பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 3 ஜனவரி, 2017

உண்மையின் குரல்

அதிமுக கரைவேட்டியோடு ஒரு சிலர், கோபாலபுரம் தலைவர் கலைஞர் இல்லம் முன்  நிற்பதை பார்த்து கழகத் தோழர்களுக்கு சந்தேகம். காவல்துறையினரும் கவனிக்கின்றனர். அவர்களை அணுகி என்னவென்று விசாரிக்கிறார்கள்.  அப்போது வீட்டின் முகப்பறையில் இருந்த தளபதி  அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வத்திடம் அந்த அதிமுகவினரை கூப்பிட சொல்கிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை பார்க்க  கரூரில் இருந்து வந்த  அதிமுகவினர் 12 பேர் அவர்கள். ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்த்து விட்டு   தலைவர் கலைஞரை பார்க்க அதிமுக கரைவேட்டியுடன் கோபாலபுரம் வந்துள்ளனர். அதிமுக கரை வேட்டியுடன் அனைவரும் உள்ளே வந்துள்ளனர். அவர்களிடம்  தளபதி, "சென்னையில் எங்கெங்கு எல்லாம் போய் பார்த்தீங்க? எனவும், உங்கள் ஊர் என்ன? பெயர் என்ன? என்ன தொழில் பண்றீங்க" என எளிமையாக அவர்களிடம் 15 நிமிடம் பேசியுள்ளார்.

பின்னர், "போட்டா எடுத்துக்கலமா?" எனக்கேட்ட அவர்களிடம் "இதென்ன கேள்வி? வாங்க" என அருகில்  அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் தளபதி.
அப்போது தளபதியிடம் பேசிய அவர்கள், "எங்கம்மாவை கொன்னுட்டாங்க, நீங்க தான் கேஸ் போட்டு கொன்னவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கனும்" எனக் கூறியுள்ளனர்.

அடுத்த நாள் இதே போல ஜெயலலிதா நினைவிடம் வந்த ஒரு குடும்பமும் கோபாலபுரம் வந்துள்ளனர். அவர்களுக்கும் தளபதி அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு. அவர்களை தனக்கு பக்கத்து இருக்கையில் அமர சொல்ல, கூச்சப்பட்டுள்ளனர். தனது சகோதரி செல்வி அவர்களை அழைத்து அவர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளார், "இவங்க என் சகோதரி செல்வி. அவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி". அவர்கள் அவரது எளிமையை கண்டு பிரமித்திருக்கின்றனர்.

வெளியில் வந்த அவரை ஊடக நிருபர் பேட்டி எடுக்க," தளபதி ஸ்டாலின் தான், அம்மா இறப்பு குறித்து உண்மையை வெளியே கொண்டு வரணும். அவர் தான் அடுத்த முதலமைச்சர். அதுவும் மூணு மாதத்தில் நடக்கும்", என்று கூறுகிறார். அது அவருக்கு ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட கோபத்தின் தாக்கம். இவரால் தான் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை.

இது ஏதோ ஜெயலலிதா மரணத்தால் தற்போது ஏற்பட்ட நம்பிக்கை அல்ல. தனது அரசியல் பயணம் துவங்கியதில் இருந்து, தளபதி நிதானமாக எடுத்து வைத்த அடிகளால் ஏற்படுத்திய நம்பிக்கை. ஒவ்வொரு இடத்தில் பேசும் போதும் பேச வேண்டியவற்றை மட்டுமே பேசுபவர்.

சில தலைவர்கள் இருக்கிறார்கள், காதல் மனைவியிடம் கூட போர்களத்து வீரனை போல் பேசுவார்கள். சிலர் எதிரில் இருக்கும் கூட்டம்  கை தட்ட,தட்ட டெஸிபல் கூடி பேசி வழக்கு வாங்கிக் கொள்வார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள், முதல் நாள் பேசியதற்கு அவர்களே மறுநாள் மறுப்பறிக்கை வாசிப்பார்கள்.

இவர் குறிப்பு வைத்துக் கொண்டு பேசுவதை கேலி செய்வோரும் உண்டு. தனது சொல்லுக்கான வலு அவருக்கு தெரியும். அதில் பிழை இருக்கக் கூடாது என்று தான் குறிப்பு.  அதனால் தான் இன்றைக்கும் தான் சொன்னதில் இருந்து பின் வாங்காமல் நடை போடுகிறார். முழ நீளம், மூச்சு வாங்க பேசி விட்டு, என்ன பேசினோம் என்று தெரியாமல் முழிப்பதில்லை.

இவரது உரையில் அலங்கார சொற்கள் இருக்காது, ஆவேசம் இருக்காது. ஏன், அண்ணாவை போல் அடுக்குமொழி இருக்காது, தலைவர் கலைஞரை போல் இலக்கிய நயம் இருக்காது. ஆனால் உண்மை இருக்கும். அதை  மக்கள் நம்புகிறார்கள் என்பதன் அடையாளம் தான் அதிமுகவினரின் வெளிப்பாடு.

அவரது அடையாளமாக எளிமையும், உண்மையும் கொள்ளப்படுகின்றன. அதற்கு என்றும் வீரியம் கூடுதல்.

இவரது அறிக்கைகள் தான் இப்போது தமிழக அரசின் கண்திறப்பான். ஒவ்வொரு அறிக்கையாக வெளி வர,வர அரசாங்கம் செயல்படுகிறது. ஜெயலலிதா உடல் நலிவுற்ற போது, ஓ.பி.எஸ்ஸிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை தளபதி அறிக்கை தான் அரசை ஆட்டிவிக்கிறது.

# உண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக