(தொடர்ச்சி)
அவரை சந்திப்பது தான் முக்கிய நிகழ்ச்சி. அதற்காக புறப்பட்டோம். ஏற்கனவே திட்டமிட்டப் பணிகளில் கொஞ்சம், கொஞ்சமாக நேரம் கூடுதலாகி இக்பாலை சந்திக்க போன போது 3 மணி நேரம் தாமதம். இரவு 10.00 ஐ கடந்து விட்டது.
அது லேபர் கேம்ப். பல்வேறு வகையானத் தொழிலாளர்கள் தங்க நிறுவனங்கள் ஏற்படுத்தி இருக்கும் குடியிருப்புப் பகுதி. நகரத்தின் ஒட்டில், தொழிற்சாலைப் பகுதியில் அமைந்திருந்தது.
மாலை 05.00க்கு பணி முடித்து வரும் தொழிலாளர்கள் பணிகளை முடித்து, இரவு உணவு அருந்தி விரைவில் படுத்து விடுவார்கள். காரணம் அதிகாலை 02.00 மணிக்கு எழுந்து, குளித்து, உணவு தயாரித்து, பயணித்து, காலை 05.00 மணிக்கு பணியை துவங்க வேண்டும்.
அதனால் விரைவில் படுத்துத் தூங்கி விடுவார்கள். அதனால் நாங்கள் செல்லும் போது வளாகம் இருளில் மூழ்கியிருந்தது. இக்பால் எங்களுக்காக தூங்காமல் காத்திருந்தார். அவரோடு கடலூரைச் சேர்ந்த அவரது அறை நண்பரும்.
கேம்பின் செக்யூரிட்டி எங்களை அனுமதிக்க சற்று தயங்கினார். காரணம், நாங்கள் நம்மூர் போல மூன்று காரில் சென்றிருந்தோம். இக்பால் விளக்கி, எங்களை உள்ளே அழைத்து சென்றார்.
தொழிற்சாலை கூரை அமைக்கும் கால்வனைட் ஷீட்டில் கூரை. பகலில் வெப்பம் உள்ளே அப்படியே இறங்கும். ஆனால் அறைகளில் ஏ.சி பொருத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையிலும் இரண்டடுக்கு கட்டில்கள் மூன்று. அறைக்கு ஆறு பேர்.
அறையில் அமர்ந்து சிறிது நேரம் அவர்களது அலுவல் மற்றும் வாழ்க்கை முறைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தோம். விளக்கு வெளிச்சம் மற்றும் உரையாடும் ஓசைத் தாண்டி மற்ற அறைவாசிகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு வேலை அசதி.
ஒரு இளைஞர் மட்டும் தூக்கம் கலைந்து எழுந்தார். "இவர் பிரேம். உங்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள காத்திருந்தார். நேரமானதால் தூங்கி விட்டார்",என்று அறிமுகப் படுத்தினார் இக்பால்.
புகைப்படம் எடுத்துக் கொண்டோம். "பிரேம் என்ன ஊர்?" என்று கேட்டேன். "கண்டி". "என்ன?". "இலங்கை, கண்டி". தமிழ்பாசம். தமிழ்நாட்டிற்கு அழைத்தோம். அவசியம் வருகிறேன் என்றார்.
மற்ற அறைவாசிகளும் வெளி நாட்டினர். தூக்கத்தை கலைக்க வேண்டாம் என விடைபெற்றோம். ஒரு நிமிடம் என்று சொன்ன இக்பால் இரண்டு மூட்டைகளை எடுத்துப் பிரித்தார். ரொட்டிப் பாக்கெட்டுகள், சிப்ஸ் பாக்கெட்டுகள், பெப்சி, கோக், குடிநீர் போத்தல்கள்.
இந்த நேரத்தில் வேண்டாமே என்று மறுத்தோம். இக்பால் முகம் வாடிப் போனது. உடன் கத்தார் தோழர்களையும் உள்ளே அழைத்து ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். இக்பால் முகத்தில் இப்போது தான் மகிழ்ச்சி. வறுமையிலும் செம்மை.
தங்கை திருமணத்திற்காக அரியலூர் பூர்வீக வீட்டை விற்று விட்டு, குடும்பத்தோடு திருப்பூரில் சிறு கடை நடத்தி பிழைத்திருக்கிறார். அதில் நஷ்டம் ஏற்பட, கத்தார் பயணம். தினக் கூலி. குடும்பம் இப்போது தான் லேசாக நிமிர ஆரம்பித்திருக்கிறது.
மனம் இல்லாமல் விடை பெற்றோம். அவருக்கும் மனமில்லை. இந்த நெருக்கடியான வாழ்க்கையிலும் நேரம் செலவிட்டு, நெட் கார்டிற்கு காசு செலவிட்டு இணையத்தில் கழகப் புகழ் பாடும் அவர் பணி குறித்து பேசிக் கொண்டே பயணம் தொடர்ந்தோம்.
இன்று அலைபேசினார். "ஓரே ஸ்டேடசில், ஓவர் நைட்டில் ஒபாமா ஆக்கிட்டிங்க", என்றார்.
# ஒபாமாவை விட உயர்ந்தவர் நீங்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக