பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 19 ஜூன், 2015

தினம் தினம் வாழையிலையில் சாப்பாடு

."ஏம்பா, அவன் வடக்குப்பட்டி ராமசாமி பேரன் தான? சேம்பரத்துல படிக்கிறானா? இப்புடி உப்பி இருக்கானே. அப்புடி தான் இருக்கனும்". எங்கள் உடையார்பாளையம் தாலுக்காவில் அப்போதெல்லாம் அப்படி தான்.

வீட்டில் சாப்பிடும் உணவை விட, அந்த உணவு தான் உடலுக்கு ஊட்டமளித்து குண்டாக்கும் என்பது பொது புத்தியாகிப் போனது. அப்படிப் பெருமைப் பெற்ற உணவு அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் விடுதி உணவு. தினம் ஒரு வகை உணவு கிடைக்கும், என்ற செய்தி உலகப் பிரசித்தம்.

சைவம், அசைவம் என உணவருந்தும் இடம் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருக்கும். விசாலமான ஹாலில் உணவருந்த சிமெண்ட்  மேசை, உட்கார சிமெண்ட் பென்ச் எனப் போடப்பட்டிருக்கும்.

தினமும் காலை 7.00 மணிக்கு உணவு பரிமாற ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிப்பது இரவு 9.30 மணி வரைப் போகும். காலை, மாலை இரு வேளை காஃபி கிடைக்கும். மாலை வேளைகளில் ஏதாவது நொறுக்கு கிடைக்கும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அழிக்க முடியாதப் பெருமை ஒன்று உண்டு. மாணவர் விடுதியில் அனைவருக்கும் வாழை இலையில் தான் உணவுப் பரிமாறப்படும். திருமண வீடு போல எல்லா வேளையும் அப்படி தான்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரட், ஆம்லட்டில் துவங்கி இட்லி, தோசை, பூரி, கிச்சடி என ஒரு சுற்று வரும். பிரட்'டிற்கு கொடுக்கும் சாஸ் சொந்தத் தயாரிப்பு. பெரியப் பாத்திரத்தில் எடுத்து வந்து சாஸை, கரண்டியால் ஊற்றுவது வித்தியாசமாக இருக்கும்.

அசைவ மெஸ்ஸில் ஞாயிற்றுக் கிழமையும், வியாழக் கிழமையும் சற பரபரப்பாகத் தான் இருக்கும். ஞாயிற்றுக் கிழமை மதியம் மட்டன் புலவ்வும், வியாழக் கிழமை இரவு பூரி - மட்டன் விண்டலும் டாப் ஹிட் மாணவர்களிடம்.

சில நாட்கள் தோசை - சிக்கன், முட்டை என கிடைக்கிற நாட்களில் எக்ஸ்ட்ரா நிறைய போகும். சில நாட்கள் டின்னில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பைனாப்பிள் சிலைஸ் கிடைக்கும், அவ்வளவு சுவையாக இருக்கும். இன்றும் சிலாகிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாள் இரவும் தயிர்சாதம் அவசியம் உண்டு. தோசை, இட்லி, பூரி என எந்த உணவு இருந்தாலும் தயிர்சாதமும் கட்டாயம் இருக்கும். தயிர்சாதத்தை கடைசியாக சாப்பிட்டால் தான் ஒரு நிறைவு இருக்கும். அந்தப் பழக்கம் இந்த சந்திப்பு வரைத் தொடர்கிறது.

மெஸ்ஸை நிர்வகிக்க மாணவர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். அந்தக் கமிட்டியும், அதன் தலைவரும் பிரசித்தி பெறுவார்கள். ஹாஸ்டல் டே அன்று வழங்கப்படும் விருந்தான feast மிகப் பிரபலம்.

அது அந்தக் காலம். பல்கலைக்கழகமே மெஸ்ஸை நடத்தியது. பிறகு மெஸ் கான்ட்ராக்ட் விடப்பட்டதில் பழைய சுவை, உபசரிப்பு காணாமல் போனது.

# அண்ணாமலை மெஸ் சமையல், அயிட்டங்களும் பிரம்மாதம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக