பிரபலமான இடுகைகள்

வியாழன், 8 நவம்பர், 2012

நூறாண்டு கண்ட கழக இளைஞர் !


கழகத்தில் ஒன்றிய செயலாளர் என்ற பொறுப்பு ஏற்படுத்தப் பட்ட போது, அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தின் முதல் ஒன்றிய கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு. மு.கந்தசாமி. தொடர்ந்து நான்கு முறை ஒ.செ-வாக பணியாற்றியவர்.

6.10.2012 அன்று நூறாவது பிறந்தநாளை கொண்டாடினார். 1913 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனால் இன்றைக்கும் இளைஞராக செயல்படுபவர்...


பள்ளிப்பருவத்திலேயே அரசியல் மீது ஆர்வம் திரும்பியது. பெரியார் பாதையை ஏற்றார்.

வீட்டில் திருமணப் பேச்சுதுவங்கியதும், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தார், “தனது திருமணம் சுயமரியாதை திருமணமாக இருக்க வேண்டும் .

அதன்படி 1936 ஆம் ஆண்டு, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வேதாச்சலனார் தலைமையில் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது. சுயமரியாதை திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவிய நேரம் அது.

1943 ஆம் ஆண்டு பெரியாரை அழைத்து வந்து, பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரமாக 51 பேர் பங்கேற்ற “ தீமிதிப்பு “ நிகழ்ச்சியை நடத்தினார். அதில் கரகம் சுமந்து, பகுத்தறிவு பூசாரியாக தலைமையேற்றார்.

1948 ஆம் ஆண்டு சொந்தமாக வீடு கட்டிய போது, முகப்பில் தந்தைப் பெரியார் படத்தை வரைந்து, “ திராவிடநாடு திராவிடருக்கே; தமிழ் வெல்க என்ற முழக்கத்தை செதுக்கியுள்ளார்.

அரியலூர் மாவட்டம், நக்கம்பாடி என்னும் கிராமத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினராக தனது பொது வாழ்வை துவக்கியவர். மூன்று முறை ஊராட்சி மன்ற உறுப்பினர். தொடர்ந்து மூன்று முறை ஊராட்சி மன்ற தலைவர்.

40 ஆண்டுகளாக, இன்றும் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர். அதன் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருபவர்.

இன்றும் கழக நிகழ்ச்சி என்றால் ஆர்வத்தோடு பங்கேற்பவர், அது பொதுக்கூட்டம் என்றாலும், போராட்டம் என்றாலும். நேற்று உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் முதல் நபராக வந்து பெற்றுக் கொண்டார்.





நூறாவது பிறந்த நாளை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்துக் கொண்டாடினார்.கழகத் தோழர்கள் கலந்துக் கொண்டு, அவரது கழகப் பணிக்கு நன்றி தெரிவித்தோம். வாழ்த்தினோம்.

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு படிகளில் இறங்கும் பொழுது, தோழர்கள் அவரைப் பார்த்து, “ சாக்கிரதை, மெதுவாக இறங்கவும் என பதட்ட்த்தோடு சொல்ல,

“ பயப்படாதீர்கள், எதற்கு பயப்படுகிறீர்கள் ? “ என்று சொல்லிவிட்டு கையை உயர்த்தி ஓங்கிய குரலில் பாட ஆரம்பித்தார், (நிஜமாகவே) .... (  படத்தை காணவும் )




# அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...
    ஆறிலும் சாவு, நூறிலும் சாவு; தாயகம் காப்பது கடமையடா....



1 கருத்து:

  1. உண்மையிலேயே வாழ்த்த வயதில்லை என்பது கந்தசாமி அய்யாவுக்குத்தான் பொருந்தும். வணங்குகிறோம் அய்யா

    பதிலளிநீக்கு