பிரபலமான இடுகைகள்

சனி, 17 நவம்பர், 2012

சாட்டை – நல்ல ஆசிரியரின் பிரம்பு...

சாட்டை – நல்ல ஆசிரியரின் பிரம்பு...

சட்டமன்ற உறுப்பினர் சினிமாவை பற்றி எழுதுவதா என பதற வேண்டாம். சமூகத்திற்கு அவசியமான கருத்துகள் கொண்ட படம் எனக் கேள்விப்பட்டு பார்க்க முயற்சித்தேன்.

ஒரு நாள் இத்திரைப்படத்தின் இயக்குநருக்கு பாராட்டுவிழா என சுவரொட்டி பார்த்தேன். இயக்குநர் அன்பழகன், எங்கள் தொகுதியின் மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என்று அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.

எங்கள் பகுதியிலிருந்து முதல் திரைப்பட இயக்குநர் என்பது முக்கிய செய்தி. அதிலும் முதல் படத்தில் சிறந்த இயக்குநராக பரிணமித்துள்ளார். படத்தைப் பார்க்க முனைந்தேன். தண்டையார்பேட்டையில் தான் பார்க்க முடிந்தது.

அழுத்தமானக் கருத்துகளை திருத்தமாக படமெடுத்துள்ளார். கமர்ஷியல் ஹிட் குறித்து கவலைக் கொள்ளாமல், முதல் படமாக இந்தக் கதையை எடுக்க துணிந்தமைக்கு இயக்குநர் அன்பழகனுக்கு பாராட்டுக்கள். தயாரிப்பாளர் பிரபு சாலமனையும் வாழ்த்த வேண்டும்.

படம் துவக்கத்திலேயே ஜெட் வேகத்தில் கிளம்புகிறது. மாறுதலில் வரும் ஆசிரியர் தயாளன், பள்ளியில் நுழையும் போதே, அவர் பார்வையிலேயே அரசு பள்ளியின் அவலங்களை பட்டியலிடுவது அருமை, அதுவும் சில காட்சிகளிலேயே.

சிங்கப்பெருமாளின் ஆதிக்கத்தை பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட்டுள்ள வட்டி அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்துவது அழுத்தமான பதிவு. இதை போன்று ஆசிரியர்கள் பலர் உள்ளனர்.

ஆசிரியர் கூட்டத்தில் நடைபெறும் அரசியல் மிகையாகத் தோன்றினாலும் அது முற்றிலும் நடைமுறை உண்மையே. சிங்கப்பெருமாளின் ஆதிக்கம் தகருகையில் ‘சாக்ஸ்பறந்து மரத்தில் தொங்குவது நல்ல இடுகுறி காட்சி.

ஆசிரியர்கள் மீது குற்றங்களாக அடுக்காமல், அதனை களைவதற்கான வழிமுறைகளை சொல்லுவது பாஸிடிவ் அப்ரோச். தயாளன் வகுப்புக்குள் நுழைவதிலிருந்தே இது துவங்குகிறது.

தான் நினைத்ததை மட்டும் திணிக்காமல், மாணவர்களிடம் ஆலோசனைக் கேட்கும் ‘ஆலோசனை பெட்டி நல்ல உத்தி. ஆலோசனைகளையும் விளக்கிக் கொண்டிராமல், cut shots-ல் சொல்வது ‘நச்’.

கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் அவசியம் என்பதை நேரடியாக உணர்ந்த கிராமப்புற மாணவர், இயக்குனர் என்பதால் அனுபவப்பூர்வமானக் காட்சிகள்.



மாணவர்கள் மற்ற ஆசிரியர்களால், தண்டிக்கப்படும் போது அதனை பக்குவமாகக் கையாளக் கற்றுக் கொடுப்பது சிறப்பு, உதாரணம்- பெண்கள் கழிப்பறையை எட்டிப் பார்த்த மாணவன்.  

வறட்டு அறிவுரையாக இல்லாமல், “ உன்னை மாதிரி தான் நானும் என பழனியிடம் இயல்பாக பேசுகிறக் காட்சியில் தயா பாத்திரம் விஸ்வருபம் எடுக்கிறது.

சமுத்திரக்கனி ஆசிரியர் தயா-வாக மிகக் கச்சிதம். நவீன யுகத்தின் ஆசிரியராக மிடுக்கான உடை, அழுத்தமான உடல் மொழி, தீர்க்கமானப் பார்வை, ஈர்க்கின்ற குரல் என நம்மை பாதிக்கிறார். ஆசிரியர் தயாளனாகவே வாழ்ந்திருக்கிறார்.



அடடா, சிங்கப்பெருமாளாக தம்பிராமையா, பலே. அந்த நக்கல் பார்வையும், எகத்தாளப் பேச்சும் பிச்சு உதறுகிறார். இடைவேளை விடும் நேரம் பள்ளிபடிக்கட்டில் துள்ளி ஏறும் லாகவம். “ தெங்க் யூ என்ற ஸ்டைலான  டையலாக் டெலிவரி. படத்தின் இன்னொரு கதாநாயகன்.

கிராமத்துப் பெண் அறிவழகியாக மகிமா, சிறு முகச்சுளிப்புகள், வெடுக் பேச்சு என ஸ்கோர் செய்து, பாலியல் கொடுமைக்கு ஆளானதை சொல்லும் காட்சி, பழனியிடம் காதலை சொல்லும் காட்சிகளில் மிளிர்கிறார்.

பழனியாக பதின் வயது மாணவனின் உணர்வுகளை முரட்டுத்தனமாக பிரதிபலிக்கிறார் யுவன். தலைமை ஆசிரியராக நடிக்கும் ஜூனியர் பாலையாவுக்கு இது தான் முதல் படம் திறமையை வெளிப்படுத்த.

இசை இமான், தேவையான இடங்களில் தேவைப்பட்டதை கொடுத்திருக்கிறார். சிங்கப்பெருமாள் வரும் காட்சிகளில் நகைச்சுவையான இசை, தயாளன் காட்சிகளுக்கு எழுச்சியான இசை, காதல் காட்சிகளுக்கு மனதை வருடும் இசை என வாய்ப்பு கிடைத்த இடங்களில் ஃபோர் அடித்தவர், “ ராங்கி ராங்கி”,” சகாயனே பாடல்களில் சிக்ஸர் அடிக்கிறார். "சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்" என யுகபாரதி பாடல்வரிகளில் முளைத்து மலர்கிறார்.

“ போட்டியில் தோற்பது வெட்கம்தான், ஆனால் வெளியில் உட்கார்ந்து விமர்சனம் பேசுவது அதைவிட வெட்கமானது”,   ஏணிய கூறை மேல போடாதீங்க, வானத்தை நோக்கி போட்டு ஏறுங்க “ என கூர்மையான வசனங்கள்.


படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கிறார்கள். அடி வாங்கினாலும் மகிழ்ச்சியாக இருக்கும் மாணவன் புளிமூட்டை முருகன், அறிவழகியின் பென்ச் தோழி, புத்தகத்தை தலைகீழாய் படிக்கும் திக்குவாய் மாணவி என அடுக்கலாம்.

சிங்கப்பெருமாளின் ஜால்ராக்களான சுரைக்காய் வாத்தியார், செவிட்டு மெஷின் வாத்தியார், சத்துணவு அமைப்பாளர், ஒவ்வொரு காட்சியிலும் முறைப்பை வெளிப்படுத்தும் பி.டி.ஆசிரியை.

ஒரிருக் காட்சிகளிலே வரும் காவல்துறை SI, அறிவழகியின் அப்பா, அம்மா, அண்ணன், மாமா என அனைவருக்கும் முத்திரை பதிக்க வாய்ப்பு. இயக்குநர் உழைப்பு தெரிகிறது.

சமுத்திரக்கனியின் மனைவியாக முன்னணி கதாநாயகியை போட்டு, பாடல் காட்சிகளை வைத்து சோதிக்காத இயக்குநருக்கு வணக்கம்.

தயாளனின் ஹீரோயிசத்தை வெளிப்படுத்த வாய்ப்புகள் இருந்தும், அடக்கி வாசித்திருப்பது சிறப்பு. சிங்கப்பெருமாளை மூடிய கதவுக்குப் பின் கையாள்வதாக காட்டியதும் பாராட்டுக்குரியது.

கிளைமாக்ஸ் காட்சிகள் சற்றே நாடகத் தன்மையாகத் தோன்றினாலும், வேறு காட்சி சித்தரிப்புகளுக்கு வழியில்லை. ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே காட்சிகள் அமைந்துள்ளன.

பாடல்காட்சியில், இளையராஜா படம் தாங்கிய பாட்டுப்புத்தகம் இயக்குநரின் இசை ஆர்வத்தையும், “ குற்றம் சொல்லும்போது தேவையில்லாமல் ஏன் ஜாதிய சொல்றீங்க “ எனும் வசனம் இயக்குநரின் மனவலியையும், அடிப்பட்டு வரும் சிங்கப்பெருமாள்  கோழியின் முனகலை கேட்டு சிலுப்புவது இயக்குநரின் ரசனையையும் சொல்கிறது.

இப்படி ஒவ்வொரு காட்சியையும் விவரித்து கொண்டே செல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியும் மேம்போக்காக இல்லாமல், பார்த்து பார்த்து செதுக்கப்பட்டிருக்கின்றன.

சற்று பிசகினாலும் பிரச்சார நெடி வந்துவிடக் கூடியக் கதை. ஆனால் மிக ஜாக்கிரதையாக பள்ளி பிரச்சினையை சரியான தீர்வுகளோடு, காதலையும் நகைச்சுவையையும் கலந்து, தேர்ந்த நடிப்போடும் சுருக் வசனங்களோடும் கொடுத்திருப்பது இயக்குநரின் திறமை.



ஆய்வு செய்து, பி.எச்.டி-க்கு கட்டுரை சமர்பிக்கிற அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கம். நிச்சயம் இந்தக் கதை, இயக்குநரின் மனதில் நீண்ட வருடங்களாக ஊறி ஊறி, வடிவெடுத்ததாக இருக்க வேண்டும். கதை இயக்குநருக்குள் வாழ்ந்திருக்கிறது, இயக்குநர் கதைக்குள் வாழ்ந்திருக்கிறார்.

அழகிய வண்ணப் பட்டுச் சேலையை நெய்யும் லாகவத்துடன் எல்லோரையும், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து படத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். இயக்குநரின் படம்.

இது ஆசிரியர்களுக்கான படம் மட்டுமல்ல. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மொத்தத்தில் சமூகத்திறகான படம் மற்றும் பாடம்.

ஜாக்கிசான் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, தியேட்டர் கேட்டில் ஏறி தாண்டுவது போல, ரஜினி படம் பார்த்து விட்டு வரும் போது தலைமுடியை கோதுவது போல, இந்தப் படம் முடிந்து வெளி வரும் போது, நம்மை அறியாமல் சமுத்திரக்கனியை போல தீர்க்கமானப் பார்வையோடு, நிதான நடை நடக்க வைப்பது தான் படத்தின், இயக்குநரின் வெற்றி.

# இயக்குநர் அன்பழகனுக்கு “ நல்லாசிரியர் விருது  !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக