பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஆஹா ரசிகன் !

நான் அதிகம் பார்த்து, ரசித்த பாடல் இதுவாகத் தான் இருக்கும். இதில் இருக்கும் 'எனர்ஜி' அப்படி. நான் பிறப்பதற்கு ஒரு வருடம் முன் வந்த படம். ஆனாலும் அந்தப் பாடல் அவ்வளவு கவர்ந்து விட்டது. எம்.ஜி.ஆர் நடிப்பதை நிறுத்திய பிறகு, சினிமா பார்த்து ரசிக்க ஆரம்பித்த தலைமுறை நான். அதிலும் சிறுவயதிலிருந்தே அவருக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு கொண்ட நான், அவரது 'படங்களின்' ரசிகன்.

அவரது படங்களில் உற்சாகம் இருக்கும், துள்ளல் இருக்கும், உணர்ச்சி இருக்கும். அது அப்படியே அவரது பாடல்களில் எதிரொலிக்கும். அவை அப்படியே நம்மை தொற்றிக் கொள்ளும். இந்தப் பாடலும் அப்படி தான். இதில் அவரது உடை கூட  ஈர்ப்புக்கு காரணமாக இருக்கலாம், சிகப்பு முழுக்கை சட்டை, கருப்பு கால்சராய். அவரது துள்ளல் உடல்மொழி வெளிப்படும் நடனம்.

நடிப்பை தாண்டி எம்.ஜி.ஆர் சிறந்த டெக்னிஷியன். அவர் இயக்கிய நாடோடிமன்னன் அதை தெளிவாக எடுத்துரைக்கும். மற்ற இயக்குநர் படங்களிலும் இவரே டியூன், பாடல் என எல்லாவற்றையும் இறுதி செய்வார் என்றப் பேச்சு உண்டு. படத்தில் எங்கே, எது இடம் பெற வேண்டும் என்பதை அறிந்தவர்.

இந்தப் பாடலில், வாலி தன் ரசனையான வார்த்தைகள் மூலம் எம்.ஜி.ஆரை படம் பிடித்துக் காட்டுவார்.

"என்னை தெரியுமா என்னை தெரியுமா?
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா?
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா?"

இவ்வளவு தான் எம்.ஜி.ஆர், இது தான் எம்.ஜி.ஆர்.

சிரித்து, பழகி, கருத்தை கவரும் ரசிகன். இதனால் தான் அவர் படங்கள் வெற்றி பெற்றன. இதை கொஞ்சம் கூர் தீட்டி அரசியலிலும் வெற்றி பெற்றார். 'உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன்'. அவரது படங்களின் அடிநாதம் இது தான். படம் பார்க்க வருபவரை சண்டை, பாடல், நடனம் என மகிழ்ச்சிப் படுத்தி கவலை மறக்க வைத்த நடிகர். அதன் மூலம் வசியப்படுத்தியவர்.

அடுத்த வரி இன்னும் ஒரு படி மேல்.

"ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்".

தான் ரசிப்பதை, மக்கள் ரசிப்பதை மாத்திரம் கொடுத்து வெற்றியை கைப்பற்றியவர்.

கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரின் படங்கள் ஒரே கதைப் படமாகத் தான் இருக்கும். நல்லவரை எதிர்க்கும் கெட்டவர்கள், போராடி அவர்களை வென்று நியாயத்தை நிலைநாட்டும் நல்லவர். ஆனால் அதை வித்தியாச, வித்தியாசமாகக் கொடுத்து பெற்ற வெற்றி தான் எம்.ஜி.ஆர்.  ஆரம்பத்தில்  சாதாரண நடிகராக இருந்தவரை "மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி, மலைக்கள்ளன்" ஆகிய தன் படங்கள் மூலம் ஆக்‌ஷன் ஹீரோ ஆக்கிய கலைஞரின் இந்த நுட்பத்தை கடைசி வரை வெற்றிகரமாக கடைப்பிடித்தார் எம்.ஜி.ஆர்.

"நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன். நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன் ". காலத்திற்கேற்ப, மாறி வந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டவர். எது சிறப்பானதோ, அதை கொடுத்து மக்கள் மனம் கவர்ந்தவர்.

"ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவு கொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்".

வாலியின் வரிகளாக இருந்தாலும் எம்.ஜி.ஆரின் பிம்பம் கட்டமைக்கப் பட்டது இப்படி தான். உதவி செய்பவர், எல்லோருக்கும் உறவானவர் என்பதை மீண்டும், மீண்டும் மக்கள் மனதில் பதிய வைத்தார். அதை நுட்பமாக, தொடர்ந்து செய்து வென்றவர் தான் எம்.ஜி.ஆர்.

"ஒரு சிலையை கண்டேனே அது சிரிக்க கண்டேனே
இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே" என்று அதிமுகவின் இன்றைய நிலைக்கான காரணம் அந்தப் பாடலில் வரை சொல்லி விட்டார்.

அவரது ஒவ்வொரு படமும், பாடல்களும் ரசிக்கக் கூடியவை. காரணம் அவர் ரசித்து, ரசித்து உருவாக்கியவை அவை. அதனால் தான்  அவரது நூறாவது ஆண்டு பிறந்தநாளில், அரசியல் ரீதியாக எதிர்முனையில்  இருக்கும் என்னையும் 'ரசித்து' எழுத வைக்கிறார் என நினைக்கிறேன்.

# சிரித்து பழகி கருத்தைக் கவர்ந்த ரசிகன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக