பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

மனதை வெற்றி கொண்டவர் !

வெற்றிகொண்டான் என்றால் நகைச்சுவை பேச்சாளர் என்பது தான் பொதுவான எண்ணமாக இருக்கும். எந்த அளவிற்கு நகைச்சுவையா பேசுவாறோ, அதே அளவு உருக்கமாக பேசக் கூடியவர். பேச்சாளர்களுக்கு அது அவ்வளவு எளிதில் கைவராத விஷயம். ஏதாவது ஒரு சுவையில் தான் திறமையானவர்களாக இருப்பார்கள். அதே போல எந்த ஒரு செய்தியையும் அவர் அணுகுகிற கோணம், யாரும் அணுகாததாக இருக்கும்.

பத்திரிக்கைகளில் செய்தியை படிக்கும் போது, பக்கத்தில் ஒரு பரிட்சை அட்டையும் பேனாவும் இருக்கும். சில செய்திகளை படித்தவுடன் குறிப்பெடுப்பார். அது மேடையில் சில நேரங்களில் இருக்கும். புத்தகங்களை படித்து, அதில் குறியிட்டிருப்பார். அதே போல கூட்டத்திற்கு முன்பாக எளிமையாக தொண்டர்களிடம் உரையாடிக் கொண்டிருப்பார். பேச்சின் போது இந்த செய்திகள் எல்லாம் வரும். ஆனால் நாம் நினைத்து பார்க்க முடியாத கோணத்தில் இருக்கும்.

அட்டையில் இருக்கும் குறிப்புகளில் கடைசியில் இருப்பது முதலில் வரும். அப்புறம் இடையில் இருப்பது வரும். நூல்களில் படித்த செய்தி வரும். தொண்டர்களின் கருத்து இடம் பெறும். ஆனால் எங்கே எதை முடிச்சிட்டு சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என்பதில் கை தேர்ந்தவர். தன்னை அப்டேட் செய்து கொண்டே இருப்பார். ஒவ்வொரு மேடையிலும் புதிதாக பேச வேண்டும் என்று செயல்படுவார். பேச்சாளராக விருப்பப் படுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி அவர்.

ஜெயலலிதா ஆட்சியின் போது, அவர் மீது நூற்றுக்கும் மேலான அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. வேறு பேச்சாளராக இருந்தால் அதை சொல்லும் போது இயல்பாக கோபப்பட்டு பேசுவார்கள்.

ஆனால் அய்யா வெற்றி அதையே அதகளப்படுத்தி விடுவார். "அது ஒன்னும் இல்ல. நானும் ஜெயலலிதாவும் நேர்ல சந்திச்சிக்கிட்டது கிடையாது. இந்தப் பேச்சு பேசுறானே வெற்றி, எப்டி இருப்பான்னு பாக்கலாம்னு நெனச்சி தான் கேஸ் போட சொன்னது.  ஆனா இந்த காவல்துறை இருக்கே எல்லா ஊர்லயும் கேச போட்டுடுச்சி. அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. இப்போ நாம தான் எல்லா கோர்ட்டுக்கும் இன்ஸ்பெக்‌ஷன் ஆபிசர். ஆமா" என்று இடைவெளி விடுவார். காத்திருக்கும் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும்.

"கோர்ட்டுக்கு ரெகுலரா போறதுனால ஜட்ஜே கோர்ட்டுக்கு என்ன தேவைன்னு நம்ம கிட்ட தான் கோரிக்க வைக்கிறாரு. நான் பேசுனா குறிப்பெடுத்து முதலமைச்சருக்கு போயிடும்னு நெனைக்கிறாங்க". கலாய்ப்பதில் அதன் உச்சத்துக்கே சென்றவர்.

அதே போல தன் பேச்சில், எதிர்கட்சி தலைவர்களுக்கு நேரடியாக கேள்வி போடுவார். அந்தத் தலைவர்கள் அந்தப் பேச்சை கேட்டாலும் அவர்களை அறியாமல் சிரித்து விடும் அளவிற்கு இருக்கும். நகைச்சுவையும் தெறிக்கும், அதே சமயம் வாதப் பொருளும் வலுவாக இருக்கும்.

அதே போல சேம்சைட் கோலும் போடுவார். சமயங்களில் தலைவர் கலைஞரையே வாருவார். " நான் தெரியாம தான் கேட்கிறேன். இப்போ உங்கள யாரு போராட்டம் அறிவிக்க சொன்னது? ஓட்டு போட்டது அந்த ஜனங்க. இப்ப கஷ்டப்படறது அந்த ஜனங்க. அவங்களே அதப் பத்தி கவலப்படல. நீங்க ஏன் கவலப்படறீங்க?". வாருவது போல தான் இருக்கும். ஆனால் அந்த பாணியில் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவார்.

இதுவே வேறு எந்தப் பேச்சாளராவது பேசினால் சிக்கிவிடுவார்கள். தலைவருக்கு எதிர்கருத்தாக அமைந்துவிடும். ஆனால் தலைவரை பற்றி இவர் பேசுவது கைத்தட்டலை அள்ளும். இது தான் அய்யா வெற்றிகொண்டான் பாணி. சில மேடைகளில் தலைவரை வைத்துக் கொண்டு இது போல் பேசி, தலைவரையே குலுங்க குலுங்க சிரிக்க வைத்துவிடுவார்.

1993ல் நடந்த துரோக நடவடிக்கையின் போது, தமிழகம் எங்கும் சுற்றி கழகத்தின் நிலையை வலுப்படுத்தியது இவரது பெரும் பணி. எது குற்றச்சாட்டாக கழகத்தின் மீது வீசப்பட்டதோ, அதையே பிடித்து திருப்பி ஆயுதமாக வீசினார்.

ஆம், அப்போது "தளபதியை தலைவராக்கத் தான் வைகோ நீக்கம்" என அவதூறை அள்ளி வீசினார்கள். உடனே பதிலடி கொடுத்தார் அய்யா வெற்றி. "ஆம். எங்கள் வருங்கால தலைவர் தளபதி ஸ்டாலின் தான். எதிர்காலத்தில் கழகத்தை அவர் தான் வழி நடத்துவார்". 

அவர் சொல் பலித்து விட்டது, அவர் எண்ணம் நிறைவேறிவிட்டது. ஆம், அய்யா வெற்றியின் அளப்பறிய அன்பிற்குரிய தளபதி அவர்கள் செயல் தலைவர் ஆகிவிட்டார். ஆனால் பார்த்து ரசிக்க, அய்யா வெற்றி தான் இல்லை.

இன்று அவரது நினைவு நாள், என்றும் நினைவில் இருப்பார்.

# கழகத் தொண்டர்களின் மனதை வெற்றி கொண்டவர் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக