பிரபலமான இடுகைகள்

புதன், 21 ஆகஸ்ட், 2013

நான் அளித்த ரத்ததானமே என் உயிரை காத்தது....



வினோத் வெளியூர் செல்லும் போது அணியும் டி-சர்ட் "Dial for Blood 94888 48222" என்ற வாசகங்களோடு இருக்கும். அன்று தர்மபுரியில் ரயில் நிலையத்தில் இந்த டி-சர்ட்டை பார்த்த ஒரு இளைஞர் "எல்லாம் காசு சம்பாரிக்கும் ஏமாற்று வேலை" என கமெண்ட் அடிக்க, வினோத் கோபப்படாமல் பத்து நிமிடம் அவருக்கு ரத்த தானத்தின் அவசியத்தையும், உயிர்காக்கும் விதத்தையும் விளக்கி விட்டு ரயிலேறி விட்டார்.

மதியம் சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து ஃபோன். "வினோத், ஒருத்தர் ரத்தம் கொடுக்க வந்தார். முதல்முறை என்றார். நீங்கள் சொன்னதை கேட்டு வந்ததாக சொன்னார். நன்றி." மறுநாள் காலை மற்றொரு ஃபோன்.

"சார், நேத்து தர்மபுரியில் ரயில்வே ஷ்டேசன்ல பார்த்தேனே, நீங்க சொன்னத கேட்டு மனம் மாறி ரத்ததானம் செய்தேன். மாலை உடையாம்பட்டி அருகே எனக்கு பைக் ஆக்சிடெண்ட். ஆப்ரேஷனுக்கு ரத்தம் தேவைப்பட்டிருக்கிறது "O-". எங்கும் கிடைக்காமல் நான் கொடுத்த ரத்தம் தான் என்னையே காப்பாற்றி இருக்கிறது. நினைச்சா பயமாயிருக்கு. நீங்க சொன்னத கேட்டதால் தான் உயிரோடிருக்கிறேன். மிக்க நன்றி"

ரத்த தானம் செய்வதை ஊக்கப்படுத்தி வந்த தர்மபுரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத், Indian Pillars என்ற அமைப்பை துவக்கி ரத்த தானம் செய்வோரை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு அதற்காக 24x7 இயங்கும் கால் செண்டர் துவங்கியிருந்த நேரம்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை. அவருக்கு ரத்தம் தேவை. அவரது ரத்தம் "O bombay" பிரிவு. 15000 பேரில் ஒருவருக்கே இந்த இந்தப் பிரிவு இருக்கும். அன்று விடுமுறை நாள் என்பதால் எங்கு தொடர்பு கொண்டும் கிடைக்காமல் தர்மபுரி Indian Pillars அமைப்பிற்கு தொடர்பு கொள்கிறார்கள்.

மாலை இந்த "O bombay" பிரிவு ரத்தம் கேட்டு அழைப்பு வந்த உடன் தங்களிடம் உள்ள மூன்றரை லட்சம் பேர் கொண்ட data base-ல் தேடி மேட்டூர் அருகே இருந்த ஒருவரை கண்டுபிடித்தனர். அவரை தொடர்பு கொண்டு சேலம் வர செய்து ரத்தம் சேகரித்த போது இரவாகிவிட்டது.

அதற்குள்ளாக அதனை இந்தூர் வரை பாதுகாப்பாக கொண்டு செல்ல கோயம்புத்தூரில் இருந்து icepack box-ஐ வரவழைத்தார்கள். சேலத்திலிருந்து பெங்களூருக்கு தனியார் பேருந்தில் ரூ 900 செலவு செய்து அனுப்பப்பட்டது. அங்கிருந்து இரவே விமானம் மூலம் ரத்தம் இந்தூரை சென்றடைந்தது. ( விமானத்தில் ரத்தம் அனுப்பினால் இலவசம்)

விடியற்காலை வினோத்தின் செல் ஒலிக்கிறது. தூக்கக் கலக்கத்தில் செல்லை எடுத்தால், புரியாத இந்தியில் பேசுகிறார்கள், கடைசியாக சொன்ன "தன்யவாத்" மட்டுமே தெரிந்த வார்த்தை, நன்றி. காலை அங்கிருந்து டாக்டர் தொடர்பு கொண்டு உரிய நேரத்தில் ரத்தம் வந்து சேர்ந்து, இரவே அறுவை சிகிச்சை செய்யப் பட்டதால் நோயாளி காப்பற்றப்பட்டதை சொல்லி, நன்றி சொல்லியிருக்கிறார்.

இந்த சேவை அனைத்தும் இலவசம். யாரிடமும் உதவி கேளாமல் நண்பர்கள் துணையோடே, இந்த உயிர் காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளார் வினோத். "இந்த பாராட்டு, நன்றி போலவே திட்டும்,வசவும் சகஜம் சார். எதுவாக இருந்தாலும் உயிர் காக்கப்பட்டால் போதும் சார்." இது தான் வினோத்.

மற்றொரு நாள், அதே டி-சர்ட் பார்த்து விளக்கம் கேட்ட ஒரு சென்னை கல்லூரி மாணவி தன் விவரங்களை அளித்துள்ளார். அன்று இரவு சென்னையிலிருந்து ரத்தம் கேட்டு அழைப்பு. ரயில் பயணம். முக்கிய எண்களை கொண்ட மற்றொரு செல் சார்ஜ் போய் அணைந்து போய் விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் பையிலிருந்த பேப்பர்களை துழாவுகிறார். அந்தக் கல்லூரி மாணவியின் விபரத்தை பார்த்தால் அதே ரத்த வகை.

செல்லில் தொடர்பு கொண்ட வினோத் விபரத்தை சொல்ல அந்த பெண் உடனே கிளம்ப தயாராகிறார். இரவு மணி 11. துணைக்கு யாராவதை அழைத்து செல்ல சொல்ல, "அம்மா தூங்குகிறார், நான் தனியா போய் கொடுத்துடறேன்" என்கிறார். மனம் கேளாத வினோத் லேண்ட்லைன் நம்பருக்கு தொடர்பு கொள்கிறார். போனை எடுத்த தாயாரிடம் விளக்கினால்,"நீயெல்லாம் அக்கா,தங்கச்சியோடு பிறக்கலையா, இந்த நேரத்தில் எப்படி போவது?"

திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறார். உயிரை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் மீண்டும் போன் செய்கிறார். பத்து நிமிடம் திட்டி தீர்த்து, வினோத் பேசியதை கேட்டு மனம் மாறி அவரே மகளை அழைத்து சென்று ரத்த தானம் செய்கிறார். இப்போது அவர்கள் ரெகுலராக ரத்த தானம் செய்கிறார்கள் மனம் உவந்து. 





ரத்த தானத்திற்கான கால்செண்டர் துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஜூன் 14 , காரணம் அன்று உலக ரத்ததான தினம். எதேச்சையாக அதுதான் வினோத்தின் பிறந்ததினமும். ரத்ததானத்திற்காகவே பிறந்திருப்பார் போலும்... சொந்த வேலையை பார்க்காமல், சம்பாரிப்பதையும் செலவு செய்து இப்படி பொதுப் பணியாக இருக்கிறாரே என்ற பெற்றோர் கோபத்திலும் பணியை தொடர்கிறார்.

கல்லூரி விடுமுறை என்றால் ரத்ததானம் குறைவாக இருக்குமாம். ஜூன் மாதம் Indian Pillarsஐ தொடர்பு கொண்டு 100 முகாம் நடத்தி ரத்தம் திரட்டி கொடுக்க கேட்கிறார்கள். டீம் களத்தில் இறங்கியது. இந்தியா முழுதும் தொடர்பு கொள்கிறார்கள். போன் மூலம் பேசியே முகாம் நடத்த இடம் ஏற்பாடாகிறது. முகநூல் மூலம் ரத்ததான முகாம் செய்தி பகிரப்படுகிறது. பேப்பர் விளம்பரமோ, பிட் நோட்டீஸோ கிடையாது. ஜூலை 5 அன்று இந்தியா முழுதும் 400 முகாம் நடத்தப்பட்டு 11,500 யூனிட் ரத்தம் திரட்டப் பட்டிருக்கிறது. மிகப் பெரிய சாதனை.

உடன் படித்த நண்பர் பாலாஜி, உறுதுணையாக இருக்கும் நண்பர் தாஜுதீன், பணிகளை பார்த்து தானாக உதவிட முன்வந்த அரசு பணியிலிருக்கும் பொறியாளர் சிவக்குமார், அவரது துணைவியார் வங்கி மேலாளர் பாமா என கோர் டீம். தர்மபுரி எம்.எல்.ஏ பாஸ்கர் இவர்கள் பணிக்கு ஆதரவு. பிரதிபலன் பாராமல் உதவிடும் வாலண்டியர்களாக, படித்த, பணியிலிருக்கும் இளைஞர்கள் என ஒரு படையின் உழைப்பாக இந்த உயிர்காக்கும் சாதனை.

இந்தியாவின் எந்த மூலையில் ரத்தம் வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்க Indian Pillars Call Centre : 94888 48222.

இவர்களின் தர்மபுரி அலுவலகம் சென்று வந்தேன். இவர்களின் ஒரே கோரிக்கை அரசு ஒரு டோல் ஃபிரீ எண் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்தால், இன்னும் பல மடங்கு பணி விரிவடையும்.

# உயிர்காக்கும் பணியில் நம் பங்கும் ஒரு துளி இருக்கட்டும். Indian Pillars பக்கத்தை like செய்யுங்கள் ! 

https://www.facebook.com/IndianPillarsOfficial

இவர்களது இணையதள முகவரி http://www.iblood.in/ உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்

சனி, 10 ஆகஸ்ட், 2013

தலைவா - சிச்சுவேஷன் சாங்.... வணக்கங்கண்ணா !



வாங்கண்ணா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுஙகண்ணா 
நா ஒலரல ஒலரலண்ணா ரொம்ப பீலிங் பீலிங்குண்ணா ஹே ஆணாணா ஊணாணா “அம்மா” தேடி போவ 
நீ வேணான்னு போனாணா நீ தேவதாசா ஆவ
அவங்க லேட்டா தானா டாட்டா சொல்வாங்க பின்னால போவாத

லைப் ஒரு போட்டுங்கண்ணா ஷேப்டியா ஒட்டுங்கண்ணா
“அரசியல்ல” மாட்டிகிட்டா சேத்துல சிக்கிடும்ணா
ஹிட்லரு டார்ச்சர் எல்லாம் ஹிஸ்டரி பேசுதண்ணா
அம்மா டார்ச்சர் எல்லாம் யாருமே பேசலண்ணா...

“அரசியல், சினிமா” போததான் மூணு ஹௌரில் போகும்தான்
ஹஸ்கி வாய்ஸ் பேசுவாங்க போத தந்த மோகந்தான்
அப்படி விழுந்த நா எழுந்திட மாட்டேனா..

ம் “எலக்ஷன்” “மீட்டிங்னு” கூட்டிட்டு போவாங்கண்ணா
ஆக்டிங் ஆக்டிங்ணா ஐயோ ஆஸ்காரு ஆக்டிங்குணா
வணக்கமும் சொல்லிடுவாங்க எஸ்கேப்பு ஆகிடுண்ணா
வண்டில் ஏத்திடுவாங்க டெட் எண்டு பாத்துக்கணா

“பிரச்சாரத்தில்” நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ
கண்ண தொறக்கும் போது தான் “படத்த” நீயும் தேடுவ
பட்டத சொல்லுறேன் “அம்மாவே” வேணாணா...

ஹே ஆணாணா ஊணாணா “அம்மா” தேடி போவ
நீ வேணான்னு போனாணா நீ தேவதாசா ஆவ
அவங்க லேட்டா தானா Bye Bye சொல்வாங்க பின்னால Do Not Go...

ஹே ஊதிக்க ஊதிக்க ஊதிக்கண்ணா
மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா
“ரிலீஸும், கொட நாடும்” சேந்துச்சுண்ணா
கொட்டுது “அரசியல்” தத்துவந்தான்....

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

லப்பைக்குடிகாடு தான், “கேட் வே ஆப் இந்தியா”...

எங்கள் குன்னம் தொகுதியின் ஒரே பேரூர் “லப்பைக்குடிக்காடு”.

முழுதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி. இந்த ஊரை அரபு நாடுகளின் "மினியேச்சர்" என்றே சொல்லாம். காரணம் வீட்டுக்கு ஒருவர் அரபு நாடுகளில் பணியில் இருப்பார்கள், அதே போல வெளிநாட்டு பொருட்கள் எளிதாக, உண்மையானதாக கிடைக்கும் என்பதாலும். 

பணிபுரிய செல்பவர்கள் அந்தந்த நாட்டின் குடிமகன்கள் போலவே ஆகிவிடுவார்கள். ஆனால் வருடம் ஒரு முறை ஊர் வந்து தங்கள் பங்களிப்பை செய்ய தவறமாட்டார்கள், வீட்டுக்கு மட்டுமல்ல, ஊருக்கும்.

சுற்றிலும் இருக்கும் பல ஊர்களிலில் இருந்தும், பலரும் இதே போன்று அரபு நாடுகளிலேயே பணியாற்றுகிறார்கள். அதன் காரணமாக அந்த ஊர்களின் தோற்றமே மாறி வருகிறது. 

எங்கள் பகுதிக்கு லப்பைக்குடிகாடு தான், கிட்டத்தட்ட “கேட் வே ஆப் இந்தியா”. காரணம் சுற்றிலும் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த ஊரில் இருக்கும் ஏஜெண்ட்கள் மூலமாக வெளிநாடு சென்றிருப்பார்கள், அல்லது சென்றவர்கள் மூலமாக சென்றிருப்பார்கள்.

இந்த ஊர் பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையில் கடைகோடியில் இருக்கிறது. வெள்ளாற்றின் கரையில் இருக்கிறது. ஒரு கிலோ மீட்டரில் அக்கரை கடலூர் மாவட்டம். கிழக்கே பத்து கிலோமீட்டரில் அரியலூர் மாவட்டம். மேற்கே பதினைந்து கிலோமீட்டரில் சேலம் மாவட்டம். 

ஒரு தீவு போல சுற்றி பல்வேறு சமூகத்தவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கிடையே தான் இந்த ஊர் அமைந்திருக்கிறது. இது வரை மதப்பிரச்சினை என்பது இந்தப் பகுதியில் கிடையாது, காரணம் அனைவரிடமும் தாயாய் பிள்ளையாய் பழகுபவர்கள். 

இந்த நல்லிணக்கத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் நடந்த போதும் அத்தனையும் முறியடிக்கப்பட்டு இன்றும் அதே அன்பு தொடர்கிறது. தொடரும்...

ரம்ஜான் பிரியாணி இந்த ஊரில் தயாராகிறது என்றால் சுற்றுப்பட்டு கிராமங்களில் மணக்கும், விருந்தாய் மலரும்....

# சூடான பிரியாணி சூப்பர்



வியாழன், 8 ஆகஸ்ட், 2013

மக்கள் பிரச்சினைக்கு காது கொடுக்க முடியாத...

குன்னம் தொகுதி, செந்துறை நகரை சுற்றியுள்ள பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், செந்துறை நகருக்கு வருவதற்கு பயன்படுத்தும் பாதை ரயில்வேதுறைக்கு சொந்தமானது. 

செந்துறை ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் கீழ்பகுதியே இப்படி பாதையாக பயன்பட்டது. இதன் வழியாக தான் இருசக்கர வாகனங்கள், கார் போன்றவை சென்று வருகின்றன.

செந்துறையில் உள்ள தாலுக்கா அலுவலகம், காவல் நிலையம், மருத்துவமனை போன்றவற்றிற்கு வருவதற்கும், ரெயில் நிலையத்திற்கு வருவதற்கும், கடைவீதிக்கு வருவதற்கும் காலம்காலமாக பயன்படுத்தும் பாதை இது. 

தற்போது இரண்டாவது இருப்புப்பாதை அமைக்கிற நேரத்தில் அந்த பாதையை மறிக்கிற விதமாக புதிய பாலம் கட்டுகிறார்கள். இந்த பாதை தடைபட்டால் ஆறு கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை வரும். அஃதில்லாமல் அந்த சாலையில் உள்ள ரயில்வே கேட்டால் தடைபட்டு வரும் சூழலும் ஏற்படும்.

ஏற்கனவே இருக்கிற பாலம் போலவே பாதைக்கு தடை இல்லாமல், புதிய பாலம் அமைக்க வேண்டும் என்பது தான் பொதுமக்கள் கோரிக்கை. 

இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள ரயில்வேகேட்டை எடுத்துவிட்டு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இப்படி செய்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். டிராக்டர், லாரி போன்றவை செல்ல முடியாத நிலை ஏற்படும்.

நக்கம்பாடி கிராமத்தில் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 60 பேருக்கான முதியோர் உதவித் தொகை திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. 

இவற்றையெல்லாம் கண்டித்து, ரயில்வே நிர்வாகமும் வருவாய்துறையும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒன்றிய தி.மு.க சார்பில் செந்துறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. கிராம பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

ஒன்றிய கழகச் செயலாளர் ஞானமூர்த்தி, மு.ஒ.செ செல்லக்கண்ணு, சொற்பொழிவாளர் பெருநற்கிள்ளி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். நான் தலைமையேற்று உண்ணாநிலையில் பங்கேற்றேன்.


ரயிவே துறை போன்றவை மக்கள் நலனுக்காகவே இயங்குபவை. அவர்களே மக்கள் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக இது போன்ற நடவடிக்கைகள் தான் அரசு அலுவலர்கள் மீது மக்களின் வெறுப்பாக மாறுகிறது.


புதன், 7 ஆகஸ்ட், 2013

ஒரே இரவில் இடது கையால் கையெழுத்திட ....

பொதுக்கூட்ட மேடை. கூட்டப் பதிவேட்டை கையொப்பத்திற்காக கொடுத்தார்கள். பேச்சாளர் அண்ணன் இறைவனிடம் கொடுத்தேன் கையொப்பமிட. வாங்கியவர் வித்தியாசமான கோணத்தில் திருப்பினார். இடது கையால் கையொப்பமிட்டார்.

இடது கையால் கையொப்பமிட்டது சரி, ஆனால் நோட்டை திருப்பிப் பிடித்த விதம் வித்தியாசமாக இருந்தது. “ அண்ணா, நீங்க இடது கையாலவா முன்னாடி கையெழுத்து போட்டீங்க ?”. இல்லை. இப்போ தான் மாறினேன். “ எவ்வளவு நாள்ல மாத்துனீங்க ?.ஒரே இரவில்...



***************************

பெயர் தான் இறைவன். ஆனால் ஊர் ஈரோடு, பகுத்தறிவாளர். தி.மு.க பேச்சாளர் என்பதை தாண்டி கவிஞர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர். கவிதை, நாவல், சிறுகதை என 13 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

இவர் தந்தை பெயர் கைவல்யம். பெரியாரிஸ்ட். ராமசாமி நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றியவர். தான் மறைவுற்றால் எந்த சடங்கு, சம்பிரதாயமுமின்றி தனது இறுதி நிகழ்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் என உறுதிபட கூறியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பெரியவர் கைவல்யம் மறைந்த போது, நெற்றியில் காசு கூட வைக்கப்படாமல் எந்த சடங்குகளுமின்றி இறுதி மரியாதை செய்யப்பட்டது. அப்படிப்பட்டவர் எப்படி இறைவன்னு பெயர் வைத்தார் ?

திருக்குறள் பற்றாளர். அதில் தலைவனை குறிக்க பயன்படுத்தப்படும் இறைவனை தனது மகனுக்கு பெயர் சூட்டியவர், பெயரப் பிள்ளைகளுக்கு “குழலினிது, யாழினிது குறளை ஒட்டி யாழினியன், குழலினியன் என பெயர் சூட்டினார்.

***********************


“ ஒரே இரவிலா, ஏன் ?. “ 12 புத்தகங்கள் வரை வலது கையால் தான் எழுதி வெளியிட்டேன். திடீரென எழுத்துக்கள் கிறுக்கலாக ஆரம்பித்தது. கை கட்டுப்படவில்லை. டாக்டரிடம் காட்டினேன். கையிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு செயலிழந்ததால் என்று சொன்னார்கள்

வலது கையால் எழுதிக்காட்டினார். இ.சி.ஜி யில் வருவது போல பேனா மேலும் கீழுமாக அவர் கைக்கு கட்டுபடாமல் போனது. கோடு போட்ட தாளில் ஒரு வரிக்குள் எழுத வேண்டியதை நான்கு வரியில் எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படி பெரிய எழுத்துக்களாக வந்தது.

“ இதற்கு மருத்துவம் இல்லையா ? “ ரூபாய் பதினைந்தாயிரம் மதிப்புள்ள ஊசி ஆறு மாதத்திற்கு ஒன்று போட வேண்டுமாம். அப்படிப்பட்ட மருந்தின் side effect-ஐ நினைத்து பார்த்து, வேண்டாம் என முடிவெடுத்தேன்.

“ ஒரே இரவில் இடது கையால் எழுத பயிற்சி எடுத்து, எழுத ஆரம்பித்துவிட்டேன். மூன்று வருடங்களாகிவிட்டது. இப்போ 9 புத்தகங்கள் எழுதி வெளியிட தயாராக உள்ளது. நான்கு திரைப்பாடல்களும் எழுதிவிட்டேன்

“ உங்க முயற்சியும்,மனதைரியமும் பாராட்டுக்குரியது அண்ணா” 
அப்பா கொடுத்த பகுத்தறிவு தான் அத்தனைக்கும் காரணம்.




# ஈரோட்டு இறைவனின் எழுத்துக்கள் தேர் ஏறட்டும், உலகை பவனி வர...

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

யோவ் அவன் யாருய்யா ஜீவா ?

" யோவ் பிஏ, இவன் எனக்கு வேண்டப்பட்டவன்யா. இவனுக்கு டிபாட்மெண்ட்டுல்ல ஒரு வேல போட்டுத் தரனும். ஏற்பாடு பண்ணுய்யா"

" அமைச்சர் சாருக்கு தெரியாதது இருக்காது. வேகன்ஸி வரும் போது இண்டர்வியு கால்ஃபர் ஆகும். அப்போ வாய்ப்பு இருந்தா பண்ணிரலாம் சார்"

" யோவ், இன்னாயா நீ. மினிஸ்டரு நானே சொல்றன். போட்டுவுடுய்யா. இன்னா பிராப்லம் வந்தாலும் பாத்துக்குலாம்"

" இல்ல சார். அதுக்கு ஜீவோ இடம் கொடுக்காது சார்"

" இன்னாயா மினிஸ்டர் பெருசா, ஜீவா பெருசா ?"

"சரிங்க சார் நான் கன்ஸல்ட் பண்ணிட்டு சொல்றேன்"

**************************

" யோவ் பிஏ, இவன் நம்ம தீவிரக் கட்சிக்காரன்யா. எனக்கு எலக்சன் வேல பயங்கரமா பண்ணவன். இவனுக்கு ஒரு கான்றாட் வேணுமாம். அத அந்த ஆபிசருட்ட சொல்லி முடிக்க சொல்லுய்யா"

" சார், டெண்டர்ல போட்டிக்கு வர்றவங்கள இவரே சமாதானம் பண்ணி தான் சார் எடுக்கனும். நேரா கொடுக்க முடியாது சார்"

" யோவ் நான் சொன்னன்னு சொல்லுய்யா. டெண்டர்லாம் வைக்க வேணாம்யா"

" சார், ஜீவோ ஒத்துக்காதுங்க சார்"

" யோவ் நீ மினிஸ்டர் பேச்ச கேப்பியா, ஜீவா பேச்ச கேப்பியா"

*************************

" யோவ் பிஏ, இவுரு நம்ம ஆளுய்யா. கலிக்டர்ட சொல்லி இவுருக்கு அங்கறருந்து இங்க டிரான்சர் போட சொல்லுய்யா"

" மூனு வருசம் ஆனாதான் டிரான்ஸ்பர் போட முடியும்னு ஜீவோ சொல்லுதுங்க சார்"

" யோவ் அவன் யாருய்யா ஜீவா. அப்ப சொல்லி என் கைலயே கிராஸ் ஆவுரான். கூப்புடுய்யா அவன. அவம் பெரிய ஆளா மினிஸ்டரு பெரிய ஆளா பாத்துறலாம்"

" சார், ஜீவா இல்ல சார். ஜீவோ"

" யோவ் ஜீவாவோ, ஜீவோவோ. இடம் குடுக்காதுங்கற, ஒத்துக்காதுங்கற, சொல்லுதுங்கற. இன்னா விளாட்றியா ?"

" சார் ஜீவோன்னா கவர்மெண்ட் ஆர்டர் சார்"

" யோவ் சி.எம் சொன்னாதான் கெவுருமெண்ட்டு ஆர்டர்யா. சி.எம்மெடோ பெரிய ஆளா ? இரு அம்மா கிட்ட கம்ப்ளெயிண்டு சொன்னா தான் சரியா வருவீங்க"

# " யோவ் கெவுருமெண்டே "முக்கூர்ல" நிக்குதுய்யா...

இடது கால் துண்டிக்கப்பட்டு....

திட்டக்குடி பார்டர் அருகே வயலூர். அங்கு கோவிலில் இருந்த கல் தூணை பிடித்துத் தொங்கி விளையாடுகிறான் அந்த சிறுவன். அந்த தூண் அவன் கால் மீது சரிகிறது. இடது கால் முட்டிக்கு கீழ் சிதைந்து போகிறது. சிகிச்சையில் கால் துண்டிக்கப்படுகிறது. மூன்றாண்டுகள் கடந்து விட்டது. இப்போது ஏழாம  வகுப்பு படிக்கிறான்.


விக்கிரமங்கலத்தை சேர்ந்த விவசாயி. விவசாய வேலைகளில் ஈடுபட்ட போது மின்சார வயர்களை சரி செய்கிறார். எதிர்பாராத ஷாக். தூக்கியடிக்கப் படுகிறார். இரண்டு கைகளும் துண்டிக்கப்படுகிறது.
பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர் இரண்டு சக்கர வாகனத்தில் செல்கிறார். எதிரில் வந்த வாகனம் மோதி தூக்கி எறிகிறது. நினைவு வரும் போது, வலது கால் துண்டிக்கப் பட்டிருக்கிறது.

அய்ந்தாம் வகுப்பு படிக்கும் சினேகா, சின்ன வயதில் காலில் குத்திய முள்ளால் சீழ் பிடித்து வலது கால் துண்டிக்கப் பட்டுவிட்ட்து. வாடிப் போன ரோஜாவாக இருக்கிறது அந்தக் குழந்தை.

இதே போன்று கை, கால் இழ்ந்து முகாமுக்கு வந்தவர்கள் 52 பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு சோகக் கதை. கை, கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை,கால் வழங்க கண்டறியும் முகாம் நேற்று குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த போது தான் இவர்களை சந்தித்தோம்.






தஞ்சை மாவட்டத்தில் கருப்பூர் அருகே இருக்கும் தஞ்சாவூர் பவர் கம்பெனி மின் உற்பத்தி செய்கிறது. அவர்கள் மக்கள் சேவைக்காக அமைத்துள்ள லேன்கோ பவுண்டேஷன் மூலமாக இந்த செயற்கை கை,கால்களை இலவசமாக வழங்குகிறார்கள்.

நான்கு நாட்கள் வாகனம் மூலம் முகாம் குறித்து விளம்பரம் செய்து, கிராமங்கலிலுள்ள கழக நிர்வாகிகள் மூலம் தேவையானவர்களை கண்டறிந்து முகாமுக்கு வரவழைத்தோம்.




லேன்கோவை சேர்ந்த ஜெகன், குமார் ஆகியோர் சுறுசுறுப்பாக பணியாற்றி அளவு எடுத்தனர். காலை 9.00மணி முதல் மாலை 3.30 வரை பணி முடித்தே உணவருந்தினார்கள். 45 நாட்களில் செயற்கை கை,கால்கள் தயாரிக்கப் பட்டு வழங்கப்படும்.

நாங்களும் மாலை வரை இருந்து முகாமை நடத்தினோம். மன நிறைவான பணி. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்ததிலிருந்து அங்கு நடைபெற்ற நல்லதொரு சமூகப்பணி இதுவாகத் தான் இருக்கும்.

இந்த முகாமை நடத்த எனக்கு எண்ணம் ஏற்படுத்தியவர் தஞ்சாவூர் பவர் கம்பெனியில் பணிபுரியும் என் கல்லூரி நண்பர் செல்வம். 

நிகழ்வு முடிந்து கிளம்பும் போது தன் மனைவியுடன் வந்திருந்த கால் இழந்த முதிய இஸ்லாமியர் அருகில் வந்தார், கைக்கூப்பி நல்லா இருப்பீங்கஎன்றார்.




#
லேன்கோ போன்ற நிறுவனங்கள் நல்லா இருக்கனும் !