பிரபலமான இடுகைகள்

சனி, 24 நவம்பர், 2012

இனி ஒரு வீரபாண்டியார் சேலத்திற்கு கிடைப்பது அரிது


அமைச்சர் வீரபாண்டியாரை சந்திக்க காத்திருந்தோம், ஒரு திருமணத்திற்கு தலைமை ஏற்க அழைப்பதற்கு. சேலம் விருந்தினர் மாளிகை. அது எப்போதும் பரபரப்பாகவே இருக்கும், மினி அமைச்சர் அலுவலகமாக. 1996-2001 ஆட்சிக் காலம்.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் அவரை சந்திக்க வருகிறார்கள். சேலம் நகரில் அழகாபுரம் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தாமதப்படுவது தொடர்பாக, அமைச்சருடன் விவாதிக்கிறார்கள்.

எந்தெந்த இடங்களில் பிரச்சினை என்று அமைச்சர் கேட்டார். வரைப்படத்தை காட்டி விளக்கினார்கள். தனியார் இடங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கியாகிவிட்டது. ஒரு கோவிலும், ஒரு பள்ளி வாசலும் இடையூறாக இருக்கின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் எனத் தயங்கினர்.

வாருங்கள் என அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார். நேராக சம்பந்தப்பட்டவர்களை சந்தித்தார். அவர்களிடம் விளக்கி நகர வளர்ச்சிக்கு உதவிடுங்கள் எனக் கேட்டு ஒத்துழைப்பை பெற்றார்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் இது போன்ற பிரச்சினைகளில் ஈடுபட தயங்குவார்கள், ஓட்டு பாதிப்பு வரும் என. இது நான் நேரடியாகக் கண்ட காட்சி.

மத்திய அரசின் Super Speciality  Hospital அமைப்பதற்கு இடம் ஒரு தடையாக இருந்தது. அரசு இடம் கிடைக்கவில்லை. சேலத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கி வளாகத்தில் காலி இடம் இருந்ததை மாவட்ட ஆட்சியர் மூலம் கண்டறிந்தார்.
அரசின் ஒரு துறைக்கு சொந்தமான இட்த்தை, இன்னொரு துறைக்கு பெறுவது மிகச் சிரமமான காரியம். கடிதம் மூலம் கேட்டால் ஆண்டுக் கணக்காக இழுத்தடிப்பார்கள்.  

கூட்டுறவுத் துறை அமைச்சர், வருவாய்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மூவரையும் அழைத்து ஒரு சந்திப்பு நடத்தினார். கோப்புகள் அங்கேயே கையெழுத்தாகின. முதல்வர் ஒப்புதலுக்கு சென்று ஒரே நாளில் இடம் தயார்.

இது வீரபாண்டியாரால் மட்டுமே செய்யக் கூடியக் காரியம். இது பகுதி வளர்ச்சியில் தனிப்பட்ட ஆர்வம் இல்லாவிட்டால் செய்யக் கூடியதல்ல. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியார் பல்கலைக் கழகம் போன்றவை வீரபாண்டியார் இல்லாவிட்டால் சேலத்திற்கு கிடைத்திருக்காது.

ஆனால் மக்கள் பார்வைக்கு இவைகளை கொண்டு சென்றதை விட, பத்திரிக்கைகள் அவரைப் பற்றி நடத்திய துர்பிரச்சாரமே அதிகம். பனையளவு நல்லவைகளை மறைத்து, தினையளவு  அல்லவைகளை பூதாகரப்படுத்தின.

இன்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்த திரண்டவர்களால் சேலம் திணறியது. அவருடைய செயல்பாடுகள் தான் அதற்குக் காரணம்.

தலைமையிடம் செல்வாக்கு மிக்கவராகவும், அதிகாரிகளை லாகவமாகக் கையாளக்கூடியவராகவும், இதனைப் பகுதி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் ஆர்வம் உள்ளவராக இருந்தால் மட்டுமே இந்த அளவிற்கு சேலம் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன.


ஆயிரம் விமர்சனங்கள் செய்யலாம். இனி ஒரு வீரபாண்டியார் சேலத்திற்கு கிடைப்பது அரிது. இத்தகைய நீண்ட வரலாற்றோடு, சக்தி வாய்ந்த தலைவராக, செயல்வீரராக ஒருவர் உருவெடுப்பது கடினம்.

# விமர்சகர்கள் வரலாற்றில் நிலைப்பதில்லை. செயல்வீரர்களே நிலைக்கிறார்கள்....

3 கருத்துகள்:

  1. உங்கள் கருத்தில் மாறுபடுகிறேன்.. இனி ஒரு வீரபாண்டியார் சேலத்துக்கு கிடைத்து விடுவார். ஆனால் தலைவர் கலைஞருக்கு ஒரு போதும் கிட்டமாட்டார் :((

    பதிலளிநீக்கு
  2. சில தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு