பிரபலமான இடுகைகள்

புதன், 17 ஜூன், 2015

மீண்டும் ஓர் கல்லூரி காலம்

"ஏய் மாப்பிள்ள, மீனாட்சி பேசறேன்". "லோக்கல் நம்பர் வருது. எப்போ வந்தே?". "நேத்து வந்துட்டேன். மதுரை வந்திருக்கிறேன். சென்னை வந்துடறேன். வேல நடக்குதா. யார் யார் எப்போ வர்றாங்க?" பேசும் போதே ரீயூனியன் ஃபீவர் அனலடித்தது.

சிங்கப்பூரில் உட்கார்ந்து கொண்டே வாட்ஸ் அப்பில் எல்லோரையும் விரட்டி வேலை வாங்கியவர் இவர் தான். அதே வேலையை இங்கு வந்தும் தொடர்ந்து  நடத்திக் கொண்டிருக்கிறார்.

"ராம்கி, எப்ப வந்தம்மா?"சத்யா கேட்க, "நேத்து வந்தேன்". "ரிட்டர்ன் எப்போ?" "ரியூனியன் புரோக்ராம் முடிந்த அன்னைக்கே" இது ராமகிருஷ்ணன். சந்திப்புக்காக மட்டுமே  யு.எஸ்.ஏ விலிருந்து வந்திருக்கிறார். "எல்லோரையும் பார்த்து 25 வருஷம் ஆயிடுச்சிப்பா"

ராம்கியை லீலா பேலஸில் சந்தித்தேன். சந்திப்பின் போது நடத்தப்பட உள்ள நிகழ்ச்சிகளையும், உணவு வகைகளையும்  இறுதி செய்வதற்காக கூடி இருந்தோம். இரண்டு நாட்கள் மூன்று அமர்வுகள்.
மருத்துவர் கு.சிவராமன் உணவுகள் குறித்து உரையாற்றுகிறார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

இதற்கான ஹால்  வசதி, இருக்கை ஏற்பாடு, ஒலி அமைப்பு ஆகியன குறித்து ஹோட்டல் நிர்வகத்தினருடன் பேசி இறுதி செய்யப்பட்டது. வருபவர்களை எந்த இடத்திலிருந்து வரவேற்று விபரங்களை தெரிவிப்பது என்பது வரை முடிவு செய்யப்பட்டது.

நான் சாம்சங்கை வைத்துக்கொண்டு வழக்கம் போல் ஸ்டேடஸ் அடித்துக் கொண்டிருந்தேன். ஏ.வி.சுந்தர்ராஜனும் மாணிக்கவேலும் கத்தையாக காகிதங்களோடு போராடிக் கொண்டிருந்தனர். எட்டிப் பார்த்தேன்.

ஹோட்டல் அறைகள் ஒதுக்கும் வேலைகள். கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட்களை வைத்துக் கொண்டு, இவங்களுக்கு அங்க போட்டுடடலாம், அவங்களுக்கு இங்கப் போட்டுடலாம் என சரி செய்ய அல்லாடிக் கொண்டிருந்தனர். பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரூம் ஏற்பாடு செய்வது போல அவ்வளவு சின்சியர்.

மாணிக்கவேலும் ஏவிஎஸ்ஸும் ஒரு வாரமாக இரவு பகலாக இதேப் பணி. வருவோருக்கு "குக்கீஸ்" வழங்க பேசப்பட்டது. அந்த நிறுவன முதலாளி தனது உறவினர் எனத் தெரிவித்த சத்யா உடனே அவரைத் தொடர்பு கொண்டு டிஸ்கவுண்ட் பெற்றுக் கொடுத்தார்.

லேப்டாப் பையை பிரித்த ஆவிச்சி அதிலிருந்து காசோலை புத்தகத்தை எடுத்து உடனடியாக அதற்கான தொகைக்கு காசோலை வழங்கினார். ஆவிச்சி இந்த நிகழ்வின் காசாளார், தோளில்  மொபைல் ஆபிஸாக லேப்டாப் பை.

அடுத்து உணவு செக்‌ஷன். ஹோட்டல் சார்பாக ஒரு ஒருங்கிணைப்பாளர். அவரோடு அமர்ந்து மதிய உணவு வகைகளை சுவை பார்த்து முடிவு செய்தோம். பலர் சைவம், அமாவாசை என்பதால். நானும் ஏவிஎஸ்ஸும் அசைவத்தை முடிவு செய்தோம். வாண்டஸ் செந்தில் ஐஸ் கிரீம் வகைகளை வரிசையாக வைத்து சுவை பார்த்து தேர்ந்தெடுத்தார்.

எங்கள் எல்லோரையும் ஒருங்கிணைந்த பணி சீதர் உடையது . ஒவ்வொருவருக்கும் அலைபேசி ஒரே நேரத்தில் வரவழைத்து அமுக்கி, வேலை வாங்கும் லாகவம். இது எல்லாம் நேற்று. இன்று ஒருங்கிணைக்கும் பணிகள் குறித்த கூட்டங்கள். கல்யாண வீடு போல இருக்கிறது.

இதற்கிடையில் சிங்கப்பூர் டான்கள் இருவர் வந்து இறங்கி விட்டார்கள். முகில் மற்றும் கலை. இனி "களை" கட்டும். அடுத்து சிங்கப்பூரிலிருந்து வரும் ஒவ்வொரு விமானத்திலும் ஒரு அண்ணாமலை மாணவர் இந்த நிகழ்விற்கு வருவதாக தகவல். இன்னும் பல நாடுகளில் இருந்தும் ..

# நிகழ்ச்சி வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக