கார் போய் நின்றது. கைலி, டீ-ஷர்டில் ஒரு உருவம் வந்து நின்றது. முகத்தை பார்த்தால், எங்கோ பார்த்த நினைவு. பளிச்'சென்று ஏற்கனவே பார்த்த முகம். மெல்ல நினைவு வந்தது.
ஆனால் அவர் வெகுநாட்கள் உடன் இருந்த உணர்வோடு எங்களை வரவேற்றார்,"வாங்க அண்ணே". அட, நம்ம அப்துல் ரஷீத். ஆமாம் முகநூலில் ஏற்பட்ட உறவு. அடிக்கடி தனிச் செய்தியில் பேசுவோம்.
சந்தித்த இடம் அண்ணன் பெரியண்ணன்.அரசு அவர்கள் இல்லம் முன்பு. நிகழ்வு, அரசு அண்ணன் தாயார் மறைந்த போது. அண்ணனது சொந்த கிராமம். அப்துல்ரஷீத்தோடு முதல் சந்திப்பு அது தான்.
"அண்ணா, எப்ப கத்தார் வரப் போறீங்க?. ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்கோம். மாவட்டமும் இப்படி தான் சொல்றார். ரெண்டு பேரும் ஒரு தேதி கொடுங்கண்ணே". இப்படித் தான் கத்தார் பயணம் உறுதி செய்யப் பட்டது.
20ம் தேதி இரவு அரசு அண்ணன் சென்று விட்டார். அரியலூர் பொதுக் கூட்டம் முடிந்து, 22 இரவு நான் சென்றேன். அதிகாலை 02.35 தோகா விமான நிலையத்தில் விமானம் இறங்கியது. பெட்டிக் காணாமல் தாமதமாக வெளியில் வந்தேன்.
வரவேற்பு பலகைகளோடு பலர். அப்போது ஒரு கருப்பு, சிவப்பு நிறம் கண்ணில் பட்டது. கத்தாரில் கருப்பு, சிவப்பு. அந்த டீ-ஷர்ட்டில் நம்ம ரஷீத். கையை காட்டி வரவேற்று விட்டு ஓடினார். உடன் வந்திருந்த தோழர்களை அழைத்துக் கொண்டு ஓடி வந்தார்.
அழைத்து சென்று அறையில் தங்க வைத்து விட்டு சென்றார். காலை எழுப்பி, டீ கொடுத்தார். டிபன் பார்சல் வாங்கி வந்துக் கொடுத்தார். மதியம் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார். நிகழ்ச்சியை அவர் தான் தொகுத்து வழங்கினார்.
இரவு அரசு அண்ணனை விமான நிலையத்தில் பொறுப்பாக செக் இன் செய்து அனுப்பி வைத்தார். காரில் கிளம்பினோம். அசந்து தூங்கினார். "ஏன் இப்படி?", என்றுக் கேட்டேன். "அரசு அண்ணன் வந்ததில் இருந்து மூனு நாளா தூங்கல" என்றார்கள்.
மறுநாள் காலையில் இருந்து என்னோடு இருந்தார். இவரைப் பிடித்து தான் இக்பால் உட்பட பல நண்பர்கள் என்னை சந்திக்க வந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மக்கள் தொடர்பு அலுவலர்.
மாலை ஆளை காணவில்லை. எங்கே என்றேன். "அவர் ஆபிசில் இருந்து 20 அழைப்புகள். அங்கே முக்கியப் பணிகள். அவர்களுக்கு நம்பிக்கையான நபர் இவர். அது தான் அழைப்பு. அப்புறம் நான் தான் வற்புறுத்திக் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தேன்", என்றார் சதக்.
மறுநாளும் தூக்கக் கலக்கதோடு வந்தார். மீண்டும் அலுவலகத்தில் இருந்து அழைப்பு. ஆனாலும் எங்களோடு இருந்தார். வற்புறுத்தி அனுப்பி வைத்தோம்.
இருப்பது வெளிநாட்டில், எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கழகத்தால் துளியும் லாபம் கிடையாது இவருக்கு, ஆனால் சிந்தனை எல்லாம் கழகம் தான். இவர்கள் தான் கழகத்தின் பலம்.
#கத்தாரில் கழக வீரர்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக