பிரபலமான இடுகைகள்

சனி, 7 நவம்பர், 2015

கத்தாரில் அண்ணாமலையன்கள்

கத்தாரில் எங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பை, எனது  நண்பர் ராஜ விஜயன் ஏற்படுத்திக் கொடுத்தார்.  சீனியர் சாய்மணி அவர்கள் தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அருமையான நிகழ்வாக அமைந்தது.

சீனியர், ஜூனியர் என பலரை சந்தித்தேன். சீனியர் என்றால் எங்களை விட இருபது ஆண்டுகளுக்கு முன்பு படித்தோரும் இருந்தனர். ஒரிரு ஆண்டுகள் சீனியரும் இருந்தனர்.

ஜூனியர்களில் ஓரிரு ஆண்டுகள் பின்னால் படித்தவர்களும் இருந்தனர். பதினைந்து ஆண்டுகள் பின்னால் படித்த ஒருவரும் இருந்தார். அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்கள். எனக்கு அது ஒரு வித்தியாசமான சந்திப்பு.

திருமேனி, சாய்மணி, அப்துல் கபூர், ரவீந்திரன், பரத், முரளிமுருகன், கிருஷ்ணகுமார், கார்த்திக் ராமையா, சுந்தர்ராமன், சுதர்ஷன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதில் திருமேனி மற்றும் சாய்மணி ஆகிய இருவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கத்தார் சென்று பணியில் சேர்ந்து, இன்று உயர்ந்த நிலையில் இருப்போர். நீண்ட பணி அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

அவர்களுக்கு சில வருடங்களுக்கு முன், அவர்களது நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான புதிய நபர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதே சமயத்தில் அவர்களோடு படித்த வகுப்பு நண்பர் இவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பிரிவின் அலுவலர்.

பல்கலைக்கழகம் சென்றிருக்கிறார்கள். நண்பரை சந்தித்திருக்கிறார்கள். "வேலைவாய்ப்பு வழங்குகிறோம். சில நிபந்தனைகள்", என்றிருக்கிறார்கள். அதனை பட்டியலிட்டிருக்கிறார்கள்.

"அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருக்கக் கூடாது. அரியர் வைத்து பாஸ் செய்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். முக்கியமாக, முதல் தலைமுறையாக வேலைக்கு வருபவர்களாக இருக்க வேண்டும்"

கேட்ட அவர்களது நண்பர் திகைத்திருக்கிறார். "ஏன் இப்படி?" எனக் கேட்டிருக்கிறார். "நிறைய மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கும். இவர்கள் தான் வேலைக்கு சிரமப்படக் கூடியவர்கள். முதல் தலைமுறை, ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உதவியதாகவும் இருக்கும்".

"நம் பல்கலைக்கழக மாணவர்கள் எந்த மதிப்பெண் எடுத்தவராக இருந்தாலும்,  எந்த சூழ்நிலையையும் கையாள்பவராக தேறி விடுவார்கள். பணியில் சேர்ந்து விட்டால் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். நாங்களும் படித்த பல்கலைக்கழகத்திற்கு நன்றிக்கடன் தீர்த்ததாகி விடும்".

சொன்னபடி தேர்ந்தெடுத்து கத்தாரில் பணியும் வழங்கி இருக்கிறார்கள். இப்போது அவர்களும் சிறப்பாக பணிபுரிந்து நல்ல நிலையில் இருப்பதை மகிழ்வோடு சொன்னார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த அளவு உதவினாலே சிறப்பு தான்.

தங்கள் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினராக தங்களை சந்தித்ததில் மகிழ்ந்து நினைவுப் பரிசு அளித்தனர்.

ரவீந்திரன் ஒரு சிறந்த ஓவியர். தோகாவின் அடையாளமாகத் திகழும் ஷூக் எனப்படும் பழமையான மார்க்கெட் பகுதியை, அழகான ஓவியமாக வரைந்து பரிசாக வழங்கினார்.

# கத்தாரில் இருப்பினும், அடையாளம் மாறாத அண்ணாமலையன்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக