பிரபலமான இடுகைகள்

திங்கள், 15 ஜூன், 2015

நடராசர் கோவிலும் நாங்களும்

"சிவா, நீ வரமாட்ட. ரூம்லேயே இருக்கியா?",இது அண்ணன் ஶ்ரீதர்  "ஏன். நான் வரமாட்டேன்னு சொல்லலியே", நான். "அண்ணே, நாங்க கோயிலுக்கு போறோம்". "அதாண்ணே. நானும் கோயிலுக்கு தான் வர்ரேங்கிறேன்".

அது தில்லை நடராசர் கோவில். தில்லைன்னா சிதம்பரம் தான்.

ஆயிரம் இருந்தாலும் நாங்கள் இன்ச், இன்ச்சாக சுற்றிய கோவில் அல்லவா. வழக்கமாக கோவிலை சுற்றி இருக்கிற நான்கு ரத வீதிகளையும் சுற்றி வருகிறவர்கள் தான் எங்கள் கோஷ்டி.

அவ்வப்போது ரொம்ப போர் அடிக்கும்போது கோவிலுக்குள்ளும்  நுழைவோம். அப்போது தூண்களில் உள்ள சிற்பங்களை ரசிப்போம். உள் பிரகாரம் செல்வோம். திருநீறும் பூசுவோம், குங்குமமும் பூசுவோம், அனைத்தும் உண்டு.

கீழ வீதி வழியாக, கீழ கோபுரத்தை கடந்தோம். வினாயகர் வரவேற்றார். ஶ்ரீதர் தலைக்குமேல் கூப்பிய கரங்களோடு போய் நின்றார். ஆவிச்சியும், ஏசியும் தொடர்ந்தார்கள் . செல்லில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

வலதுப் பக்கம் இருந்த வெற்றிடத்தை காட்டிய ஆவிச்சி,"அது தான் இப்போ நாட்டியாஞ்சலி நடக்கும் இடம். படம் எடும்மா "என்றார். எடுத்தேன். ஆவிச்சி நாங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது விகடன் மாணவப் பத்திரிக்கையாளர். இன்னும் அந்த உணர்வு குறையவில்லை.

கோபுரம் வண்ணம் பூசப்பட்டு புத்தம் புதிதாய் காட்சியளித்தது. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த எபெக்ட். உள்புறம் சென்றோம். மேற்கில் இருந்து வீசிய சூரிய வெளிச்சத்தில் கோபுரம் தகதகத்தது.

கோபுர வாசலில் இருந்து உட்சுற்று கோபுர வாசல் வரை கருங்கற்கள் தரையாக பாவப்பட்டிருக்கும். வெயிலில் அனல் ஏறி இருந்தாலும், அதிலே அமர்ந்து  மாலை நேர காற்றை அங்கே அனுபவிப்பது ஒரு சுகம். கீழே சூடேறும், மேலே காற்று தவழும்.

அந்த உட்பிரகார வாசல் வரை,  நடைபாதைக்கு ஒரு மேற் கூறை.  மேற்கூறையின் உட்புறம் புதிதாக ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. அதை பலரும் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எடுத்தோம்.

உள்ளே நுழைந்தோம். படி இறங்கினோம். வழக்கம் போல் கீழே இருபுறமும் தீட்சிதர்கள் அமர்ந்திருந்தார். அங்கேயும் வழிபட்டு வந்தார்கள் நண்பர்கள். அங்கிருந்து கடந்து உட்பிரகாரம் சென்றோம்.

சோழன் வேய்ந்த பொற் கூரை மாலை நேர வெயிலில் மின்னியது. தன்னிச்சையாக அலைப்பேசியை எடுத்து புகைப்படம் எடுக்க துவங்கினேன். தடுத்தார் அண்ணன் சீதர், "செல் பயன்படுத்தக் கூடாது".

சந்நிதியில் ஏறும் படிக்கட்டில் அமர்ந்து ஒருவர் செல் பேசிக் கொண்டிருந்தார். அவர் கொண்டை போட்ட தீட்சிதர். நான் செல்லை பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டேன்.

(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக