பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நீங்க ஒரு கிலோ ஆட்டுக்கறி வேணும்னாலும் சாப்பிடுங்க...

“ நீங்க ஒரு கிலோ ஆட்டுக்கறி வேணும்னாலும் சாப்பிடுங்க, தப்பேயில்லை. அதுல இருக்கறது நல்ல கொலஸ்ட்ரால்”

இது என்ன புது கதையா இருக்கு என எண்ணியவாறு என் இடத்தை தேடினேன். அது முத்துநகர் விரைவு ரயில். எழும்பூர் ரயில் நிலையம். ரயில் புறப்பட ஓரிரு நிமிடங்கள். அவர்கள் முன்பே வந்து வசதியாக அமர்ந்து பேச்சை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒருவர் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை. அறுபதை தொட்டிருப்பார். ஆனால் தலைக்கு டை, ரிம்லெஸ் கிளாஸ் என இளமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தார். அவரது தோரணையை பார்த்தால், அரசு அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

எதிரில் இருந்தவர் வேட்டி, சட்டை அறுபத்தைந்து வயதிருக்கும். வியாபாரம் செய்பவராக தோற்றம், நடவடிக்கை. அவர் சொல்வதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். பார்க்கையிலேயே அப்பிராணியாக தோற்றம் இவருக்கு.

இவர் என் பெர்த்தில் அமர்ந்திருக்க, அவர் எதிரில். என் பெர்த்தின் இன்னொரு பகுதியில் ஒரு பெண் அமர்ந்து நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் வந்து நிற்கும் என்னை, யாரும் சட்டை செய்யவில்லை. நான் எதிரில் காலியாக இருந்த சிங்கிள் சீட்டில் அமர்ந்தேன்.

“ ஆட்டுக்கறி சாப்பிடுங்க, டால்டா மட்டும் வேண்டாம். டால்டா சமைச்ச பாத்திரத்த கழுவற சிங்க்-ல பாருங்க. அப்படியே படிஞ்சிருக்கும். கறி சமைச்ச பாத்திரத்த கழுவுற இட்த்த பாருங்க. அப்படி இருக்காது. டால்டா இங்க ப்டியற மாதிரி தான் உடம்பு உள்ள படிஞ்சிடும்.” இப்படி இந்த டாபிக் கொஞ்ச நேரம் போச்சு.

“ சார் அந்த மில்லு” அப்பாவி எடுத்துக் கொடுத்தார். “ ஆமாங்க, டாலர் விலை ஏறுனதுல நிலக்கரி விலை ஏறிடுச்சி. மில்ல ஓட்டுறது கஷ்டம். அப்பவே ஆல்டர் நேட் யோசிச்சிருக்கனும்” இது கொஞ்சம் நேரம். தாம்பரம்.

“சார் எப்பவும் டிரெயின்ல வந்திடுறீங்க, பரவாயில்லை” இவர். “ஆமா பஸ்ன்னு வச்சிக்குங்களேன். தூக்கம் கெட்டுடும். உடம்பு வலிக்கும். டிரெயின்னா ஏறுனம்மா, நீட்டா படுத்திடலாம்” அப்பாவி ஏதோ புது செய்தி கேட்பது போல பிரமித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

                    

“அந்தப் பிரச்சினையை ஈசியா முடிச்சிட்டீங்க” “அந்த டி.ஐ.ஜிக்கிட்ட போனேன். அவர் பி.ஏ கிட்ட அந்த எஸ்.பிய புடின்னாரு. ஒரே நிமிஷம் எஸ்.பி லைனுக்கு வந்துட்டாருல்ல. அவ்ளோ தான், பிரச்சினை ஓவர்” அவர் காதில் கிசுகிசுக்க, அப்பாவி “குணா” கமல் போல் பரவச நிலைக்கே போய் விட்டார் இவர். செங்கல்பட்டு.

நான் இன்னும் சிங்கிள் சீட்டில் தான். கையில் எடுத்த புத்தகத்தையும் படிக்க முடியாமல் பேச்சு பல டாபிக்குகளை தாண்டி என் காதுக்குள் நீண்டது. காலையும் நீட்ட முடியவில்லை, அங்கு வியாபாரியின் உரச்சாக்கு பை அமைதியாக நின்று கொண்டிருந்தது. நானும் அதைப் போல் அமைதியாக.

“சொந்தமாக ரயில் வைத்திருக்கும் தொழிலதிபர், ராஜீவ் காந்திக்கு நேரடியாக ஃபோன் செய்த எம்.பி, தினம் ஒரு மணி நேர வாக்கிங், மெடிக்கல் காலேஜில் படிக்கும் மகன், அவருக்கு நாலு ஸ்டேட் காலேஜோடு இருக்கும் நெட்வொர்க, எக்மோர் சிங்கப்பூர் லாட்ஜின் திறப்பு விழா அன்று முதல் கஸ்டமராக தங்கி இப்போதும் தங்குவது ” என பேச்சு பரந்து விரிந்துக் கொண்டிருந்தது.

இடையில் டி.டி.ஆர் வந்து பணி முடித்துப் போனார். இருவரும் சாப்பிட்டார்கள். ஃபோன் பேசினார்கள். ஆனால் அவர் பேச்சை தொடர்ந்தார். இவர் மந்திரித்து விட்ட ஆடாய் தலையாட்டிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு தூக்கம் வந்து எனக்கு இடம் விட்டார்கள். விழுப்புரம்.



படுத்த பிறகும் அப்பாவி, “ஆனாலும் நீங்க உடம்ப மெயிண்டெயின் பண்றீங்க” என ஆரம்பிக்க, நான் தலை வரை போர்வையை இழுத்து மூடினேன்.

அப்பாவிகள் கிடைத்தால் எல்லோரும் இப்படித் தான் ஆகிவிடுகிறோமோ....

# எல்ல்ல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக