# ஆனால் நெஞ்சை விட்டு அகல மாட்டார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக