பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 15 அக்டோபர், 2013

தூக்கணாங் குருவி கூடுகள், பாடித் திரியும் பறவைகள் - கெடாத இயற்கை....

மலையாளப்பட்டி.

நல்லக் காரணப் பெயர். மலையை ஆள்பவர்கள் அந்தப் பட்டியில் இருக்கிறார்களா அல்லது மலை அந்தப் பட்டியை ஆள்கிறதா தெரியவில்லை. ஆனால் முப்புறமும் மலைகள் சூழ்ந்துள்ள அந்த ஊரை கண்டவுடன், அது நம் மனதை ஆளும் பட்டியாகி விடுகிறது. 

06.10.2013 அன்று இளைஞர் அணி பயிற்சி பாசறை நடைபெற்ற ஊர். பாசறை நடத்த வேண்டும் என்று சொன்ன அடுத்த நிமிடம் அண்ணன் ராசா அவர்கள் மனதில் தோன்றிய ஊர் இது தான்.


                          

பெரம்பலுரிலிருந்து தலைவாசல், ஆத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால் வேப்பந்தட்டையை தாண்டி கிருஷ்ணாபுரத்தில் இடது புறம் திரும்பி மலையாளப்பட்டி செல்ல வேண்டும். சமதரையில் செல்லும் போதே மலைகள் கண்ணில் பட ஆரம்பிக்கும்.

அந்த ஊருக்கு சென்றவுடன் உடன் வந்தவர்களுக்கு நம் பகுதியில் இப்படி ஒரு இயற்கை வளம் கொஞ்சும் ஊரா என்ற எண்ணம் தான் ஏற்பட்டது. பெரம்பலூர் பகுதியில் இருக்கும் மலைகள் மரங்கள் இல்லாமல் வறண்டு இருக்கும். ஆனால் இங்கு எங்கு திரும்பினாலும் பசுமை. மலை மீது காட்டு மரங்கள். அரசுக்கு சொந்தமான பகுதி.

மலையடிவாரத்தில் தென்னந்தோப்பு, பாக்குத் தோப்பு என விரிகிறது காட்சி. சமீபத்தில் இங்கு தான் அதிக பட்டாம்பூச்சிகளை பார்த்தேன். இயற்கை சூழல் கெடாமல் இருக்கிறது. மக்கள் வாழ்க்கை முறையும் கெடாமல் இருக்கிறது. வயல்களுக்கு நடுவே வீடு கட்டி வசிக்கிறார்கள்.

வயலில் திரியும் நாட்டுக் கோழிகள் கால்கள் நீண்டு இயற்கையாக இருக்கின்றன. அவை வசிப்பதற்கு நான்கு தூண்கள் நட்டு அவை மேல் கோழி வீடு. இது சிறு வயதில் கிராமங்களில் பார்த்தது. இங்கு தான் மிச்சம் இருக்கின்றன.

மின்சார கம்பிகளில் தூக்கணாங் குருவி கூடுகள். பாடித் திரியும் பறவைகள். மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சோளம் என விவசாயம் உயிரோடு இருக்கிறது. மலையடி வாரத்தில் முயல்கள், காட்டுப் பன்றிகள் தொந்தரவும் விவசாயிகளுக்கு உண்டு.

                             

ஆழமான கிணறுகள் வெட்டி, அதில் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்து தான் விவசாயம். ஆனாலும் உழைப்பால் விளைவிக்கிறார்கள். நல்ல உழைப்பாளிகள் இந்த மக்கள்.

பாசறைக் கூட்டம் நடைபெற்ற இடம் மூன்று புறம் மலைகள் சூழ்ந்து இயறகை எழில் பொங்கி வழியும் இடம். கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் என்றும் இந்த ஊர் நினைவில் இருக்கும். இடம் நல்ல தேர்வு.


                             

# என்றும் மலையாளப்பட்டி மலை மனதை ஆளும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக