பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 1 நவம்பர், 2013

சட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை

இரண்டு நாள் "அமைதியாக" கலைந்த சபை, மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். 

வழக்கம் போல் மின்துறை, உள்ளாட்சித் துறை கடந்து மற்ற துறைகள் வந்தன. போக்குவரத்து துறை. சேந்தமங்கலம் ச.ம.உ சாந்தி (அதிருப்தி தே.மு.தி.க) எழுந்தார். "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்" என்ற உடன் எழுந்த பென்ச்தட்டல் நிற்க ஒரு நிமிடம் ஆனது. என் தொகுதிக்கு பேருந்துகள் வழங்கிய அம்மாவுக்கு நன்றி, மறுபடியும் பென்ச்தட்டல். அமைச்சர் வளர்மதி மலர்ந்த முகத்தோடு ஒவ்வொரு முறையும் தட்டலை துவக்கி வைத்து தே.மு.தி.க-வினரை பெருமிதமாக பார்ப்பார், அவர்களை வென்றது போல்.

உணவுத்துறையில் கேள்வி கேட்ட மேலூர் தொகுதி ச.ம.உ சாமி (அ.தி.மு.க) தன் தொகுதியில் சில ஊர்களில் புதிதாக ரேஷன்கடைகள் திறக்க வேண்டும் என கேட்டார். அமைச்சர் காமராஜ் எப்போதும் போல ஓரு பேப்பரை எடுத்துக் கொண்டு சட்டதிட்டங்களை வாசித்து, அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என்றார். சற்றே சூடான சாமி "இப்படியே பேசி தட்டிக் கழிக்காமல், அம்மாவின் பார்வைக்கு எடுத்து சென்று அனுமதி பெறுவீர்களா ?" என்றவர் வைத்த அடுத்த கேள்வி சபாநாயகரை பதற வைத்தது. 

" நடமாடும் ரேஷன் கடை திறக்க வாய்ப்பு இருக்கிறதா ?" இது விஜயகாந்த சொன்ன யோசனை அல்லவா. அதனால் பதறிய சபாநாயகர்,"சாமி கேள்வி கேளுங்க. அதவிட்டுட்டு பேசிகிட்டே போறீங்க" என்றவர் சாமியை உட்கார வைத்தார். பதில் சொன்ன அமைச்சர் காமராஜ் இந்த கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் கையில் இருந்த குறிப்பை படிக்க ஆரம்பித்தார். பின் "சாமியின் கோரிக்கைகள் அம்மாவின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற பதிலை கம்ப்யுட்டரைஸ்டு வாய்ஸில் சொல்லி அமர்ந்தார். சாமி முகத்தில் ஏமாற்றம்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எதை கேட்டாலும் சட்டப்படி வாய்ப்பில்லை என்று தான் சொல்வார். பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கத்தை தூக்கத்தில் கேள்வி கேட்டாலும் அசராமல் " செய்து தரப்படும்" என்று சொல்லிவிடுவார். 

மதுரை -செல்லூர் கண்மாய் தூர்வாரப்படுமா ? என்ற கேள்வியை அ.தி.மு.க போஸும், மா.கம்யூ அண்ணாதுரையும் கேட்டிருந்தனர். பதிலளித்த அமைச்சர் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரத்தை சொன்னார். மீண்டும் போஸ் அடுத்த பகுதியை தூர் வார நிதி கேட்டார். ‘ஒதுக்கப்படும் என்றார் அமைச்சர். அடுத்து எழுந்த அண்ணாதுரை புள்ளிவிபரங்களோடு "கண்மாயின் அடுத்த பகுதி பாசனத்திற்கு உதவாது. குடிநீருக்கு தான் பயன்படும். அதனை மாநகராட்சி வசம் ஒப்படைத்து நிதி ஒதுக்க வேண்டும்" எனக் கேட்டார். புள்ளிவிபரங்களை கேட்ட அமைச்சர் புரியாத மாதிரி உட்கார்ந்திருந்தவர்," மாநகராட்சி வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் " என சொல்ல சபையில் சிரிப்பலை. காரணம் இந்த பதிகளுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்பதால். 

இதற்கிடையில் ஜெயலலிதா வந்துவிட்டார். கால்நடைத்துறையில் கேள்வி கேட்ட கிருஷ்ணராயபுரம் காமராஜ் (அ.தி.மு.க) "மனிதர்களை காப்பது போலவே, அம்மா, அம்மா என்றழைக்கும் கால்நடைகளையும் காக்கும் தாயே ! என் தொகுதிக்கு ஒரு கால்நடை மருத்துவமனை கொடுத்து காத்திட வேண்டும்" என இறைஞ்ச ஜெ முகத்தில் அபார சிரிப்பு. "அம்மா, அம்மா" என்று துதித்த கால்நடைத்துறை அமைச்சர் சின்னையா "அங்கிருக்கும் கால்நடைகள் எண்ணிக்கை போதாது. மருத்துவமனை அமைக்க இயலாது" என்று பதிலளித்தார்.

அடுத்து முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி "மலை சூழும் இடமெல்லாம், இலை சூழும் இடமாகும்" என்று துவங்கி ஒரே வரியை இரண்டு,இரண்டு முறையாகப் படித்து ஜெ மீது கவிச்சாரல் தூவினார். "வெற்றி மலர்களை தர இருக்கும் ஏற்காடு மலையை ஒட்டிய ஜவ்வாது மலையான என் தொகுதியில் ஒரு சர்க்கரை ஆலை அமைக்கப்படுமா ?"எனக் கேட்க, தொழில்துறை அமைச்சர் தங்கமணி "இல்லை" என்றார்.

தன் முயற்சியில் தளராத அக்ரி,"ஈரடியில் உலகளந்த இறைவன் ஈரிலையில் இமயம் ஆள படைத்திட்ட அம்மாவின் ஆட்சியில் தொழிற்துறை மூலம் முடியாவிட்டாலும், கூட்டுறவுத்துறை அல்லது தனியார் துறை மூலமாவது அமைக்க அமைச்சர் முன்வருவாரா ?"எனக் கேட்க, அதற்கும் மறுப்பு தான். பின்புறமிருந்து ஒரு குரல்,"இவ்வளவு கவிதை பாடுகிறாரே. ஆலை கேட்கிறாரா, திரும்ப அமைச்சர் பதவி கேட்கிறாரா ?" 


நடிகர் அருண்பாண்டியன் (அதிருப்தி தே.மு.தி.க) "முதலில் என் அம்மாவுக்கு (ஜெ தான்) நன்றி" என்று ஆரம்பித்தவர், இருபது செகண்ட் பேசவில்லை. தொண்டையை சரி செய்து கொண்டு மீண்டும் ஆரம்பித்தார். கலங்கினாரா, இளகினாரா என்று தெரியவில்லை. "அம்மா என் தொகுதிக்கு கல்லூரி கொடுத்து, அதை ஆறு மாதத்தில் திறந்து வைத்ததை பொலிட்டிக்கல் மிராக்கிள் என்று பலரும் சொன்னார்கள். நான் சொன்னேன், 2014 டெல்லியில் கூட இந்த மிராக்கிளை பார்ப்பீர்கள் என" என்று நிறுத்த ஜெ முகம் ரோஸ் நிறமானது, மகிழ்ச்சிப் புன்னகை.

அடுத்து கடம்பூர் ராஜூ(அ.தி.மு.க) தன் பங்கிற்கு பன்ச் வைத்தார், " இன்று கோரிக்கை வைக்கிற இடத்திலும், நாளை பாராளுமன்றத்தில் அதை நிறைவேற்றுபவராகவும் போகின்ற அம்மாவே". எல்லோரும் அம்மாவுக்கு டெல்லி விசா வாங்குவதிலேயே இன்று குறியாக இருந்தனர்.

கேள்வி நேரம் முடிந்தது. சட்டபேரவை தி.மு.கவின் துணைத் தலைவர் துரைமுருகன் அவர்கள் எழுந்து ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து பேச முனைந்தார். சபாநாயகர் "உட்காருங்க, உட்காருங்க" என்றார். ஆனால் துரைமுருகன் தொடர்ந்து பேச முயன்றார். "நீங்க கொடுத்திருக்கிற ஒரு கவன ஈர்ப்பு" என்று சபாநாயகர் ஆரம்பிக்க, தி.மு.க உறுப்பினர்கள் எழுந்து நின்றோம். "பேச வாய்ப்பு கொடுங்க" என்றோம். சபா தயங்கி, தயங்கி மைக் கொடுத்தார். 

"இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார். அதில் மினி பேருந்துகளில் அ.தி.மு.கவின் தேர்தல் சின்னமான இரட்டைஇலை வரையப்பட்டிருக்கிறது" என்று அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஆரம்பித்தவுடன், சபா பேச அனுமதி மறுத்தார். மைக் கட் செய்யப்பட்டது. 

தொடர்ந்து பேச முயன்றார், அனுமதி கிடைக்கவில்லை. தி.மு.க உறுப்பினர்கள் எழுந்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தோம். "இங்க பேசாமல், எங்கு பேசுவது ?" என்றோம். என் அருகிலிருந்த கும்பகோணம் அன்பழகன் சட்டைப்பையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து, கையில் தூக்கி பிடித்தார். நான் ஒரு புத்தகத்தின் இடையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தேன். முன்னாள் அமைச்சர் தங்கம்.தென்னரசு சட்டையின் உள்ளிருந்து அதே புகைப்படத்தை எடுத்தார். இப்படி ஒவ்வொருவராக அந்தப் புகைப்படத்தை கையில் எடுத்தனர். சபாநாயகர் முகத்தில் குழப்பம். ஒரே நேரத்தில் எல்லோரும் ஒரு புகைப்படத்தை தூக்கிக் காட்டினோம். "அரசு பேருந்தில் இலை வரையப்பட்டிருக்கும்" புகைப்படம் தான் அது.

ஜெயலலிதாவுக்கு என்ன நடக்கிறது, என்னப் படத்தை காட்டுகிறார்கள் என்று புரியாமல் ஓ.பி.எஸ்சை அழைத்து கேட்க, அவர் விளக்கினார். ஜெ முகம் நெருப்பாய் தகித்து, செந்நிறமாக மாறியது. சபாநாயகர் "உட்காருங்க, உட்காருங்க. இதை நான் அனுமதிக்க முடியாது. அது என் ஆய்வில் இருக்கிறது. அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன்" என்றார்.

" அரசு பஸ்ஸா ? அ.தி.மு.க பஸ்ஸா ?" என்று நாங்கள் கோஷம் எழுப்ப, சபாநாயகர் எழுந்து நின்றுக் கொண்டார். சபாநாயகர் எழுந்து நின்றால், உறுப்பினர்கள் உட்கார வேண்டும் என்ற மரபின்படி எங்களை உட்கார வைக்க முயன்றார். "உங்களை வெளியேற்ற வேண்டி வரும். எச்சரிக்கிறேன்" என்றார். சைடில் பார்த்தார், சமிங்ஞை கிடைத்ததும், சபைக் காவலர்களை அழைத்து எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

"அனுமதியில்லாமல் சபையில் புகைப்படத்தை காட்டுகிறீர்கள்" என்றார். "நாடே ரோட்ல இந்த காட்சிய பார்க்குது, இங்க காட்ட தான் அனுமதி வேண்டுமா ?" என்று குரல் எழுப்பினோம். காவலர்கள் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர். எங்களை நெருக்கி தள்ளினார்கள், வெளியேற்றப்பட்டோம். 

சபையின் வராண்டாவில் கோஷம் எழுப்பியவாறு நடந்தோம். சபாநாயகர் எச்சரிக்கை கொடுத்தவாறு இருந்தார். "ஆட்சி நடத்துவது கட்சியாக இருக்கலாம். ஆனால் அதற்காக ஆட்சியையே கட்சியாக மாற்ற முயற்சிக்க கூடாது. எங்களை வெளியேற்றியவர்களை மக்கள் வெளியேற்றும் காலம் வரும்" என்று காட்டமாக பேட்டியளித்தார் துரைமுருகன். பின்னாடியே புதியதமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி வந்தார். வெங்காய விலையேற்றம் குறித்து பேச வாய்ப்பு கேட்டு மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்திருக்கிறார்.

"அமைதியாக" துவங்கிய சபை "பிரேக் இல்லா ஸ்மால் பஸ்ஸாய்" தடுமாறியது....

                                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக