பிரபலமான இடுகைகள்

திங்கள், 15 ஜூன், 2015

நடராசர் கோவிலும் நாங்களும் - 2

நடராசர் சன்னிதியின் முன்னால் சென்றோம். மேலே சென்று தரிசனம் பெற நண்பர்கள் விரும்பினர். அவர்கள் சென்று வர வாழ்த்தினேன். நூறு ரூபாய் கட்டணம், நாங்கள் படிக்கும் காலத்தில் இது கிடையாதாம்.

சட்டை, பனியனை கழட்டி விட்டு சன்னதி மேல் ஏறினார்கள். காத்திருந்தேன். திவ்ய தரிசனம் முடித்து வந்தனர். "சிறப்பான தரிசனம். வந்திருக்கலாம் சிவா". "நூறு ரூபாய் கொடுக்காம, சட்டைய கழட்டாம எங்களுக்கும் அருளனும். அப்ப தான் நடராசர்". ஆரம்பிச்சிட்டாண்டா அவர்கள் பார்வையில் தெரிந்தது.

உட்பிரகாரத்தை சுற்றினோம். சன்னிதியை சுற்றி புதிதாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தூண்கள் பாலிஷ் செய்யப் பட்டு வழுவழுவென்றிருந்தன. மாற்றம். அபிஷேக நீரிலிருந்து வரும் முடை நாற்றம் மாறவில்லை.

உட்பிரகாரத்தில் புதிதாக சில கடவுளர் உற்பத்தி ஆகியிருந்தனர். அவர்களையும் சில, பலர் வணங்கி சென்றனர். சுற்று முடிவில் தில்லை கோவிந்தராஜர் சன்னதி.  அருகே தேவியர் இருவரும் வீற்றிருக்க, கோவிந்தராஜர் சயனித்தவாறே அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.

கோவிந்தராஜர் சன்னதி முன் சரியான இடத்தில் நின்றால், ஒரே நேரத்தில் கோவிந்தராஜரையும், நடராஜரையும் தரிசிக்கலாம். பெரும் பகையாய் இருந்த சைவத்தையும், வைணவத்தையும் ஒருங்கிணைத்து அந்த புள்ளியில் நிறுத்தியவர் மிகப் பெரிய மகான் ஆகவும் இருக்கலாம், இரண்டு தனித்தனி கோவில்களுக்கு அலைய சோம்பேறித்தனம் பட்ட மன்னனாகவும் இருக்கலாம்.

கோவிந்தராஜரை நெருங்க கட்டணமும் இல்லை, சட்டையும் கழட்டத் தேவை இல்லை. கூடுதல் போனஸாக தலையில் ஜடாரி வைக்கப்படும், துளசி நீர் வழங்கப்படும். துளசி நீர் சளிக்கு நல்ல மருந்து.

அங்கிருந்து பக்க வாயில் வழியாக வெளியேறினால் கோவிலுக்கு உள்ளேயே இரண்டாம் சுற்று. அங்கு தான் அந்த பிரபல மேடை உள்ளது. ஆமாம் நடராஜர் தாண்டவம் ஆடிய மேடை. இங்கு தான் நடராஜருக்கும், காளிக்கும் நடனப் போட்டி. தங்கமகன் ரஜினி - பூர்ணிமா போட்டி இதோட உல்டா தான்.

போட்டி உச்சத்தை அடைந்தது. நடராஜரால் காளியை வெல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டது. எப்படியாவது வென்றாக வேண்டும், ஆண் கடவுள் அல்லவா. வலது காலை நேர் செங்குத்தாக மடக்கி தலையோடு ஒட்டி வைத்துக்கொண்டு இடது காலால் ஆடுகிறார்.

பெண் அது போல் மடக்கி ஆடினால், உடை விலகி ஆபாசம் ஆகி விடுமல்லவா. அதனால் காளி தோற்றுப் போகிறார். அதைப் பிடித்துக் கொண்டு, காளியை ஊருக்கு வெளியே அனுப்பி விடுகிறார்கள். அது தான் தில்லை காளி கோவில். ஆனால் இப்போது  சென்னையில் இருந்து வரும் போது சிதம்பரம் நகரின் ஆரம்பத்திலேயே  இருந்து காளி அருள் பாலிக்கிறார். டிசைன் அப்படி ஆயிடுச்சி.

காளி இங்கு உக்கிரமாக இருப்பார். ஆனால் பெண்கள் கூட்டம் இங்கு ஜாஸ்தி. "நடராஜரின் போங்கு ஆட்டம் அது" என்று கண்டிக்கிற பெண் விடுதலைக் குரலுக்கு, இந்தப் பெண்கள் கூட்டம் வலு சேர்ப்பது போல அமைகிறது.

சரி நாம விட்ட இடத்திலிருந்து நடப்போம். அந்த மண்டபத்தில் ஏறிப் பார்க்க வேண்டும். அந்தத் தூண்களில் நுட்பமான சிற்பங்கள். சிறு, சிறு கலை நயன் குறையாத சிலைகள். உள்ளே சன்னதியில் அந்த காலைத் தூக்கிய நாட்டியக் கோலத்தில் நடராஜர். இங்கு கூட்டம் குறைவு தான். ஆனால் பக்கத்திலுள்ள தாயார் சன்னதியில் கூட்டம் அள்ளுகிறது.

சிதம்பரம் கோவில் காஸ்மிக் பவரை விளக்கினார் ஆவிச்சி.

காஸ்மிக் பவர் செய்தி காதில் நுழையும் முன், மூக்கைத் துளைத்தது 25 ஆண்டுகளுக்கு முன் சுவாசித்த அதே  வவ்வால் மணம்...
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக