மாணவர்கள் போராட்டம் வெற்றி !
இனி ஜல்லிக்கட்டுக்கான தீர்வு எப்போது வந்தாலும், மாணவர்களின் போராட்டம் வெற்றி தான்.
அது எப்படி அதற்குள் வெற்றியாகும்?
பொதுவாக ஒரு பேச்சு உண்டு. இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பொதுப் பிரச்சினையில் அக்கறை இல்லை, அரசியல் புரிதல் இல்லை, போராட்டக் குணம் இல்லை. இப்படியானப் பேச்சுகளை தகர்த்தெறிந்தது இந்த போராட்டம். இது முதல் வெற்றி.
துவக்க நாளில் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்ற பேச்சு இருந்தது போக, "தொடர்ந்து" மூன்றாவது நாளாக இன்று வெற்றிகரமாக கடந்து கொண்டிருக்கிறது.
மாணவர்கள் போராட்டம் தானே ?
அலங்காநல்லூரில் துவங்கியது, மெரீனா கடற்கரையை குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களுக்கும் பரவி தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
கல்லூரி மாணவர்களில் துவங்கியது, இளைஞர்கள், பெண்கள் ஆதரவையும் பெற்று குழந்தைகள் வரை சென்று விட்டது. அரசு பணியில் இருப்போர், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், தொழில் புரிவோர் என அனைவரின் பார்வையையும் ஜல்லிக்கட்டு நோக்கி திருப்பியது மாணவர்கள் போராட்டம்.
மாணவர்களில் பெரும்பாலோர் ஜல்லிக்கட்டை பார்த்திராதவர்கள், இவர்கள் எப்படி இவ்வளவு தீவிரமாக போராடுகிறார்கள் ?
ஜல்லிக்கட்டை பார்த்திராதவர்களாக இருக்கலாம், பங்கேற்காதவர்களாக இருக்கலாம் ஆனால் ஜல்லிக்கட்டின் மீதான தடை, தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக அவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
காவிரியில் நீர் வராமல் கிட்டத்தட்ட 200 விவசாயிகள் இறந்தபோது, அதைப் போன்ற இன்னபிற வாழ்வாதார பிரச்சினைகளில் அவர்கள் பெற்றோரே கூட பாதிக்கப்பட்ட போது போராட வரவில்லையே இந்த மாணவர்கள்?
அப்போதும் அந்த கோபம் இருந்தது. பொதுத் தளம் கிடைக்கவில்லை. அது தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியின் பிரச்சினையாக இருந்தது. ஜல்லிக்கட்டு தமிழகத்தை இணைத்து விட்டது. இப்போது இந்தப் பொறி, நெருப்பாகிவிட்டது.
வள்ளுவர் கூறியது போல, "பீலிப் பெய் சாக்காடும்". இது கடைசியாக விழுந்த மயிலிறகு தான், ஆனால் வண்டியின் அச்சாணி முறிந்துவிட்டது. கோபம் எல்லை மீறி வெளியில் வந்து விட்டார்கள்.
இதை எப்படி சொல்ல முடியும்?
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களின் தொலைக்காட்சி பேட்டிகளிலும், வாட்ஸ் அப் பகிர்தலிலும் வெளிப்படுகிறதே அந்த கோபம்.
ஒவ்வொரு கோரிக்கையையும் வலியுறுத்துகிறார்களே...
காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்,
பவானி ஆற்றில் கேரளா தடுப்பணை கட்டக்கூடாது,
முல்லைப் பெரியார் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்,
நாட்டுமாடுகளை காக்க வேண்டும்,
வெளிநாட்டு பானங்களை புறக்கணிப்போம்,
நீட் தேர்வு கூடாது....
இது எல்லாவற்றையும் இளைஞர்கள் ஆளுக்கொருப் பக்கம் வலியுறுத்துகிறார்கள். இது எல்லாம் பொதுப் பிச்சினைகளில் அவர்கள் பார்வையை தானே வெளிப்படுத்துகிறதே.
ஆனால், அரசியல் கூடாது என்கிறார்களே?
அரசியல் சாயம் கூடாது என்பது தான் அவர்கள் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால் எப்போது போராட்டக் களத்திற்கு வந்தார்களோ, அப்போதே அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.
போராட்டத்தை குறித்த கருத்து ?
மிக கவனமாக எந்த தவறுகளும் நேர்ந்து விடாமல், கண்ணியத்தோடு, ஒரு ஒழுங்கோடு, கட்டுப்பாட்டோடு, தன்னெழுச்சியோடு ஒரு முதல் போராட்டம் இது. பாராட்டுக்குறியது.
சில போஸ்டர்களில் " மிக்ஸர்" போன்றவற்றின் மூலம் எல்லை மீறுகிறார்களே?
இவர்கள் இதுவரை தங்கள் கோபத்தை மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தியவர்கள். அதை ஒட்டி சில மீம்ஸ்களை, போஸ்டர்களாக வெளிப்படுத்தி உள்ளார்கள். சமூக வலைதளங்களில் கிடைத்த சுதந்திரம், பொதுவெளியில் வெளிப்பட்டு விட்டது.
இந்த போராட்டம் என்ன வித்தியாசம்?
இது புதிய தலைமுறையின் போராட்டம். செல்போனை வைத்துக் கொண்டு எப்போதும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என நேரம் போக்குகிறவர்கள் என்ற நக்கலுக்கு ஆளானவர்கள். இப்போது செல்போன் மூலமே எதிர்ப்பை துவக்கி, போராட்டத்தை ஒருங்கிணைத்து, வேகப்படுத்தியுள்ளார்கள். உச்சகட்டமாக இன்று இரவு மெரீனா கடற்கரையில் செல்போன் பிளாஃஷ்களை மின்ன வைத்து உலக போராட்டத்தில் புதிய யுக்தியை வெளிப் படுத்தியுள்ளார்கள்.
மொத்தத்தில்?
# மாணவர்கள் போராட்டம் வெற்றி, இந்த நொடியே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக