"25 வருஷம் கழிச்சி கல்லூரி நண்பர்கள சந்திக்க இவ்வளவு பரபரப்பா இருக்கீங்களே, 50 வருஷம் கழிச்சு பாக்கப் போற பள்ளி நண்பர்கள் எப்படி இருப்பாங்க, அதுவும் அவங்க படிச்ச பள்ளிக் கூடத்துலயேன்னா ?" என்றார் துணைவியார்.
"தங்கர்பச்சானோட "பள்ளிக்கூடம்" படத்தை விட டாப்பா இருக்கும். எங்கே சந்திக்கிறாங்க?" என்றேன். "பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி" என்றார். சொந்த ஊர் பாசம் இருக்கத் தானே செய்யும்.
1965 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்தவர்கள். அப்போது படித்து வேலைக்கு போனவர்கள் பணி ஓய்வு பெற்று பழைய நண்பர்களை தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போது தான் இந்த சிந்தனை வந்திருக்கிறது.
தேடிப் பார்த்ததில் 50 நண்பர்கள் ஒருங்கிணைந்திருக்கின்றனர்.நாளை 13.06.2015 மாலை 3.30 க்கு சந்திக்கின்றனர், பெரும்பாலோர் குடும்பத்தோடு. இதற்காக 15 பேர் கொண்ட குழு முழு வீச்சில் பணியாற்றுகின்றனர்.
வெறுமனே சந்திப்பாக இல்லாமல் பள்ளிக்கு ஏதாவது நினைவாக செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர். டாக்டர் நூர்ஜஹான் சில தளவாடப் பொருட்களை வழங்கியிருக்கிறார். வி.எஸ்.செல்வராஜன் மின்னணு பெயர் பலகை அளித்திருக்கிறார்.
இன்னும் சில பணிகளுக்காக குழுவினர் ரூபாய் 20,000 முதல் கட்டமாக அளித்திருக்கிறார்கள். நாளை இன்னும் சில உதவிகளை வழங்க இருக்கிறார்கள்.
தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் நூர்ஜஹான், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி கணிதத் துறை தலைவராக பணியாற்றிய வி.எஸ்.செல்வராஜன், கல்பாக்கம் அணுசக்தி துறையில் இயக்குனராக பணியாற்றிய சுவாமிநாதன், கடலூர் ஆடிட்டர் ராமச்சந்திரன், திருச்சி BHEL-ல் பணியாற்றிய மகாலிங்கம், நல்லாசிரியர் கலைச்செல்வன், இந்தியன் வங்கியில் பணி புரிந்த பாலசுப்பிரமணியம் என பல துறையில் பணியாற்றி, பல ஊரில் இருப்பவர்கள் 50 வருடம் கழித்து சந்திக்கின்றனர்.
இதில் பேராசிரியர் வி.எஸ்.செல்வராஜன் அவர்கள் எனது துணைவியாரின் தந்தை என்பதால் தான், இந்த செய்தி அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
பள்ளிக்கு உழைக்கும் ஒருவரை அழைத்து பாராட்ட உள்ளனர். இவர்கள் படிக்கும் காலத்தில் பேரூராட்சி கவுன்சிலராக இருந்து, இன்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை வழி நடத்தும் "தி.மா.நாகராஜன்" தான் அவர்.
தங்கள் ஆசிரியர்களை கௌரவிக்க முடிவெடுத்த போது தான் நெகிழ வைக்கும் செய்தி. அப்போது பணியாற்றியவர்களில் இருவர் தான் உயிரோடு இருப்பதாக தெரிந்திருக்கிறது. நிகழ்ச்சிக்கு அழைக்க தேடியுள்ளனர். அம்மாப்பேட்டையை சேர்ந்த ஆசிரியர் ரகுநாதன் கடந்த ஆண்டு மறைந்து விட்டதாக செய்தி.
இன்னொருவரான அப்போதைய ஆய்வக உதவியாளர் ஆத்மநாதனை இன்னும் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை. முயற்சி தொடர்கிறது.
# விழா சிறக்கட்டும், நினைவுகள் இனிக்கட்டும், நட்பு தொடரட்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக