"நல்லது நடக்கும். பொறுத்திருங்கள்", இதை சொல்லிவிட்டு ஒரு மர்மப் புன்னகை பூத்தார் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லியில். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அளித்த பேட்டி இது.
"தமிழக அரசே இதற்கு அவசர சட்டம் இயற்றிக் கொள்ளலாம்", மத்திய அரசின் வழக்கறிஞர் வாய் திறந்தார்.
இடைவேளைக்கு பிறகான ரஜினி படம் போல காட்சிகள் சூடுபிடித்தன.
மறுநாள் காலை தமிழக அரசின் வழக்கறிஞர் வரைவு சட்டம் தயார் செய்தார்.
மதியம் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. மாலை கலாச்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இரவே உள்துறை ஒப்புதல் அளித்தது.
இது ஒவ்வொன்றுக்கும் ஊடகங்கள், பிளாஷ் நியூஸ், பிக் நியூஸ், தற்போதைய செய்தி என பிண்ணனி இசையோடு தலைப்பிட்டு அதகளம் செய்தார்கள்.
"நானே வந்து வாடி வாசல் திறப்பேன். ஜல்லிக்கட்டு நடக்கும்", வெற்றிப் புன்னகை பூத்தார் ஓ.பி.எஸ்.
2009ல் இது போன்ற நிலையில் தான் "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம்" கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டினார் தலைவர் கலைஞர்.
அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வந்தப்போது, இது போன்ற அவசர சட்டத்தை நிறைவேற்றத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
அப்போதை முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். ஆனால் அவசர சட்டம் இயற்ற முன்வரவில்லை ஜெ.
இரும்பு பெண்மணியை கேள்வி கேட்க பத்திரிக்கைகள், ஊடகங்கள் முன்வரவில்லை.
இந்த ஆண்டும் திமுகவும் ஜல்லிக்கட்டு பேரவையினரும் போராட்டம் நடத்திய போதும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் "ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்" என்று தொடர்ந்து முழங்கி வந்தனர்.
பொங்கல் போது தான், நீதிமன்றத்தைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பில்லை என பின் வாங்கினார்கள்.
மாணவர்கள் திரண்டு போராட, ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்ப்பை காட்டிய பிறகு தான் மோடிக்கு உதறல். ஓ.பி.எஸ்ஸை டெல்லி வர சொல்லி இந்த 'அவசர சட்டத்திற்கு' அறிவுரை வழங்கி இருக்கிறார். சட்டமும் வரப்போகிறது.
படத்திற்கு 'சுபம்' போட்டு முடிக்க ஆசைப்படுகிறார்கள். இது 'இடைவேளை' தான், 'முடிவு அல்ல' என மாணவர்கள் கூறுகிறார்கள். நிரந்தர முடிவு தான் தேவை என அவர்கள் கோரிக்கை.
அது கூட அப்புறம் விவாதிப்போம்.
இந்த அவசர சட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டு வராததன் காரணம் என்ன? ஜனவரி ஆரம்பத்திலேயே கொண்டு வராததன் நோக்கம் என்ன ? ஜல்லிக்கட்டு நடக்கக் கூடாது என்பது தானே.
"காலம் கடத்தி ஜல்லிக்கட்டு நடத்த இடையூறாக இருந்தது யார் "? என தலைப்பு வைத்து விவாத களம் நடத்த எந்த ஊடகமும் முன்வராதது ஏன்? வரமாட்டார்கள். அவர்கள் முன்வர வேண்டாம், உணரக்கூடியவர்கள் உணர்ந்தால் போதும்.
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதாக நினைத்து விளையாடிய மோடியும், ஓ.பி.எஸ்ஸும் மாட்டியிருப்பது ஜல்லிக்கட்டு திடலில்.
# தமிழ் காளை கொம்பில் சிக்கி திணறுகிறார்கள். தொடரும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக