பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

நாளை இது நமக்கும் நடக்கலாம்


அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மாத்திரம் கொந்தளிக்க வேண்டாம். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதற்காக, தங்களை மனிதர்கள் என நினைப்போர் அனைவரும் கொந்தளிக்க வேண்டிய நிகழ்வு.

       

ஆந்திராவின் திருப்பதியில் தமிழகக் கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட அதே நேரத்தில், தெலுங்கானாவிலும் என்கவுண்டர் கொலைகள்.

கொல்லப்படுகிறவர்களின் அடையாளம் தான் வெவ்வேறு. ஆனால் கொலை பாதகம் புரிவோரின் அடையாளம் ஒன்று தான்.

அது அரசதிகாரம். ஆளுவோரின் தோல்வியை மறைக்க, மக்களை மறக்கடிக்க கையாளுகிற யுக்தியில் முதன்மையானது இது.

செம்மரக் கடத்தலை தடுக்கக் கையாலாகாத சந்திரபாபு நாயுடு அரசு, மக்களை திசை திருப்ப மேற்கொண்ட நடவடிக்கை தான், 20 தமிழர்கள் கொலை.

செம்மரக் கடத்தலின் முக்கியப் புள்ளி, ஒரு ஆந்திர அரசியல்வாதி தான் என ஆந்திரப் பத்திரிகைகளே எழுதுகின்றன. பல ஆந்திர அரசியல்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஆனால் அவன் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற சந்திரபாபு நாயுடு அரசு, அப்பாவி தொழிலாளர்களை கொண்டுள்ளது.

இவர்கள் திருட சென்றது நியாயம் இல்லையே என்ற ஒரு குரலும் உள்ளது.

அப்படி வைத்துக் கொண்டாலும், உயிரை எடுக்க அதிகாரம் கொடுத்தது யார்? திருட்டைத் தடுக்கத் தான் அதிகாரம் கொடுத்திருக்கிறது சிறப்புச் சட்டம்.

பஸ்ஸில் சென்றவர்களை, இறக்கி சுட்டுக் கொலை செய்துள்ளது உறுதியாகி விட்டது. நக்கீரன் வார இதழ் கட்டுரை மிக முக்கியமான செய்திகளைக் கொடுக்கிறது.

       

இதில் கொடுமையானது ஆந்திர அரசுக்கு, தமிழக அரசு வழங்கியுள்ள ஒத்துழைப்பு.

இறந்து போனவர்கள் படத்தை எடுத்துக் கொண்டு, இறந்தவர்களின் ஊர்களுக்கு நேராக சென்றுள்ளது தமிழகக் காவல்துறை.

இறக்கும் முன் ஒவ்வொருவரும் தங்கள் ஊர் பெயரை சொல்லி விட்டா இறந்திருப்பார்கள் ?

அந்த விஷயத்தில் ஆந்திர அரசை, தமிழக அரசு கேள்வி கேட்டிருந்தாலே பல உண்மைகள் வெளி வந்திருக்கும்.

பிடித்து வைத்து, சித்ரவதை செய்து, சுட்டுக் கொன்றது வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.

வங்கி கொள்ளை வழக்கில் அப்பாவி பிஹாரிகளை, வேளச்சேரி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை, சன்னல் வழியாக சுட்டுக் கொன்று திசை திருப்பியவர்கள் தானே இவர்கள்.

ஆட்சி நடத்துபவர்கள் உறுதியானவர்கள், கடுமையானவர்கள் என்று சிலர் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். உறுதியானவர்கள், கொல்வார்கள் என்பதையும் உணர வேண்டும்.

அதிகாரத்தை தட்டிக் கேட்போர், அரசிற்கு எதிராகக் குரல் கொடுப்போர் மீதும் இந்த உறுதி காட்டப்படும்.

முதலில் வழக்கு பாயும், எதிர்க்காவிட்டால் கைது நடக்கும், அப்போதும் பணிந்து போனால், துப்பாக்கி பேசும்.

ஆட்சி நடத்துபவர்கள் "நிர்வாகிகளாக" இருப்பதை விட "மனிதர்களாக" இருக்க வேண்டும்.

தமிழர்கள் என்பதையும் தாண்டி, மனிதர்கள் என்பதற்காக, இந்த அநியாயக் கொலையை எதிர்க்க மனம் இல்லாதோருக்கு....

குறிப்பாக தமிழர் அல்லாதோருக்கு, மத்திய, மாநில ஆட்சியாளருக்கு...

ஒரே ஒரு செய்தி...

# நாளை இது நமக்கும் நடக்கலாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக