தி.மு.க சார்பாக சேது சமுத்திரத்திட்டம் குறித்து விவாதிக்கக் கோரப்பட்டது. ஆனால் சபா அனுமதிக்க மறுத்தார். இது தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினை, துவக்கப்பட்டு, முடிவுறும் நிலையில் தடைபோடுவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்று குரல் எழுப்பினார் அண்ணன் துரைமுருகன்.
சபா தொடர்ந்து மறுக்க தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றோம், இணைந்து குரல் கொடுத்தோம். அண்ணன் துரைமுருகனை பார்த்து சபா உட்காருங்கள், உட்காருங்கள் என்றார்.
சபாநாயகர் எழுந்து நின்று அனைவரும் உட்காருங்கள் என்று கூறினார். சபாநாயகரின் வார்த்தையை மதித்து அண்ணன் துரைமுருகன் அமர்ந்தார்.
ஆனால், நேற்று போலவே அனுமதி வழங்க மனம் இன்றி சபா இருப்பது தெரிந்து, மற்ற கழக உறுப்பினர்கள் அனைவரும் சபா இருக்கையை நோக்கி முன்னேறி குரல் கொடுத்தோம்.
அனுமதி வழங்குவதும், வழங்காததும் எனது உரிமை என்றார் சபாநாயகர். “ எதையுமே அனுமதிக்க முடியாது என்று நீங்கள் சொல்வீர்கள், அதை ஒப்புக் கொள்ள முடியாது. இங்கே பேசுவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை. எங்கள் உரிமை காக்கப் பட வேண்டும்” என சபாநாயகரை பார்த்து நான் கூற, அவர் காதில் வாங்கவே மறுத்தார்.
சபைக் காவலர்களை அழைத்து எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். முழக்கம் எழுப்பியவாறே வெளியேறினோம்.
விவாதிக்க அனுமதித்தால், அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் “சேது சமுத்திர திட்ட்த்தை செயல்படுத்துவோம் , மணல் திட்டுகளை அகற்றுவோம்” என்று உறுதி அளித்திருந்தது வெளிப்படுத்தப்படும், குற்றச்சாட்டுகளுக்கு ஜெ-வால், பதில் அளிக்க இயலாத சூழல் ஏற்படும் என்பதே சபா-வின் மறுப்புக்கு காரணம்.
இரண்டு நாட்கள் தி.மு.க உறுப்பினர்களை காவலர்களை கொண்டு வெளியேற்றி, அதையே காரணமாகக் கூறி மூன்றாவது நாளும் கூட்ட்த்தில் கலந்துக் கொள்ளக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறார் சபா.
ஒரு பேட்டி அளித்ததை சபையின் உரிமையை பாதிக்கிறது எனக் கூறி தே.மு.தி.க உறுப்பினர்கள் மீது உரிமைப்பிரச்சினை கொண்டு வந்திருக்கிறார் சபா.
சபாநாயகர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே, தனது முழு அதிகாரத்தையும் பிரயோகப்படுத்த முயல்கிறார். அவர் என்ன செய்வார் பாவம், கைப்பாவைதானே... ஆட்சி அதிகாரம் கையிலிருக்கிற காரணத்தால், எல்லோரையும் கேவலப்படுத்தி மகிழ்கிறார்கள்.
# அதிகாரம் வானளாவி செல்லலாம். ஆனால் புவியீர்ப்பு (மக்கள்) விசையும் உண்டு...
நம் கட்சித் தலைமை மக்கள் மனதோடு நெருங்கும் அளவிற்கு போராட்டங்களை அறிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் முக்கியமான பிரச்சினைகளில் அவ்வப்பொழுது, மக்களுக்கு புரியும் கலோக்கியல் மொழியில் முக்கிய மேல்மட்ட (கலைஞர் தவிர்த்து) தலைவர் ஒருவரிடமிருந்து (தளபதி என்று வைத்துக் கொள்ளலாம்) கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வ அறிக்கைகளாவது வர வேண்டும்.
பதிலளிநீக்குஇதை சராசரி பொது மக்களின் மனநிலை சார்ந்து எழுதுகிறேன்.