பிரபலமான இடுகைகள்

புதன், 30 அக்டோபர், 2013

கரண்டியால தேய்ச்சா, மாவு கரண்டியோடவே ஒட்டிக்கிட்டு வருது....

வீட்டில் ஒரு நாள்....

"எங்க கஷ்டம் உங்களுக்கு எங்க தெரியுது ?"
"ஏன். என்னாச்சி ?"
"எவ்வளவு நேரமா கூப்பிடறேன், சாப்பிட வாங்கன்னு. முடிச்சுட்டு நான் கிளம்பனும். கோதுமை தோசை ஊத்தறது எவ்வளவு கஷ்டம். அதுவும் இது உடைச்ச கோதுமை. ஊத்தி பார்த்தா தான் தெரியும்"

அப்ப தான் முடிவு செய்தேன். பெண்ணுக்கு ஆண் சமம் என்பதை நிருபிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது, விடக்கூடாது என.

"இப்போ பசிக்கல. பிரட் சாப்பிட்டுகிறேன்" சமாளித்தேன். பணிக்கு கிளம்பினார்.

களத்தில் இறங்கினேன். சமையலறைதாங்க....

மாவே பயமுறுத்தியது. அரிசி மாவு நல்லா திக்கா இருக்கும். இதுல தண்ணி மேல நிக்குது, கீழ மாவு செட்டிலாயிடுச்சி. வேற வழியில்லை, பின் வாங்கக் கூடாது.

முதல் தோசை. ஊத்தும் போது ஒண்ணும் தெரியல. ஊத்தி முடிச்சுட்டு, கரண்டியால தேய்ச்சா, மாவு கரண்டியோடவே ஒட்டிக்கிட்டு வருது. தடுமாறி ஒட்டு போட்டு ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்தேன்.

திருப்பி போடும் போது தான் நிலவரம் தெரிந்தது. ஏழு,எட்டு துண்டாக ஆனது தோசை. பொறுமையாக ஒவ்வொரு துண்டாக திருப்பி போட்டேன். வேகற மாதிரி தெரியல. எண்ணெயை காட்டினேன். வேக ஆரம்பித்தது.

ஒவ்வொரு துண்டும் சில்லி சிக்கன் கணக்காய் மின்னியது, எண்ணெயின் புண்ணியத்தில். பசி நெருக்கியது. அடுத்த தோசையை கஷ்டப்பட்டு ஊத்திட்டு, பக்கத்திலிருந்த சாம்பாரை தோசை துண்டுகளில் ஊற்றப் போனேன். ஆகா, இது மாவு இல்ல.

அப்புறம் அடுத்தப் பாத்திரத்த பார்த்து சாம்பார கண்டுபிடிச்சி, தோசை துண்டுகளின் தலையில் ஊற்றி ஊற வச்சேன். இதே போல ஒரு வழியா இரண்டு தோசைய சுட்டுகிட்டு சமையற்கட்டிலிருந்து வெளியேறினேன். உண்மை, தான். கஷ்டம் தான் ஒத்துக்கனும்.

ஆனா கஷ்டத்திலும் ஒரு வேல நடந்திருக்கு. ஆமாங்க, எல்லாத்தையும் டேலி பண்ணி என்ன தோசை சுட்டிருக்கேன்னு கண்டுபிடிங்க.

"சாம்பார் ஃபிரைடு உடைச்ச கோதுமை தோசை"
எவ்வளவு அருமையான கண்டுபிடிப்பு. செம டேஸ்ட். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப்களோட புதுப்புது டிஷ் கதை இது தான் போல.

# பேட்டண்ட் உரிமைல்லாம் வேண்டாம். நீங்களும் சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க !


                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக