பிரபலமான இடுகைகள்

சனி, 26 அக்டோபர், 2013

இரண்டு அரசு ஐ.டி.ஐக்கும் அனுமதி, ஒரு கார் பயணம் தான்.

தலைவர் கலைஞர் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார், தலைமைச் செயலகம் நோக்கி. அப்போது தலைவர் கலைஞர் முதல்வர். உடன் சில அமைச்சர்கள். அண்ணன் ஆ.ராசா அவர்களும் உடன்.

"ப.சிதம்பரமும், பெரிய.கருப்பனும் சிவகங்கைக்கு ஒரு ஐ.டி.ஐ கேட்டிருக்காங்க. அலுவலகத்தில நினைவு படுத்துங்க" என தன் செயலாளரிடம் சொல்கிறார் தலைவர். உடனே அண்ணன் ராசா, "அய்யா எங்களுடையதும் பின் தங்கிய மாவட்டம், எங்களுக்கும் ஐ.டி.ஐ வேண்டும்" என்கிறார்.

"ஏற்கனவே அரியலூர்ல ஒரு அரசு ஐ.டி.ஐ இருக்கேய்யா" என்கிறார் தலைவர் கலைஞர். "அய்யா, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் வருவதற்குள் அந்த பகுதி மாணவர்களை தொழிற்கல்விக்கு தயார் செய்தா தான் சரியா இருக்கும். அதே போல பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்குள் அங்கே இருக்கும் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்"

"சரி. நீ சொல்ற காரணம் சரியா தான் இருக்குய்யா. ரெண்டும் கொடுத்திடலாம்." இது தலைவர் கலைஞர். தலைமை செயலகம் அடைவதற்குள் இரண்டு ஐ.டி.ஐக்கும் அனுமதி. ஒரு கார் பயணம் தான். இரண்டு ஐ.டி.ஐ-களும் அமைவதற்கு அரசு இடம் இல்லை. தன் தாய்-தந்தையர் பெயரில் அமைந்திருக்கும் அறக்கட்டளை மூலம் தலா அய்ந்து ஏக்கர் இடம் வாங்கிக் கொடுத்தார்.

அடுத்த ஒரு சந்தர்ப்பம். தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட நேரம். அண்ணன் ராசா அரியலூருக்கு ஒரு பொறியியல் கல்லூரி கேட்டார். மற்ற அமைச்சர்கள் "ஏற்கனவே இரண்டு ஐ.டி.ஐ, ஒரு கலைக்கல்லூரி(பெரம்பலூர்), இது வேறயா ?" எனக் கிண்டலடித்தனர்.

"நீங்க சும்மா தர வேண்டாம். 20 ஏக்கர் இடமும், 5 கோடி ரூபாய் பணமும் நிதியாகப் பெற்று தருகிறேன்" என சொல்ல, பொறியியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. 20 ஏக்கர் இடமும், நிதியும் வழங்கினார். அரியலூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டு விட்டது.

அண்ணன் ராசா அவர்கள் ஒரு முறை துறையூர் அருகே மிகப் பெரிய விபத்தை சந்தித்தார். திருச்சியில் முதல் உதவி முடித்து, தனி ஹெலிக்காப்டரில் சென்னை அழைத்து வரப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் சிகிச்சைப் பெற்று நலமடைந்தார்.

இது குறித்து ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, "என்னை நீங்கள் எல்லாம் கவனித்துக் கொண்டதால் பிழைத்து வந்தேன். ஆனால் எங்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இருக்கிற ஏழை மக்கள் பாதிக்கப்பட்டால், தஞ்சையோ, திருச்சியோ சென்று தான் சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது."

"ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை இரண்டு மாவட்டத்திற்கும் சேர்த்து கொடுத்தால், அரியலூர்-பெரம்பலூர் இடையே அமைத்துக் கொள்வோம். நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும். எங்கள் மாவட்டத்து கிராமப்புற ஏழை மக்கள் பயன் பெறுவார்கள்" என சொல்ல மருத்துவக் கல்லூரி sanctioned. 

இப்படி இடம், பொருள் அறிந்து அண்ணன் ஆ.ராசா அவர்கள் முயற்சி எடுத்ததனால் தான் எங்கள் மாவட்டத்தின் வளர்ச்சியே. இன்று அண்ணனின் பிறந்தநாள்.

# வாழ்க அண்ணன், எங்கள் மாவட்டங்களை இன்னும் முன்னேற்ற !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக