அடுத்து பேசியவர், எழுத்தாளர் சு.வெங்கடேசன். இவரது "காவல் கோட்டம்" நாவல் சாகித்ய அகாதமியின் சிறந்த புதினமாக 2011 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. மதுரையை களமாகக் கொண்டு, நாயக்கர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்.
இந்த வரலாற்று புதினத்தை எழுத அவருக்கு பத்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அந்த அளவிற்கு ஆய்வு மேற்கொண்டு வரலாற்று தரவுகளோடு எழுதியிருக்கிறார். அவர் பேச வந்தார்.
"மருத்துவர் சிவராமன் விட்ட இடத்திலிருந்து துவங்க விரும்புகிறேன். மதுவிலிருந்து துவங்குகிறேன். சங்க காலத்தில் தமிழகத்தில் 60 மது வகைகளை குடித்தனர் . அந்த குடியை ஒட்டி தான் மக்களும் இருந்தனர்.
குடியில் இருந்து தான் குடிமகன் என்ற வார்த்தை பிறந்தது. அப்படி தான் குடிகளும். 60 குடிகள் (கூட்டம்) இருந்தனர். ஒவ்வொரு குடிக்கும் தனித்தனி கொடி, ஆயுதம், மது வகைகள் இருந்திருக்கின்றன. ஆனால் அப்போது இருந்த மது அல்ல, இப்போது இருப்பது.
இப்போது இருப்பது வெளி நாட்டு மது. இதிலும் அரசியல் இருக்கிறது. நம் மீது திணிக்கப்படுகிற. உணவிலும் அரசியல் இருக்கிறது. அதை நாம் உணர வேண்டும். நம்முடைய தமிழ் பாரம்பரியம் எல்லோருக்கும் முந்தையது. அதை காக்க வேண்டும்"
இப்படி தமிழ் பாரம்பரிய பெருமையை மிக அழகாக, சுருக்கமாக எடுத்துரைத்தார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். வந்திருந்தவர்கள் பொறியியல் கல்வி படித்தவர்கள் என்பதால், பெரும்பாலானோருக்கு இது புதிய செய்தி.
இரண்டு அருமையான உரைகளுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள். அதற்கு இடையில் ஒரு சிறு புத்தகம் வெளியிடப்பட்டது. மருத்துவர் சிவராமன் வெளியிட, எழுத்தாளர் வெங்கடேசன் பெற்றுக் கொண்டார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக, பொறியியல் புலத்தின் புகைப்படத்தைத் தாங்கிய அட்டைப்படம். பழைய கல்லூரி கையேட்டை நினைவுப்படுத்தி பயமுறுத்தியது. ஆமாம், தேர்வுக்கான சிலபஸ் புத்தகத்தை பார்த்தால் பயம் வராதா?
"நினைவலைகள்" என்றத் தலைப்பில் புத்தகம். 10 பேர் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட கட்டுரைகள் இடம் பெற்றிருந்தது. எங்கள் கல்லூரி காலத்தில் "ஆவிச்சி" விகடன் மாணவப் பத்திரிக்கையாளர். அந்த கைவண்ணம் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டது.
அட்டை இல்லாமல் 60 பக்கங்கள். கலந்து கொண்டவர்களின் முகவரித் தொகுப்பு 6 பக்கங்கள். பல்கலைக்கழகத்தை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் 8 பக்கங்கள். 37 பக்கங்கள் நினைவலை கட்டுரைகள்.
இதில் சிவக்குமார், அப்ஜகன்யா, மீனாட்சிசுந்தரம், ஶ்ரீவித்யா, டில்லிபாபு ஆகியோர் தலா ஒரு பக்கத்தில் முடித்துக் கொண்டனர். மெய்யப்பன் 2 பக்கம், கவிஞர் சிங்கை மூர்த்தி, அசோக்குமார் தலா மூன்று பக்கங்கள்.
புத்தக வெளியீட்டாளர் ஆவிச்சியே அடக்கமாக 8 பக்கங்கள் தான். ஆனால் 18 பக்கங்களுக்கு நீட்டி, நீட்டி முழக்கி புத்தகத்தை ஆக்கிரமித்தவர் உங்கள் அன்பு நண்பர் சிவசங்கர் தான்.
(எல்லாம் இங்க முகநூலில் வெளியான ஸ்டேடஸ்கள் தான்)
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக