பிரபலமான இடுகைகள்

திங்கள், 14 அக்டோபர், 2013

கண்ணுக்கு தெரியாத சரஸ்வதிக்கு பூஜை செய்வதை விட.....

அமெரிக்க அதிபர் ஒபாமா தான் உலகின் உச்சபட்ச விருந்தினராக இருக்க முடியும். அதிகாரத்தில் இல்லாமல் அதிகாரத்தின் பிரதிநிதியாக இன்றும் பார்க்கப்படுபவர் இங்கிலாந்து ராணி எலிசபெத். உலகின் பெரும்பான்மையோரால் அறியப்பட்ட தொழிலதிபர் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸாக இருப்பார். உலகின் அதிக புகழ் வாய்ந்த நடிகராக டாம் க்ரூய்ஸ் இருப்பார்.

இந்த வரிசை அதிகாரம் வாய்ந்தவர்கள், ராஜ குடும்பம், தொழிலதிபர்கள், நடிகர்கள், தர்மம் செய்பவர்களுக்கு என இருக்கும். இது எதுவும் இல்லாமல் ஒருவர் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஒபாமாவாலேயே விருந்தினராக அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.

                           Malala Yousafzai: President Barack Obama, First Lady Michelle Obama, and their daughter Malia meet with Malala Yousafzai, the young Pakistani schoolgirl who was shot in the head by the Taliban a year ago, in the Oval Office: Malala Yousafzai meets the Obamas at the White House


                      

"டைம்ஸ்" பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்றார். இங்கிலாந்து ராணியால் உபசரிக்கப்பட்டார். அய். நா.சபையில் உரையாற்றினார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு கடைசி நிமிடத்தில் கிடைக்கவில்லை.


                         


இத்தனையும் 16 வயதில். ஆனால் அதற்கான விலை பெரிது. 

அவர் மலாலா. பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் மாநிலத்தை சேர்ந்தவர். ஸ்வாட் ஒரு கால கட்டத்தில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளான தலிபான்கள் கையில் இருந்தது. அப்போது பெண்கள் படிக்கக்கூடாது என அவர்கள் கட்டளைப் பிறப்பித்தனர். அது மலாலாவின் மனதை பாதித்தது. மலாலா பி.பி.சிக்கு ஒரு கட்டுரை எழுதினார், தலிபான் ஆதிக்கம் தம் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் பெண் கல்வி குறித்தும். அது 2009, மலாலாவுக்கு 11 வயது.

நியுயார்க் டைம்ஸ் மலாலா குறித்து ஒரு குறும்படம் எடுத்தது. பாகிஸ்தானில் மெல்ல பிரபலமானார் மலாலா. இது தலிபான்களை எரிச்சலூட்டியது. ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் ராணுவம் ஸ்வாட் பகுதியை தன் கைக்கு கொண்டு வந்திருந்தது. மலாலாவின் பேட்டிகள் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெற்று வந்தது.

பதினைந்தாவது பிறந்தநாள் கொண்டாடி மூன்று மாதம் ஆகியிருந்தது. அப்போதெல்லாம் அவருக்கும் அவர் தந்தைக்கும் தலிபான்களிடமிருந்து எச்சரிக்கை வந்துக் கொண்டிருந்த நேரம். எப்போது வேண்டுமானாலும் சுடப்படலாம் என உடன் இருந்தோரே எச்சரித்து வந்தனர். ஆனால் தலிபான்கள் அது வரை பெண்களை தாக்கியதில்லை, தந்தை தாக்கப்படலாம் என்பது எண்ணம்.

2012 அக்டோபர் 9. மலாலா தேர்வு முடித்து நண்பகல் பள்ளியில் இருந்து வேன் ஏறுகிறார். வேன் ராணுவ செக் போஸ்டை தாண்டுகிறது. தாடி வைத்த ஒரு இளைஞன் ரோட்டின் குறுக்கே வந்து வேனை கைநீட்டி நிறுத்த சொல்கிறான். நிற்கிறது. டிரைவர் அருகில் அவன் வந்து பேசும் போது இன்னொரு இளைஞன் வேனின் பின்புறம் வருகிறான்.

"யார் மலாலா ?". சக மாணவிகள் யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால் அனைவரும் பயத்துடன் மலாலா முகத்தை பார்க்கின்றனர். வேனில் முகத்தை மூடாமல் இருக்கும் ஒரே பெண் மலாலா. உணர்ந்து கொள்கிறான், கேள்வி கேட்டவன். கைத்துப்பாக்கி உயர்கிறது. இடது கண்ணில் குண்டு பாய்கிறது. அடுத்து இடது தோள்பட்டை. உடன் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மீதும் குண்டுகள் பாய்கின்றன.

                           

பெஷாவார் ராணுவ மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு இங்கிலாந்து பர்மிங்காம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தலை எலும்பு முறிந்து மூளையில் ஏற்பட்ட அதிவால் வீங்கிவிட்டது. ஒரு முக நரம்பில் ஏற்பட்ட பாதிப்பில் இனி கண்களை திறந்து மூட முடியுமா, மூக்கை அசைக்க முடியுமா, புருவத்தை ஏற்ற முடியுமா, புன்னகைக்க முடியுமா என்ற நிலை எழுந்தது.

எல்லாவற்றையும் தாண்டி வந்தார் மலாலா. லண்டனிலேயே படிக்கிறார். பெண் கல்விக்கான குரலை ஓங்கி ஒலிக்கிறார். தலிபான்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது.

இன்னொருபுறம் பாகிஸ்தானில் மலாலா சி.அய்.ஏ-வின் ஏஜெண்ட் என்ற பிரச்சாரமும் நடக்கிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் சித்தரிக்கப்பட்டது, பாகிஸ்தானுக்கு எதிராகாவும், இஸ்லாமிய பழமைவாதத்திற்கு எதிராகவும் ஊடகங்கள் கட்டமைக்கும் பிம்பம் என்ற குரலும் எழுகிறது.

மலாலாவின் சமீப குரல் "நான் பாகிஸ்தானின் பிரதமராவேன். அதிக நிதியை கல்விக்கு ஒதுக்குவேன். என் மொத்த தேசத்திற்கும் பணிபுரியும் டாக்டராவேன். எல்லா குழந்தைகளும் கல்வி பெற, பள்ளி செல்ல, கல்விதரத்தை உயர்த்த உதவுவேன்".

எதுவாக இருந்தாலும் கல்வியின் தேவையை சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்கும் குரல் மலாலா, உயிருக்கான அச்சுறுத்தல்களை மீறி. அந்தக் குரல் எல்லா தேசத்திற்கும் தேவையானது. இந்தியாவிற்கும்....

# கண்ணுக்கு தெரியாத சரஸ்வதிக்கு பூஜை கொண்டாடும் வேளையில், வாழும் கல்வியின் அடையாளம் மலாலாவின் முழக்கத்தை நடைமுறைப்படுத்த முனைவோம் !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக