பிரபலமான இடுகைகள்

திங்கள், 2 ஜனவரி, 2017

புத்தாண்டு சபதம் !

புது ஆண்டு பிறந்து விட்டது. ஏதாவது சபதம் ஏற்கவேண்டுமே.

வெறுமனே சபதம் எடுக்காமல், உடனே நிறைவேற்றுவது என்று முடிவெடுத்தேன். அது "சோம்பேறித் தனத்தை விலக்குவது".

சரி என்று, காலையில் இருந்து முயற்சித்து இப்போது தான் கொஞ்சம் வெற்றி. பொது வேலைகளில்  சோம்பேறித் தனம் காட்டுவது இல்லை. காரணம், அடுத்தவர்கள் ஏதும் சொல்லிவிடக் கூடாது என்று. அதனால் முடிந்தவரையில் ஓடிவிடுவது வாடிக்கை. சொந்த வேலைகளில் தான் சோம்பேறித்தனம்.

பெரிசா ஒன்னும் இல்லை. ரெண்டு நாள் நடைப்பயிற்சி போனா, நாலு நாள் ஓய்வு. அப்புறம் பாத்துக்கலாம்னு. இதை அண்ணன் ராசா பலமுறை கண்டித்து விட்டார். அப்புறமும் அதே கதை தான். அடுத்து எழுதுவது. நாளை எழுதலாம்னு தள்ளி வச்சா, வேற வேலை வந்து தள்ளிப் போய், தலைப்பின் சுவை போயிடுது. அதுக்குள்ள ஏதாவது பத்திரிக்கையில் அது வந்துடும்.

கண்ணுல பட்ட புத்தகத்த எல்லாம் வாங்கறது. பாதி படிச்சிட்டு படுக்கை மேல, அலுவலக மேசை மேல, உடை மேசை மேல, நாற்காலி மேல, வாகனத்தில, பெட்டியில, தோள்பையில எல்லாம் காட்சிக்கு வைப்பது.  நாளிதழையும் விடறதில்ல. தினத்தந்திய செய்திக்காக எடுத்து வைக்கிறது, தமிழ் இந்து'வ எழுத்தாளர் கட்டுரைக்காக எடுத்து வைக்கிறதுன்னு ஒரு பக்கம் குவிஞ்சு கிடக்கும், பாதிப் படிச்சும் பாதிப் படிக்காமலும்.

இது இல்லாம வாட்ஸ் அப் குழுக்கள்ல கோர்த்து விட்டுடறாங்க. அதுல முக்கியமான செய்தி , இதுல சுவையான செய்தி இருக்கும்னு வச்சிருந்து 3000 நோட்டிபிகேஷன் காட்டுனப்புறம், எல்லாத்தையும் ஒரேத் தட்டில் திறந்து விடுறது. அப்புறம் குழுவவிட்டு ஓடிடுறதுன்னு போவுது. இதல்லாமல் மெசெஞ்சர் திறந்து பார்த்தா 'சாப்பிட்டாச்சா?''. அதனால் திறக்காமப் போட்டா, அது குவிஞ்சிடுது.

அப்புறம் இந்த அலைபேசி இம்சை. ஒன்னு டிஸ்பிளெ போயிடுச்சு. இன்னொன்னு எதிராளி பேசறது கேக்கல. பழுது நீக்க போனா, டோக்கன் போட்டு, உட்கார்ந்து விளக்கி, அப்புறம் அது கிடக்குன்னு விட வேண்டியதாயிடுது. நடைபயிற்சிக்கு துணைக்கு வாங்கின 'பாட்டிசைக்கிற கருவியும்' வேல செய்யல. எல்லாம் அப்படியே, அப்படியே கிடக்கு, பார்ப்போம்னு.

அப்புறம் புத்தகம் போடறது. பல நண்பர்கள் உற்சாகப்படுத்தி கிட்டு இருக்காங்க. மூணு புத்தகத்துக்கு முகநூல்லயே தேவையானது இருக்கு. எடுத்து விடுபட்ட கண்ணிய இணைக்கனும்.

சில நிலைத்தகவல்கள் நேர்ல பார்க்கற மாதிரியே இருக்குன்னு சில தோழர்கள் உசுப்பேத்த, ஒரு நிலைத்தகவல் காட்சி பிரிச்சு பார்த்தேன். அத துணை இயக்குநர் தம்பி பாலாவு( Bala Bharath)க்கு அனுப்பினா, அவர் 'சிறப்பான காட்சிப்பதிவு'ன்னு பதில் அனுப்பியுள்ளார். சீக்கிரம் ஒரு குறும்படம்.

தமிழகத்தின் சில பகுதிகளுக்கு போக வேண்டி இருக்கு. தள்ளித் தள்ளி போய்கிட்டு இருக்கு. நேரம் கிடைக்கலங்கறது ஒரு பக்கம்னா, நம்ம சோம்பேறித் தனம் ஒரு பக்கம். இந்த வருடம் போயிடனும். ஒரு படகுப் பயணம், ஒரு மலை நடைப்பயணம் எல்லாம் காத்திருக்கு.

முக்கியப் பிரமுகர்கள் சந்திப்பு சிலது. அவங்கள தொந்தரவு பண்றதா ஆயிடுமோன்னு தள்ளிப் போகுது. எங்கப் பகுதிக்கு உட்பட்டவங்க, தமிழக அளவில் இருக்கவங்க, கட்சியில் மூத்தவர்கள்னு பார்க்கனும்.

சில சினிமாக்கள பாக்கறதும் வாய்ப்பு இல்லாம இருக்கு.  புதிய கற்றல் ஒன்னும் நீண்ட நாள் ஆசை.

இதெல்லாம், கட்சி வேலைகள், பொது வேலைகள், கல்யாணங்கள், துக்கங்கள் போக மீதி இருக்கிற நேரத்தில் தான். ஒடனும் போல.

ரொம்ப நாளா நக்கீரன் இணை ஆசிரியர் அண்ணன் லெனின் ( Govi Lenin) புத்தகத்துக்கு முன்னுரை எழுதாம தள்ளிப் போட்டத, இன்னைக்கு எழுதி அனுப்பி சோம்பேறித் தனத்தை விரட்டியாச்சி. கழகப் பொதுக்குழு 4ம் தேதி. அடுத்த நாள் எக்கனாமிஸ்ட் அண்ணன் நரேன்( Narain Rajagopalan) நூல் வெளியீட்டு விழா, மோடியின் செல்லாக்காசை விளக்கும் நூல். கருத்துரை.

# ஓடுவோம், சோம்பேறித்தனம் துரத்த !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக