கத்தார். அன்று தான் பயணத்தின் கடைசி நாள். மறுநாள் காலை துபாய் விமானம். அதனால், அதற்குள் பல நிகழ்ச்சிகளை முடிக்க வேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தாமதமாக சென்று கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட தொகுதி சுற்றுப்பயணம் போல.
அப்போது அப்துல் ரஷீத் சொன்னார்,"அண்ணா, லேபர் கேம்ப் போகனும். அவங்க காலையில 02.30 மணிக்கு எழுந்திருக்கனும். சாயந்தரம் 05.00 மணியிலருந்து காத்திருக்காங்க".
அப்போது ஒரு நண்பர் கேட்டார்,"லேபர் கேம்பா, அங்க எதுக்கு?". "நேத்து வந்தார்ல, அவர சந்திக்க போறோம்",என்றேன். அவ்வளவு தான், எல்லோரும் தயார். காரணம் இருக்கு.
முதல்நாள் நாங்கள் கத்தார் மியூசியத்தில் இருந்தோம். அப்போது அப்துல்ரஷீத் வந்தார். உடன் ஒருவர். தொழிலாளிகள் உபயோகப்படுத்தும் உடை. தலையில் தொப்பி, அதன் மேல் ஒரு கூலிங்கிளாஸ். அவர் தான் அப்துல் ரஷீத் முகம்மது இப்ராகிம்.
அப்போது தான் முதல்முறையாக பார்க்கிறேன். ஆனாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டேன். முகநூலில் தான் பழக்கம். தீவிர கழக வெறியர். யார் திமுக குறித்து உயர்வாக ஸ்டேடஸ் போட்டாலும், உடனே ஷேர் செய்து விடுவார்.
போட்டோவில் செய்திகளை ஏற்றி அதை பதிவிடுவார். அவரது கழக பற்று அவரை நோக்கி என்னை இழுத்தது. தனிசெய்தியில் பேசி, அவரது சொந்த ஊர் அரியலூர் என்று அறிந்தேன். தொழிலாளி, ஆனாலும் காலத்திற்காக தீவிர இணையப் பணி. அப்போது முதல் நட்பு வலுப்பட்டது.
அவரை தான் கண்டேன். புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். அவரோடு புகைப்படம் எடுப்பதே என் பாக்கியம். நெருங்கி நின்றேன், அவர் ஒதுங்கினார். காரணம், அவரது வியர்வை. ஆனால் அது மணந்தது. உழைப்பாளியின் வியர்வை.
அருங்காட்சியகத்தில் இருந்து கீழே வந்தோம். வழியில் ஒரு குடும்பம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். கணவன், மனைவி, குழந்தை, கணவனது அம்மா எனக் குடும்பம். அவர்கள் தமிழ் குரல் கேட்டு மகிழ்ச்சியாக பார்த்தனர். ரஷீத் உடனே அவர்களிடம் பேச்சை ஆரம்பித்தார்.
என்னை காட்டி,"அண்ணன் எம்.எல்.ஏ" என்றார். பேண்ட், டீ ஷர்ட்டில் எம்.எல்.ஏவை எதிர்பார்க்காத அவர்கள் தடுமாறினார்கள். அறிமுகப் படுத்திக் கொண்டோம். அவர்களுக்கு மகிழ்ச்சி, எனக்கும். புகைப்படமும் எடுத்துக் கொண்டோம்.
முடித்து, நாங்கள் காருக்கு வந்துவிட்டோம். இப்ராகிம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். "என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க அண்ணே",என்று கேட்டோம். அவர், அந்தக் குடும்பத்திடம் "வரும் தேர்தலில் திமுகவிற்கு ஓட்டளிக்க வேண்டும்" எனக் கேட்டிருக்கிறார். உத்தரவாதமும் வாங்கி விட்டார். அவ்வளவு கழக வெறி.
என்னை வழியனுப்புவது போல கும்பிட்டார். "அடுத்த கார்ல ஏறுங்க",என்றேன். முன்பே அண்ணன் சதக் இடம் "அவர சாப்பிட கூப்பிடனும்" என்று அனுமதி கேட்டேன். "அது நமக்கு பெருமை" என்றார் சதக்.
அண்ணன் சதக் இல்லம் சென்றோம். ஏகப்பட்ட வகையான உணவுகள். இப்ராகிம் அவர்களை சாப்பிடக் கூப்பிட்டோம். தயங்கினார் அந்த சூழல் பார்த்து, காரணம் அவரது வாழ்க்கை நிலை. வற்புறுத்தி சாப்பிட வைத்தோம். அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி. அவரை சந்திப்பது தான் முக்கிய நிகழ்ச்சி.
(தொடரும்....)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக