பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 2 நவம்பர், 2012

சென்றோம், குரலெழுப்பினோம், வெளியேற்றப்பட்டோம்....

31.10.2012 அன்று காலை சட்டமன்றத்தில் கேள்வி நேரம் நடைபெற்றது. வழக்கம்போல் அம்மாவை வணங்கி கேள்விகள் கேட்கப்பட, அமைச்சர்களும் அம்மாவை துதித்து பதிலளித்துக் கொண்டிருந்தனர், அம்மா இல்லாமலே.


இடையில் ஜெ வருவதாக எண்ணி ஓ.பி.எஸ் எழ, அவரைப் பார்த்து மற்ற அமைச்சர்கள் எழ, அவர்களை பார்த்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்க, நொடிகள் கடந்து, நிமிட
ம் கடந்து, ஐந்து நிமிடம் ஆகியும் ஆளைக் காணோம். அனைவரும் உட்கார, ஓ.பி.எஸ்க்கு அழைப்பு வந்தது. உடன் விஸ்வநாதன் மற்றும் முனுசாமி சென்று வந்தனர்.


பிறகு ஜெ சபைக்கு வர, முகத்தில் உக்கிரம். சூழல் தெரியாமல், டாக்டர் கிருஷ்ணசாமி விபத்துகள் நிறைய நேர்வது குறித்து கவலை தெரிவித்து புள்ளிவிவரங்களை அடுக்கி, சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பேசிக்கொண்டிருந்தார்.


போக்குவரத்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டிய கேள்வி. ஆனால் டாக்டர் பேச்சில், இடைமறித்த ஜெயலலிதா, " போக்குவரத்து துறை அமைச்சரிடத்தில் நெடுஞ்சாலைத் துறை சம்பந்தமாக கேள்வி கேட்டால் எப்படி பதிலளிக்கமுடியும் ? " என முகம் சிவக்க கேட்க, டாக்டர் பாதிலேயே உட்கார்ந்துவிட்டார்.


இப்படியாக கேள்வி நேரம் முடிந்தவுடன், அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் எழுந்து மின்சாரம் குறித்து, ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்க சபா மறுக்க, சூழ்நிலை சூடாக ஆரம்பித்தது.


சட்டமன்ற தி.மு.க துணைத் தலைவர் துரைமுருகன் பேச நேரம் கேட்க, சபா மறுக்க, நாங்கள் எல்லோரும் எழுந்து குரல் கொடுக்க ஆரம்பித்தோம். முதல்வர் பதிலளிப்பார் என்பதையே சபா திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.


எங்கள் கோரிக்கை சபையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து, தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறை நிலவரம் குறித்து, அனைத்துக் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து அதன் மீது பதில் அளிக்க வேண்டும் என்பது.


ஆனால் ஆட்சியாளர்கள் குற்றங்களை காதில் வாங்கத் தயாராக இல்லை. வாழ்த்துப்பா என்றால் மட்டும் அனைவரும் இசைக்கவேண்டும்.


சபா எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். சபைக்காவலர்கள் எங்களை இழுத்தும், தள்ளியும் வெளியேற்ற, நாங்கள் முழக்கம் எழுப்பிய படி வெளியேறினோம்.


" காணோமே, காணோமே, மின்சாரத்தை காணோமே. சொன்ன வாக்கு, என்ன ஆச்சு, மின்சாரம் தான் என்ன ஆச்சு "


# தமிழகத்தின் வீதிகளிலும் ஒலிக்கும் பொதுமக்களின் " மவுன" முழக்கமும் இதுதானே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக