வாழ்த்துக்கள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு !
தொடர்ந்து முறியடிக்க முடியாத சாதனையாக செய்து வருகிறீர்கள். இன்று அதில் மேலும் ஒரு எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஆர்.கே நகரின் வெற்றி, சாதனை வெற்றி.
இனி வரும் காலங்களில் யார் தமிழகத்தின் முதல்வராக வந்தாலும், தங்கள் சாதனையை அவர்களால் சமன் செய்ய இயலாது. தமிழகம் என்ன இந்தியாவிலேயே எந்த முதல்வரும் உங்களோடு ஒப்பிடும் அளவிற்கு வர இயலாது.
இந்தியாவிலேயே எந்த முதல்வரும் இது வரை ஊழல் வழக்குகளில் சிக்கி, முதல்வராக இருக்கும் போதே தீர்ப்பு வழங்கப்பட்டு, பதவியை இழந்ததும் கிடையாது, தீர்ப்பு வழங்கப்பட்ட உடன் கைது செய்யப்பட்டு சிறை சென்றதும் கிடையாது.
இந்தியாவிலேயே சிறையில் இருந்த காலத்திலும் மக்கள் முதல்வராகப் பதவி வகித்து, சிறையில் இருந்தவாறே மாநில அரசை வழி நடத்தி, செயல்படுத்திய பணிகளை மக்கள் அனுபவிக்க தனது விடுதலைக்காக காத்திருக்க வைத்த சாதனையும் வேறு யாருக்கும் கிடையாது.
இந்தியாவில் எந்த முதல்வரும் அரசு சொத்தையே வாங்கியதும் கிடையாது, அதற்காக தண்டனையும் பெற்று, மேல்முறையீட்டில் அரசு சொத்தை திருப்பிக் கொடுத்து, மனசாட்சிப் படி மன்னிப்பு பெற்று தப்பித்ததும் கிடையாது.
இந்தியாவிலேயே முதல்வராக பதவியேற்று, ஊழல் வழக்குகளால் பதவி இழந்து, அதுவும் இரண்டு முறை, மீண்டும் பதவிக்கு வருவதற்காக இடைத்தேர்தல்கள் ஏற்படுத்தி, அதில் வெற்றி பெற்ற வரலாறு யாருக்கும் கிடையாது.
இந்தியாவிலேயே முதல்வராக பணியாற்றி, அரசு விதி முறைகளை அறிந்தும், அதற்கு மாறாக நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து, சட்டப்படி தள்ளுபடி செய்யப்பட்டு, தேர்தல் களத்தை காமெடியாக்கிய சாதனை யாருக்கும் கிடையாது.
அதில் அடுத்தக் கட்டம் தான் இந்த ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி. தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுகிற தொகுதியில், முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டு போட்டியிட்டு, வெற்றி பெற்று சாதனை.
அதிலும் தேர்தல் முறையாக நடக்காது என, பிரதான எதிர்கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்த நிலையிலும், மொத்த மந்திரிகளையும், கட்சி நிர்வாகிகளையும் களம் இறக்கி, அரசு நிர்வாகத்தின் மூலம் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மாபெரும் வெற்றி.
அதிலும் ஒரு வாக்குச்சாவடியில், வாக்காளர் பட்டியலில் இருந்ததை விட கூடுதல் வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டு, மறு வாக்குப் பதிவு நடத்தி பெற்றிருக்கின்ற வெற்றி. இது சாதனை வெற்றி.
இது என்ன, இன்னும் பல சாதனைகள் படைப்பீர்கள்.
முதல்வராக கர்நாடக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொண்டது போல், மீண்டும் முதல்வராக இருந்து கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் எதிர் கொள்வீர்கள். சாதனை புரிவீர்கள்.
தற்போது ஆர்.கே.நகரில் பெற்ற 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தை, அடுத்த மாதம் இடைத்தேர்தல் வரவழைத்து, இன்னொருவரை நிறுத்தி, இன்னும் கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து சாதனை படைப்பீர்கள்.
தமிழகத்தை சோதனைக் களமாக்கி சாதனைகள் பல படைக்க வாழ்த்துக்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக