பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 16 ஜூன், 2015

நடராஜர் கோவிலும் நாங்களும் - 3

"சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருக்கிறது. கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி.
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் தான் "cosmic dance" . அதனால் இங்கு ஒரு காஸ்மிக் எனர்ஜி கிடைக்கிறது"

இது ஆவிச்சியின் விளக்கம். அதை தாண்டிய எனர்ஜியை அந்த காலத்தில் எங்களுக்கு கொடுத்த மையம், நாங்கள் நின்ற இனத்தின்  அருகே இருந்தது. அது தான் மடப்பள்ளி. நமது முன்னோர் அண்ணன் கோமகன் குறிப்பிட்டது போல், மடப்பள்ளி பற்றி சொல்லா விட்டால் வரலாற்று குற்றமாகி விடும்.

அந்த சக்கரைப் பொங்கலும் புளியோதரையும் இன்றும் நினைவில் இருக்கிறது. வாங்கிக் கொண்டு போய் வெளி சுற்றில் கூட்டமாக அமர்ந்துக் கொண்டு போவோர், வருவோரை கேலி செய்துக் கொண்டு சாப்பிடுவது ரெகுலர் டியூட்டி. அங்கே அக்ரி, ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஜமாவும் சேரும்.

இப்போது நிற்கிற இரண்டாம் சுற்றில் அப்படியே நடந்தால் வழியில் சில சன்னதிகள். அங்கே மேற்கு கோபுர வாசலில் இருந்து வந்து நுழைய ஒரு வாயில் உண்டு. பாதி நாட்கள் அப்படியே வெளியேறி  சென்று குளக்கரையில் காற்று வாங்கியது உண்டு.

சில சமயங்களில் மேற்கு கோபுர வாசல் அருகே அல்வா வாங்கி சாப்பிட்டு விட்டு அப்படியே எண்டர் ஆவதும் உண்டு. மேற்கு கோபுர வாசலுக்கு ஒரு சிறப்பு உண்டு. கோடைக்காலத்தில் மதியம் 12 மணிக்கு உச்சி வெயிலில் கோபுர வாசலுக்கு கீழே நிற்க வேண்டும்.

நல்ல வேகத்தில் குளிர்ந்த காற்றாக வீசும். சுற்றி வெய்யில் தாக்க, அந்த இடத்தில் மட்டும் குளிர்ந்த காற்று வீசுவது ஒரு வித்தியாச அனுபவம். அவ்வளவு சரியான கோணத்தில் கோபுர வாசல் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படியாக ஒவ்வொரு பகுதியாக நடக்க, நடக்க பழைய நினைவுகள் கூடவே வந்தன. எந்த ஒரு பகுதியும் கால் படாத பகுதி கிடையாது. அதே போல ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு திருவிழா அல்லது ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. முத்துஎழிலனுக்கு கொஞ்சம் ஸ்பெஷல்.

வெளிச் சுற்றில் இரண்டு சுற்று நடந்தால் மிகப் பெரிய நடைப் பயிற்சி ஆகும். இந்தச் சுற்றில் தான் "நந்தன்" நிகழ்வு. நடராஜரை காண வந்த நந்தனாருக்கு தேர்வு வைக்கப்பட்டது. அக்னிகுண்டத்தில் இறங்கி வந்து தரிசனம் பெறப் பணிக்கப்பட்டார். அவரும் அப்படியே வந்தார். தாழ்த்தப்பட்டவர் என்பதால் இப்படி நிர்பந்திக்கப்பட்டார் என்பது செய்தி. இதுவும் ஒரு கரும்புள்ளி.

நாட்டியாஞ்சலி மற்றும் தேர் காலங்களில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தில் இங்கு பணியாற்றியதும் மறக்க முடியாத நினைவுகள். உதவி மையம், தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்கள் பணியும்.

இப்படியான நினைவுகளுடன் சுற்றி முடித்து கோவிலுக்கு வெளியே வந்தோம். நடந்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் உற்றுப் பார்ப்பது போல் தோன்றியது. திரும்பினால், "அண்ணா" என்று குரல்.

அது கீழ வாசல் பஜ்ஜிக் கடை. அழைத்தவர் சாமிநாதன். பல்கலைக்கழக தமிழியல் துறை தொழில் நுட்ப உதவியாளர். "இவ்வளவு தூரம் வந்துட்டு எப்புடி பஜ்ஜி சாப்பிடாம போறது?" என உபசரித்தார். சாப்பிட்டு விடை பெற்றோம். கொண்டை இல்லா தீட்சித நண்பர்.

# தில்லை அம்பல நடராஜா, நந்தனை அணைத்து, காளியை மதித்து, பிறகு அருளும் பொழிவாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக