பிரபலமான இடுகைகள்

வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு மட்டுமல்ல...

இது வெறும் ஜல்லிக்கட்டு மட்டுமல்ல.

அண்ணாவின் கனவு சேது சமுத்திர திட்டம். அதை நடைமுறைப்படுத்தினால், இலங்கை வழியாக சுற்றி செல்கிற கப்பல்கள் கன்னியாக்குமரி வழியாக திரும்பும். அதனால் தமிழகத்தின் துறைமுகம் வேலை பெறும். இதன் காரணமாக தமிழகத்தின் வருவாய் அதிகரிக்கும். கால்வாயை அமைக்கும் பணி துவங்கி முக்கால்வாசி நிலையில் நிறுத்தப்பட்டது.

இதற்கு எங்கிருந்து முட்டுக்கட்டை வந்தது ?
நீதிமன்றத்திடம் இருந்து.

சொல்லப்பட்ட காரணம் என்ன? அந்த இடத்தில் ராமர் பாலம் இருக்கிறது.

எந்த இடத்தில் ராமர் பாலம் இருப்பதாக சொன்னார்கள்?
கடல் தண்ணீருக்கு கீழ்.

உண்மையாக பாலம் இருக்கிறதா?
கடல் தண்ணீருக்கு கீழ் மணலால் பாலம் கட்டியதாக சொன்னால் குழந்தையாவது ஒப்புக்கொள்ளுமா.

அப்புறம் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?
சொல்பவர்கள் சொல்வதால்.

ராமர் பாலம் இருப்பதற்கு ஆதாரம் உண்டா?
புராணக் கதையில் சொல்லப்பட்டது தான் ஆதாரம்.

ராமர் பாலம் இருப்பதாகவே கொண்டாலும் அது மக்களுக்கு தேவையா? சேது கால்வாய் தேவையா?
தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் சேது கால்வாய் தான் தேவை.

பின் எதிர்க்க காரணம் என்ன?
தமிழகம் முன்னேறக் கூடாது. இலங்கையின் லாபம் குறையக் கூடாது.

புராதன சின்னமான 'இல்லாத' ராமர் பாலம் காப்பற்றப்பட, சேதுகால்வாய் கிடையாது.

******************************

சிதம்பரம் நடராஜர் கோவில் யாருக்கு சொந்தம்?
தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்கள் அரசுக்கு சொந்தமாக இருப்பது போல் அரசின் அறநிலையத் துறைக்கு கீழ் தான் வரவேண்டும். வருமானம் அரசின் கட்டுப்பாட்டில் வர வேண்டும்.

ஆனால் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?
அய்ம்பதுக்கு உட்பட்ட தீட்சிதர்கள் கையில் உள்ளது.

எப்படி அவர்களிடம் சென்றது?
வேத ஆகம விதிப்படி, பாரம்பரியமாக தீட்சிதர்களுக்கே சொந்தம் என நீதிமன்றம் கூறிவிட்டது.

யாரும் எதிர்க்கவில்லையா?
அரசு எதிர்த்தது. சிதம்பரம் நகர மக்களும் சுற்றி உள்ள ஊர்களின் மக்களும் எதிர்த்தார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் "நீதி" வழங்கியது.

கோவிலை கட்டியது அந்த தீட்சிதர்களா?
இல்லை. அது தமிழ் மன்னர்களான சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது.

'இல்லாத' ஆகம விதிகளை காக்க நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கே சொந்தம்.

****************************

அங்கே ராமன், இங்கே நடராஜன் அவ்வளவு தான் வித்தியாசம்.  ஆனால் நீதி ராமனுக்கும், தீட்சிதருக்கும் தான் துணை.

தமிழன் நிலை?
சேதுசமுத்திரத்திற்காக போராடு, தில்லை நடராஜன் கோவிலுக்காகவும் போராடு.

கட்சிகள் நிலை?
சேதுசமுத்திர திட்டத்திலும், நடராஜர் கோவில் விசயத்திலும் எந்தக் கட்சிகள் எந்தப் பக்கம் என்று உணர்ந்தாலே, தமிழனுக்கு போராடுவது யார் என்று தெரியும்.

********************************

நீதிமன்றங்கள் ஏன் இப்படி நடந்துக் கொள்கின்றன ?
அது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை ஆராயுங்கள்.

************************************

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது யார்?
நீதிமன்றம்.

சொன்ன காரணம்?
மிருகங்கள் வதைக்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டல்லவா?
ஆமாம்.

இல்லாத புராணத்தையும், இல்லாத ஆகமத்தையும் காக்க நீதி வழங்கிய நீதிமன்றம், வரலாற்று ஆதாரம் உள்ள பாரம்பரிய ஜல்லிக்கட்டை தடை செய்கிறதே?
இதற்கு பின்புலம் யார்?
நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

புராணம், ஆகமத்திற்கு போராடுபவர்கள் யார்? என்பதை அறிந்தால் இதன் சூட்சுமங்கள் அத்தனையும் விளங்கும் !

அப்போ ஜல்லிக்கட்டு?
சேதுகால்வாய் போல, சிதம்பரம் நடராஜர் கோவில் போலத் தான் ஜல்லிக்கட்டும். போராடித்தான் ஆக வேண்டும்.

# விரட்டும் வரைப் போராடித் தான் ஆக வேண்டும் !

#Jallikattu
_எஸ்.எஸ்.சிவசங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக